ஐ.நா.வுக்கு வயது 74.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

 1948 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று, ஐ நா தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 50 நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக, இந்தியாவும் 1945 ஆம் ஆண்டு, சான் ஃப்ரான்சிஸ்கோவில், ஐ நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அவ்வாண்டு 24 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட, கையெழுத்திட்ட பெரும்பான்மை நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தன.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடைபெற்ற ஐ நா-வின் பொதுச்சபைக் கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அக்டோபர் 24 ஆம் தேதி  ஐ நா தினமாக அறிவிக்கப்பட்டது. அரசுகளுக்கிடையிலான சர்வதேச நிறுவனமான ஐ.நா.வுக்கு, உலக நாடுகளின் தொடர் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன், ஐ.நா.வின் குறிக்கோள்கள் மற்றும் சாதனைகளைப் பரப்புவது, ஐ.நா. தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கமாகும்.

ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுபட்டது. இந்தியா விடுதலை பெற்ற இரண்டே மாதங்களில் வெளிவந்த இந்த ஐ.நா. பொதுச் சபைத்  தீர்மானத்தின் நோக்கங்களை நிறைவேற்றத் தனது பங்களிப்பை வழங்க, இந்தியாவுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

காலனி ஆதிக்கத்தை ஒழிப்பது, நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய திட்டமிடல், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்த ஆரம்ப நெறிமுறை கட்டமைப்பு குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளுதல் ஆகியவை, கடந்த 72 ஆண்டுகளில் ஐ.நா. நிகழ்த்திய மூன்று முக்கிய சாதனைகள் ஆகும். இவை ஒவ்வொன்றிலும் இந்தியா மிகச்சிறந்த பங்காற்றியுள்ளது.

1960 டிசம்பர் மாதம், காலனித்துவ விடுதலை குறித்த தீர்மானம் ஐ நா பொதுச்சபையில் நிறைவேறுவதற்கு, சுதந்திரம் பெற்ற முதல் மிகப்பெரிய காலனித்துவ நாடான இந்தியா, முன்னின்று வழிநடத்தியது. ஐ நா –வின்  செயல்பாடுகளில் இரு பெரும் மாற்றங்களுக்கு இந்தத் தீர்மானம்  வழிவகுத்தது. புதிதாக சுதந்தரம் பெற்ற வளரும் நாடுகளால் முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் மூலம், ஐ..நா. அமைப்பானது, உறுப்புநாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்பட்டது.

அணி சேரா நாடுகள் அமைப்பின் முதல் உச்சி மாநாடு 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேடில் நிகழ்ந்தது. இந்த அமைப்பின் நிறுவன உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது, 24 லிருந்து 122 ஆக வளர்ந்துள்ளது. பனிப்போர் தீவிரமாக நிலவிய கால கட்டத்தில், இரண்டு மாபெரும் ராணுவக் கூட்டமைப்புக்களுக்கு இடையே உலகம் பிளவுபட்டிருந்த வேளையில்,   அணிசேரா அமைப்பின் மூலம், புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகள், சர்வதேச உறவுகளில் தங்கள் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் நிமிர்ந்து நிற்பது சாத்தியமாயிற்று. இன்றைய காலகட்டத்திலும் கூட, ஐ.நா. வின் துவக்கநிலைக் கொள்கைகளுக்கு சவால் விடும் நிலையில், மாபெரும் உலக சக்திகளுக்கிடையே உலக நாடுகள் அணிசேரும் நிலை தொடர்ந்தாலும், அணிசேர அமைப்பு இறையாண்மை மிக்க நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நம்பகமான அமைப்பாக விளங்குகிறது.

1964 ஆம் ஆண்டு, 77 வளரும் நாடுகள் இணைந்து, ஒரு குழுவை ஐ நா-வில் உருவாக்கியது இரண்டாவது மாற்றமாகும். இந்த ஜி -77 என்ற குழு உருவானதால், “அனைத்து மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துதல்” என்ற தனது உறுதிப்பாட்டை மறு ஆய்வு செய்ய ஐ நா நிர்ப்பந்திக்கப்பட்டது. இதன் விளைவாக, 1965 ஆம் ஆண்டு, வளர்ந்து வரும் நாடுகளுக்கான விரைவான தேசிய வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், யூஎன்டிபி எனப்படும் ஐ நா வளர்ச்சித் திட்டம் நிறுவப்பட்டது. 1970 ஆம் ஆண்டு, முதன்முதலாக இந்த அமைப்புக்குத் தலைமை தாங்கும் நாடாக, இந்தியா விளங்கியது.

வளர்ச்சி மற்றும் பருவ நிலை மாற்றம் என்ற இரட்டை நோக்கங்களைக் கொண்ட, ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான ஐ.நா. திட்டம் 2030 என்ற தீர்மானத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி அவர்கள் உட்பட, உலகத்தலைவர்கள் செப்டம்பர் 2015-ல் கைக்கொண்டனர்.  அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையுடன், நிலையான வளர்ச்சியை உறுதி செய்து, அதன் மூலம் வறுமையை ஒழிப்பது இதன் நோக்கமாகும்.

மக்களின் மீதான கொடுங்குற்றங்களை சட்டவிரோதமாக்குவதற்காக, இனப்படுகொலை மாநாடு, 1948 என்ற தீர்மானத்தை ஐ.நா. நிறைவேற்றியது. இதனை முன்மொழிந்த மூன்று உறுப்புநாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கியது.  டிசம்பர் 10, 1948 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தில், பாலின சமத்துவம் என்பதை சட்டபூர்வமான தத்துவமாக இணைப்பதில், இந்தியா முக்கியப் பங்கு வகித்தது.

அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள ஐ நா-வின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான கருப்பொருளாக, “பலதரப்புக்கான கூட்டு அர்ப்பணிப்பை உறுதிசெய்வது”  என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகள், ஒருதலைப்பட்சமாக செயல்பட முற்பட்டதால் சர்வதேச ஒத்துழைப்புக் கொள்கைக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலை எதிர்கொள்வதில், இந்தக் கருப்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஐ நா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நிகழ்த்திய உரையில், இந்த சவாலுக்கு இந்தியாவின் எதிர்வினை குறித்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ஐ நா சபைக்கும் பல்தரப்புவாதத்துக்கும் புதிய திசையும் ஆற்றலும் வழங்க, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஐ.நா தினத்தைக் குறிக்கும் வகையில், இந்தியா தனது தேசிய நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக, அனைவரையும் உள்ளடக்கிய, பல்முனை செயலுத்திக் கட்டமைப்பின் மூலம் பன்முகத்தன்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளது.