பொருளாதாரத்  தொலை நோக்கை உறுதிப்படுத்தும் இந்திய – அமெரிக்க செயலுத்தி மன்றம்.

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்)

இந்திய-அமெரிக்க செயலுத்தி மன்றத்தின் இரண்டாவது கூட்டம் இருதரப்பு உறவுகளை  மேலும் ஆழப்படுத்தியுள்ளது. தமது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்,  இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார  நாடாக உருவாக்க  உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்திய – அமெரிக்க செயலுத்தி மன்றத்தின் பிரதிநிதிகளும், தனது பொருளாதாரத்தை  இரட்டிப்பாக்க  வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டின் மீது  நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

முன்னணி  நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் மற்றும் தூதர்களைக் கொண்ட இந்த மன்றம், இந்தியாவின் அடுத்த  ஐந்தாண்டுகால சாதனைகள்,  உலகின் அடுத்த 25 ஆண்டுகளின் நிலையை  நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பிரதமர் திரு நரேந்திர மோதியைச் சந்தித்த பிரதிநிதிகள், அவரது தொலைநோக்கினை ஆமோதித்தனர்.  ஜான் சேம்பெர்ஸ் அவர்கள்  இந்த மன்றத்துக்குத் தலைமை  வகித்தார். இந்தக்  குழுவில், அமெரிக்காவின் தரப்பில், பனிப்போர் காலத்தைச் சேர்ந்த பிரபல  தூதர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர், முன்னாள் அமெரிக்க உள்துறை அமைச்சர்  கோண்டலீசா ரைஸ் மற்றும் முன்னணிப் பெருநிறுவனங்களைச் சேர்ந்த 300 தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பெற்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக, இந்தியா, அமெரிக்கா இடையே உறவுகள் ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியடைந்துள்ளன.  இதனை  இந்திய வர்த்தகக்கத் துறை  அமைச்சர்  பியூஷ் கோயல் அவர்களும்  ஆமோதித்துள்ளார்.  இரு தரப்பு  உறவுகள் தற்போது மிகச்சிறந்த  நிலையில்  இருப்பதாக அவர்  தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்குள்  இரு தரப்பு வர்த்தகம் 23,800 கோடி டாலர் அளவை  எட்டும் என்று வல்லுநர்கள்  மதிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய, அமெரிக்க  தூதரக  உறவுகளில் வர்த்தக சவால்கள் மையம் கொண்டுள்ளன என்பதை  இந்தியா  நன்கு உணர்ந்துள்ளது.  தேசிய நலனையும், பரஸ்பர இசைவையும் ஒருங்கிணைக்க  இந்தியாவும்  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்கா வுடன்  ஏற்படவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பியூஷ் கோயல் அவர்கள்  மன்றத்திடம்  எடுத்துரைத்தார். இரு நாடுகளும் குறைகளைக்  களைய விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.

இந்தியா தொழில் செய்ய உகந்த நாடு என்ற நிலையை மேலும் மேம்படுத்த  எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மன்றத்திடம் எடுத்துரைத்தார். தனியார் முதலீட்டிற்கு ஏற்றம் அளித்து, பொருளாதார   வளர்ச்சியை ஊக்குவிக்க, பெருநிறுவன வரியை  இந்தியா சரியான சமையத்தில், வெகுவாகக்  குறைத்தது.  மேலும், இந்தியாவில் தொழில் முனைவோருக்கு உகந்த சூழல் நிலவுவது பற்றி நரேந்திர மோதி அவர்கள்  விரிவாக எடுத்துரைத்தார். சமீப காலங்களில், பள்ளிக்கூடங்களில் ‘அடல்’ பிரசோதனைச் சாலைகளை ஏற்படுத்தியதன் மூலம், புத்தாக்கத்திற்கு இந்தியா அமைப்பு ரீதியாக   முக்கியத்துவம் அளித்து வருகிறது.  இந்தியாவின் பலம் மூன்று விஷயங்களில் வலுவாக இருப்பதாக மோதி அவர்கள், மன்றத்திடம் எடுத்துரைத்தார். மக்களாட்சி, மக்களத்தொகை மற்றும் மக்களின் புத்திக் கூர்மை ஆகியவையே அந்த மூன்று விஷயங்களாகும் என்பதை டெமாக்ரஸி, டெமாக்ரஃபி மற்றும் திமாக் என்ற சொற்றொடரை அவர் பயன்படுத்தி விளக்கினார். இந்திய மக்களின் அறிவுத்திறன் பற்றி அமெரிக்கா  நன்கறியும். இந்தியர்களின் திறமை மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் எவ்வளவு உயரத்தை எட்டியுள்ளது என்பதற்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சமீப காலங்களில், இந்திய அமெரிக்க வியாபார உறவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.   இந்தியாவில், 100 சதவிகித அந்நிய முதலீட்டுடன், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி  மேற்கொள்ள இந்தியா வழிவகுத்துள்ளது. சீனாவுக்கு மாற்றாக உற்பத்தி மையங்களை அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் தேடி வருகின்றன என்பது உண்மை. ஒரு சில  கிழக்காசி நாடுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள  விரும்புகின்றன. இருப்பினும், ஆங்கில அறிவு, அதிகரித்து வரும் திறன் மிக்க மனித வளம் மற்றும் தொழில் செய்ய உகந்த சூழல் முதலியன இந்தியாவை முதலீட்டுக்கான சிறந்த நாடாகப் பரிமளிக்க உதவியுள்ளன.

இனிவரும் காலங்களில்  இருநாட்டு உறவுகளில் வர்த்தகம்  அடித்தளமாக இருக்கும்  என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கர் அவர்கள் சரியாகக் கூறியுள்ளார். மனித வளத்தைத் தரம் வாய்ந்ததாக உருவாக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருவது,  இந்திய அமெரிக்க வர்த்தக உறவுகளுக்கு மிகப்பெரிய சாதகமான  அம்சமாக  அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோதி அவர்கள் தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஹூஸ்டனில் உள்ள எரிசக்தி துறையின் முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை  சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மத்திய  பெட்ரோலியம்  மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்கள் இரு தரப்பு உறவுகளில் எரிசக்தியின் முக்கியத்துவத்தை முன்னெடுத்துச்  சென்றார். இந்த ஆண்டு அமெரிக்காவுடனான எரிசக்தி வர்த்தகம், 1000 கோடி டாலர் அளவைத் தாண்டும் என்று இந்திய அமெரிக்க செயலுத்தி மன்றத்திடம் தெரிவித்தார். எதிர்காலத்தில், ஆசியாவில் நிலவும் புவி சார் அரசியல் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய  இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு காண,  இந்தியா  முன்னுரிமை அளித்து வருகிறது. ஏற்கனவே இந்தியா அமெரிக்காவிலுள்ள ஷேல் எரிவாயு ஆதாரங்களைப் பயன்படுத்தியுள்ளது.

அதிபர் டிரம்ப்  நிர்வாகத்தின் மூத்த தலைவர்கள்  இந்தியா வரவுள்ள நிலையில், இந்தியத்  தலைவர்களுடன் இந்திய அமெரிக்க செயலுத்தி மன்றம் கலந்துரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் இருதரப்பு உறவில் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் ஏற்படப்போகும் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அழகுக்கு அழகு சேர்க்கும் என்பது  திண்ணம் .