கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் இந்தியா.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளான ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பயணம் மேற்கொண்டார். முதலில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர், அந்நாட்டுடனான இந்தியாவின் தூதரக உறவுகள் துவங்கி, 70 ஆண்டுகள் நிறைவுற்றதற்கான கொண்ட்டாட்டங்களில் பங்கேற்றார். பின்னர் ஜப்பான் சென்ற குடியரசுத் தலைவர், அந்நாட்டு மன்னர் நாருஹிடோ அவர்கள், கிரைசேந்திமம் அரியணையேறிய வைபவத்தில் கலந்து கொண்டார்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிலிப்பைன்ஸ், செயலுத்தி  ரீதியிலான மதிப்பீடுகளை இந்தியாவுடன் பகிர்கிறது. இறையாண்மையில் நாடுகளின் சமநிலை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்ட உலக நியதிகள் ஆகியவற்றையும், சர்வதேச சட்டங்களையும் இருநாடுகளும் மதிக்கின்றன. ஜனநாயக மாண்புகள் மற்றும் தெற்கு-தெற்கு கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்தியா-ஃபிலிப்பைன்ஸ் உறவுகள், இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் கீழ் மேலும் உத்வேகம் பெற்றுள்ளன. குடியரசுத் தலைவரின் ஃபிலிப்பைன்ஸ் பயணத்தின்போது, கடல் சார் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியத் துறைகளான சுற்றுலா மற்றும் விண்வெளி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், மக்களுக்கு இடையிலான உறவுகள் என பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கியூஸான் நகரில், காந்தியடிகளின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார். இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு, இந்தியா – ஆசியான் செயலுத்திக் கூட்டாளித்துவம் மேலும் வலு சேர்த்துள்ளது.

மக்கள் தொகை சார்ந்த சாதகமான நிலையைப் பெற்றுள்ள இருநாடுகளும் விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளாக விளங்குகின்றன. இருநாடுகளுக்கும் இடையே, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் வலுவான மற்றும் துடிப்புமிக்க அடித்தளம் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும், ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டே அவர்களின், “உருவாக்குவோம், உருவாக்குவோம், உருவாக்குவோம்” என்ற திட்டமும், ஸ்மார்ட் நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புக்களிலும், டிஜிட்டல் வழிமுறைகளிலும் அபிரிமித வாய்ப்புக்களை இருநாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டாளர்களுக்கு,  வழங்குகின்றன.

இந்தியா –ஃபிலிப்பைன்ஸ் வர்த்தக மாநாடு மற்றும் நான்காவது ஆசியான் – இந்தியா வர்த்தக உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர், டிஜிட்டல் தொழில்துறை, புதுமைப் படைப்புக்கள், ஸ்டார்ட் அப் திட்டங்கள், சுகாதாரம், மருந்துப் பொருட்கள், வேளாண்மை ஆகிய முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புக்களை ஆராய வேண்டும் என்று கூறினார். கடந்த இரு ஆண்டுகளில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 17 சதவிகிதம் உயர்ந்து, 230 கோடி டாலர் அளவை எட்டியுள்ளது. இந்திய நிறுவனங்கள் தற்போது ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துப் பொருட்கள் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நவீனமயமாக்கல் ஆகிய துறைகளில் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்தியாவின் முக்கியத் திட்டங்களான, ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ’டிஜிட்டல் இந்தியா’, ’திறன் இந்தியா’, ‘கங்கை புனரமைப்பு’, ’ஸ்வச் பாரத் இயக்கம்’, ’ஸ்மார்ட் நகரங்கள்’, நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கும் ‘ஜல் ஜீவன் இயக்கம்’ போன்றவற்றில் பங்கு கொள்ளுமாறும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.

தமது பயணத்தின் இரண்டாவது கட்டமாக, ஜப்பான் சென்றடைந்த குடியரசுத் தலைவர், ஜப்பான் மன்னர் நாருஹீட்டோ அவர்களின் அரியணை ஏறும் வைபவத்திலும், அரசரும், அரசியாரும் அளித்த விருந்திலும், பின்னர் பிரதமர் ஷின்ஸோ அபே அவர்கள் அளித்த அரசு விருந்திலும் கலந்து கொண்டார். இருநாட்டு நாகரீகத் தொடர்புகளைப் பறைசாற்றும் விதமாக, சுகிஜி ஹோங்வானி பௌத்த கோயிலுக்கு, குடிரசுத் தலைவர் விஜயம் செய்தார். டோக்கியோவில் அரசர் மேய்ஜி மற்றும் அரசியார் ஸோகின் ஆகியோரின் நினைவாக எழுப்பப்பட்ட மேய்ஜி ஆலயத்திற்கும் அவர் விஜயம் செய்தார்.

காகேகாவா நகரில், சைனோ சோட்டோ ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். ஜனநாயக மாண்புகள், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பொதுவான மதிப்பீடுகளைக் கொண்டுள்ள இவ்விரு நாடுகளும், செயலுத்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, பரஸ்பர நலன் சார்ந்த வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டு, கூட்டாளித்துவத்தை நீட்டித்துள்ளன. இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜப்பான் – இந்தியா உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா – ஜப்பான் முதலாவது வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான அமைச்சர்கள்நிலைப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை, இருநாடுகளுக்கும் இடையே, துணை அமைச்சர்கள் நிலையிலேயே இந்த இரு அமைச்சகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கு அச்சாரமாக, தென் கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் விளங்குவதால், இப்பகுதியில் செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்த, மூத்த தலைவர்கள் நிலையிலான தொடர்புகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இக்குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பயணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் செயலுத்தி ரீதியிலான கூட்டுறவுகள் வழங்கும் சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தோ பசிஃபிக் பிராந்தியம் விடுக்கும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்.