எஃப்ஏடிஎஃப்ஃபின் பழுப்பு நிறப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பாரதன்.)

பாகிஸ்தானில், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவத் தளங்கள் சிலவற்றையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து  செயல்படும் பயங்கரவாத முகாம்களையும் குறிவைத்து, இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதால், இந்தியா இந்த எதிர் நடவடிக்கைக்குத் தூண்டப்பட்டது. இதில், பல பாகிஸ்தான் ராணுவத் துருப்புக்களும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவு விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவைப் பெறுவதில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் மற்றும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானின் முயற்சிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர்.

இதனிடையே, எஃப்ஏடிஎஃப் எனப்படும் பயங்கரவாத நிதித் தடுப்புப் பணிக்குழு, பாரீஸில் நடைபெற்ற தனது முதன்மைக் கூட்டத்தில், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை, பாகிஸ்தானை, தனது பழுப்புநிறப் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க, ஒருமனதாக முடிவெடுத்தது. இதன்மூலம்,  பயங்கரவாதிகளும் அவர்கள் குழுக்களும் தங்கள் நாசகாரச் செயல்களுக்கு நிதி திரட்டுதல் மற்றும் பணமோசடி ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முறியடிக்க, கடுமையான, துரிதமான, திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாகிஸ்தானுக்கு மேலும் நான்கு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள், பயங்கரவாத நிதித் தடுப்புத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற கடும் எச்சரிக்கையுடன், எஃப்ஏடிஎஃப், இந்த கால அவகாச நீட்டிப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இதில் பாகிஸ்தான் தவறினால், அந்நாட்டைத் தனது கறுப்புப் பட்டியலில் இணைப்பதோடு, பாகிஸ்தானுடனான நிதி மற்றும் வர்த்தகத் தொடர்புகளும் கட்டுப்படுத்தப்படும் என்று எஃப்ஏடிஎஃப் எச்சரித்துள்ளது.

பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகளில் நிர்ணயிக்கப்பட்ட உலகத் தரத்தை எட்டத் தவறியதாக, பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் குற்றம் சாட்டியுள்ளது. விதிக்கப்பட்ட 27 அம்சங்களில், ஐந்தில் மட்டுமே பாகிஸ்தான் செயல்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத நிதித்தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் எஃப்ஏடிஎஃப் தெளிவுபடக் கூறியுள்ளது. இந்தியாவில் பல தாக்குதல்களை நிகழ்த்திவரும் லஷ்கர் ஏ தொய்பா, ஜெயிஷ் ஏ முகம்மது போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டப்படுவதை பாகிஸ்தான் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக, எஃப்ஏடிஎஃப் சுட்டிக்காட்டியுள்ளது.

எஃப்ஏடிஎஃப்ஃபின் உறுப்புநாடுகளான சீனா, மலேஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், பாகிஸ்தான் தன்னைத் திருத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததால், எஃப்ஏடிஎஃப்ஃபின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறுவதிலிருந்து பாகிஸ்தான் தப்பித்துள்ளது. எஃப்ஏடிஎஃப் விதிகளின்படி, அதன் 39 உறுப்பு நாடுகளில் ஏதேனும் மூன்று நாடுகளின் ஆதரவு இருந்தால், ஒருநாடு, கறுப்புப் பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, எஃப்ஏடிஎஃப்ஃபின் கறுப்புப் பட்டியலில் வடகொரியாவும், ஈரானும் இணைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டால், உடனடியாக பொருளாதாரத் தடைகளை சந்திப்பதோடு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர அமைப்புக்களிடமிருந்து கடன் வசதி பெறுவதும் நிறுத்தப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ள இந்த மூன்று நாடுகளும், பாகிஸ்தானுக்குக் கூடுதலான எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு ஒத்துக் கொண்டுள்ளன. எஃப்ஏடிஎஃப்ஃபின் தற்போதைய தலைவரான சீனப் பிரதிநிதி கூட, பாகிஸ்தான் பயங்கரவாத நிதித்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், 2020 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரத்தை எட்டத் தவறினால், பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி திரட்டுவதில் சம்பந்தப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், எஃப்ஏடிஎஃப் தனது பழுப்புநிறப் பட்டியலில் பாகிஸ்தானை இணைத்தது. பல சீராய்வுகளுக்குப் பின்னரும், பாகிஸ்தானைத் தொடர்ந்து அப்பட்டியலில் எஃப்ஏடிஎஃப் இருத்தி வைத்துள்ளது.

பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, பாகிஸ்தான், எஃப்ஏடிஎஃப்ஃபை நம்ப வைக்க முயற்சித்து வந்துள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி அவர்கள், பல தேசிய, சர்வதேச மேடைகளில், பாகிஸ்தானின் பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முழக்கமிட்டுள்ளார்.

பயங்கரவாத நிதித் தடுப்பு விஷயத்தில் தனது தவறான போக்கைத் திருத்திக் கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, தீவிரமான, சரிபார்க்கத்தக்க, வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாகிஸ்தானுக்கு அனைத்து வாய்ப்புக்களையும் வழங்க, இயன்ற அளவில் உலக சமுதாயம் முயற்சித்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் இதுவரை திருந்தவில்லை என்பது வருந்தத்தக்கது.

பாகிஸ்தானின் முடிவு பெறாத எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா குரல் கொடுத்து வருகிறது. அமெரிக்க உள்பட, பிற உறுப்பு நாடுகள் அனைத்தும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெயிஷ் ஏ முகம்மதுவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதன் தலைவர் மசூத் அஸர், அவ்வமைப்பின் வங்கிக் கணக்கிலிருந்து ரொக்கம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் கண்துடைப்பு நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

எஃப்ஏடிஎஃப்ஃபின் கூடுதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை உலகம் இப்போது கூர்ந்து கவனிக்கும். தனக்கு விடுக்கப்பட்ட கூடுதல் எச்சரிக்கையை அதீத கவனத்தில் கொண்டு, செயலில் இறங்குவது பாகிஸ்தானுக்கு நல்லது. இதுவே அந்நாடு, பழுப்புநிறப் பட்டியலிலிருந்து மீண்டு, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க அளிக்கப்பட்ட வாய்ப்பாகத் திகழும்.