ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகளில் உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் இந்தியா.

(கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் -ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

கிழக்காசிய உச்சிமாநாடு, ஆசியான் உச்சிமாநாடு மற்றும் அவற்றுடன் இணைந்த மற்ற சந்திப்புகள், நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. இதற்கு முன்பாக, ஆர்.சி.இ.பி எனப்படும் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டாளித்துவத்தின் செயலாக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தெளிவான செயல்முறைகளுடன், 2020 ஜுன் மாதம், இந்த ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திட இது வழிவகுக்கும். அடுத்த மாத துவக்கத்தில், பாங்காக்கில் நடக்கவிருக்கும் கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் பிற சந்திப்புகளில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கலந்து கொள்வார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர்.சி.இ.பி க்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

ஆசியானின் பத்து உறுப்பினர் நாடுகளும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய ஆறு பேச்சுவார்த்தைக் கூட்டாளி நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகள், 2012 ஆம் ஆண்டு நவம்பரில் துவங்கின. கடந்த ஏழு ஆண்டுகளில், ஆசியானின் உந்துதலோடு, ஆசியாவின் முக்கிய நாடுகளை ஈடுபடுத்தி, பலதரப்பு பேச்சுவார்த்தைகள் பல நடந்துள்ளன.

இந்த மிகப்பெரிய பிராந்திய வணிக கூட்டமைப்பின் சமீபத்திய சந்திப்பு இந்த வாரம் பேங்காக்கில் நிறைவடைந்தது. 80 சதவிகிதத்தை விட அதிக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து விட்டன. மொத்தமிருந்த 225-ல் 185 ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன எனத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தமும், சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீடுகள் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் ஒன்றுக்குத் தீர்வுகளை அளிக்கும்.

ஆசியான் நாடுகளையும் இந்தியா உட்பட அவற்றின் கூட்டாளி நாடுகளையும் ஈடுபடுத்தி, பிராந்தியப் பொருளாதாரப் பேச்சுவர்த்தைகளை நடத்தும் ஒரு முக்கியத் தளமாக ஆர்.சி.இ.பி உயர்ந்துள்ளது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில், ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வதும் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. இதன் ஒப்பந்தங்கள் முடிவாகி செயல்முறைக்கு வந்தால், நாடுகள் எளிதான, தடையற்ற வணிக முறைகளை மேற்கொள்ள இயலும். இந்த பிராந்தியத்திற்குட்பட்ட வணிக இணைப்புகளுக்கு முன்னறிந்து செயல்படும் வசதியையும் ஸ்திரத்தன்மையையும் இது அளிக்கும்.

எனினும், ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகளின் திருப்தியான நிறைவிற்கான பாதையில் பல நுட்பமான சவால்களும் நிறைந்துள்ளன. சந்தை அணுகல் மற்றும் பாதுகாக்கப்பட்ட சரக்குகள் ஆகியவை, நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடு ஏற்படுத்தும் முக்கிய விஷயங்கள் ஆகும். ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படும் முன்னர், முக்கியமான எட்டு விவகாரங்களில் அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டன. விவகாரத் தீர்வு முறைகள், ஈ-பொருளாதாரம், பிறப்பிடம் குறித்த விதிகள் ஆகியவை, இந்தியாவைப் பொறுத்தவரை, கவலைக்குரிய முக்கிய விஷயங்களாக உருவெடுத்துள்ளன.

பேங்காக்கில் நடந்த அமைச்சர்கள் மட்ட சந்திப்பில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். எனினும், தீர்க்கப்பட வேண்டிய பல விவகாரங்கள் தீர்க்கபடாமலேயே இருந்ததால், இந்த சந்திப்பால் தனது இலக்கை அடைய முடியவில்லை. ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தை சந்திப்பு தொடர்பாக, கூட்டுப் பிரகடனத்திற்கான ஒருமித்த இசைவு நாடுகளுக்கு இடையில் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள பிறநாடுகளுடன் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது. நியாயமான, விதிகளுக்குட்பட்ட பிராந்திய வர்த்தக ஏற்பாட்டின்மீது இந்தியா கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது வெளிப்படுகிறது. சீனா போன்ற நாடுகள், இந்திய சந்தைக்குள் தங்குதடையின்றி நுழையக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. ஆர்.சி.இ.பி பேச்சுவார்த்தைகள் விரைவில் இறுதி செய்யப்பட வேண்டுமென்று சீன விரும்புகிறது. அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள சீனாவுக்கு, இந்தியா போன்ற சந்தை மாற்றாக அமையும்.

சில துறைகளில், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மூலம், சீனப் பொருட்களின் அபிரிமித இறக்குமதி தடுக்கப்பட்டு வந்தது. ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்துக்குப் பிறகு அது சாத்தியமாகாது. மேலும், சீனாவுடனான வர்த்தகத்தில், இந்தியாவிற்கு 5000 கோடி டாலருக்கும் அதிகமான வணிகப் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, உயர் மட்ட ஆணையம் ஒன்றை அமைக்க சீனா முன்வந்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பால்பண்ணைகள் போன்ற துணைத் துறைகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் அதிகப் போட்டித்திறன் கொண்ட பால்பண்ணைத் தொழில்துறைகளால் பாதிக்கப்படலாம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இப்படிப்பட்ட சவால்களை நேர்த்தியாக சமாளிக்க, தரவு உள்ளூர்மயமாக்கல், பிறப்பிட விதிகள், எந்த நாடும் சரக்குத் திணிப்பை செய்யாமலிருக்க இறக்குமதிகளில் கட்டுப்பாடு கொண்டு வருவது போன்ற விஷயங்களில், இந்தியா முழு முனைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியா பரிந்துரைக்கும் பாதுகாப்பு அம்சங்களெல்லாம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படால், ஆர்.சி.இ.பி யில் இணைய இந்தியா தயாராக உள்ளது. இந்திய சமூகத்தின் நலிந்த பிரிவினர் மற்றும் பின்தங்கிய பொருளாதார நிலையில் உள்ளோர், குறிப்பாக குறு விவசாயிகள் மற்றும் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்படாமல் இருப்பதை இந்த பாதுகாப்பு அம்சங்ககள் உறுதி செய்யும். வர்த்தக அமைச்சர் கோயல் அவர்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்முறைப் படுத்தும் முன்னர், உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் நாட்டும் மக்களின்  அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சேவைகள், முதலீடுகள் என அனைத்திலும் தனது தேச நலன் பாதுகாக்கப்படுவதை இந்தியா உறுதி செய்யும் என்றும் கூறினார்.

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்தல், பிராந்திய மற்றும் பலதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டுறவு ஏற்பாடுகள் ஆகிய இரண்டிற்கும் இடையில், சரியான சமநிலையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.