பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை.

(அகில இந்திய வானொலியின் செய்தி  ஆய்வாளர் திரு கெளஷிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – சத்யா அசோகன்.)

பாகிஸ்தானினுள்ள சிறுபான்மை மதத்தினர், அங்கிருக்கும் பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய துயர நிலையில் உள்ளனர்.  நாட்டில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.  பாகிஸ்தான் உருவானபோது,  இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறுபான்மையினர் எண்ணிக்கை, நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 28 சதவிகிதம் இருந்தது.  அப்போதிருந்த கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் ஜனத்தொகை 22 சதவிகிதமாக இருந்தது.  இன்றோ,  பாகிஸ்தானில் மொத்த சிறுபான்மையினர் 4 சதவிகிதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்..

பாகிஸ்தானை ஸ்தாபித்த முகமது அலி ஜின்னா, மதச்சார்பற்ற நாடாக பாகிஸ்தான் இருக்க வேண்டும் என நினத்தார்.  ஆனால் அவர் இருந்த காலத்திலேயே அடிப்படைவாதிகள், நாடு மத அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஸியா உல் ஹக் அதிபராக இருந்த போது, 1980 களில் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது.

பாகிஸ்தானிலுள்ள மத சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. பழமையான சட்டங்களும்,  அற்பமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படும் நிலைகளும் அங்குள்ள சிறுபான்மை மதத்தினரை மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயந்த வண்ணம் வாழ வைத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளும்,  மத அடிப்படையில்  சிறுபான்மையினர் பாகுபடுத்தப்படுவது குறித்தும் அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.  நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துமாறும், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரத்தை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலர் (பொறுப்பு) அலைஸ் ஜி வெல்ஸ் அவர்கள், ஆசியா, பசிபிக் பகுதிகளுக்கான துணைக்குழுவின் அறிக்கையில், சர்வதேச செலாவணி நிதியத்தின் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார மேலாண்மைக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு,  ஜனநாயக அமைப்பையும், மனித உரிமைகள் நிலவரத்தையும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களாக,  பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூகத்திற்கான சுதந்திரம் சுருங்கிவருகிறது. ஊடகங்களின் மீது அழுத்தம், சிவில் சமூகத்தின் மீது மிரட்டல்கள், துன்புறுத்தல், நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கையின் கீழ் அச்சுறுத்தல்கள் ஆகியவை அதிகரித்துள்ளன.

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தான் அரசிடம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவதாக திரு வெல்ஸ் கூறியுள்ளார்.  தலைமையையும், பாதுகாப்பு ஸ்தாபனத்தை  விமர்சிக்கும் குழுக்களின் உரிமையும் இதில் அடக்கம். சர்வதேச அரசு சாரா அமைப்புகள்  பாகிஸ்தானில் பதிவு செய்து கொள்வதில் சிக்கலான பதிவுக் கொள்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாகிஸ்தான் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முக்கியப் பணிகளை மேற்கொள்ள விழையும் நற்பெயர் பெற்ற, உலகறிந்த அமைப்புகளின் பணித்திறனுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் விதமாக இந்த பதிவுக் கொள்கை விளங்குவது குறித்து, சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது.

மாகாண மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள், பாதிக்கப்படுபவர்கள்,  அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் ,  ஆர்வலர்கள் என அனைவருடனும்  அமெரிக்க உள்துறை அமைப்பானது தொடர்ந்து தொடர்பிலிருந்து கொண்டு, பாகிஸ்தானிய மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாடுபடுபவர்களை ஆதரிக்குமாறு கேட்டுகொண்டு வருவதாக அமெரிக்க உள்துறை உதவி செயலர் (பொறுப்பு) கூறியுள்ளார்.

மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானிய சிறுபான்மையினர் பாகுபடுத்தப்படுவது, அவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்க்கப்படுவது ஆகியவை குறித்து வரும் அறிக்கைகளினால் அமெரிக்க அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.  பல சந்தர்ப்பங்களில் இந்த அத்துமீறல்களும், துன்புறுத்தல்களும் அரசுக்கு சம்பந்தமில்லாதவர்களால் நிகழ்த்தப்படுகிறது.  லகஷர்-ஈ-ஜாங்வி, தெஹ்ரீக்-ஈ-தாலிபன் பாகிஸ்தான் போன்ற அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுபடுத்த பாகிஸ்தான் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், மத நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை விடுவித்து,  பாகிஸ்தானிலிருந்து பத்திரமாக அவர் வெளியேற வழி வகுத்த தனது அக்டோபர் 2018 தீர்ப்பை, ஜனவரி 2019-ல் சரியென மீண்டும் கூறி முக்கியமான ஒரு முடிவை எடுத்தது.

நீதிமன்றத் தீர்ப்பானது, மாற்று மதத்தினருடன் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், மத சிறுபான்மையினரின் உரிமைகளைக் கட்டுப்படுத்த கூடாது என்றும், இவை இரண்டும் பாகிஸ்தானின் சமய சுதந்திரம் மேம்படுவதற்கு மிகவும் முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள அடிப்படைவாத அமைப்புகள் இந்தத் தீர்ப்பை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளன.  இம்ரான் கான் அரசானது,  நீதிமன்றத்தின் முடிவை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பானது, பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இருப்பினும் பாகிஸ்தானின் கொள்கைகளும், சட்டங்களும்  தொடர்ந்து ஷியாக்கள், அஹமதியாக்கள் போன்ற சிறுபான்மையினக் குழுவினரிடம்  பாகுபாடுகள் காட்டுவதாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன.  தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவரும் மத நிந்தனை, தெய்வ நிந்தனை சட்டங்களால்,  பல பாகிஸ்தானியர்கள் சிறையிலே ஆயுள் தண்டனையில் வாடுவதும், மரண தண்டனை பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. தவிர, மத நிந்தனைக் குற்றம் சாட்டி, அவர்கள் கும்பல்களால் தாக்காப்படுவதும், வன்முறைக்கு ஆளாவதும் கவலையளிப்பதாக உள்ளது.

இவையனைத்தையும் கவனத்தில் எடுத்துதான் அமெரிக்க உள்துறை செயலர் மைக் போம்பியோ பாகிஸ்தானை அமெரிக்க சர்வதேச சமய சுதந்திர சட்டம் 2018-ன் கீழ் மத விஷயத்தில் கவலையளிக்கும் நாடு என்று முத்திரை குத்தியுள்ளார்.