பதினெட்டாவது அணிசேரா நாடுகள் கூட்டம்.

 (அரசியல் விமரிசகர் எம். கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

அணிசேரா நாடுகள் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக, அஸர்பெய்ஜானில் உள்ள அழகிய கடற்கரைத் தலைநகரான பாகுவில், அணிசேரா நாடுகளின் பதினெட்டாவது இருநாள் கூட்டம் நடந்து முடிந்தது. அணிசேரா இயக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னதாக துவக்கப்பட்ட நாள் முதற்கொண்டே, மேற்கத்தியா நாடுகள் இந்த இயக்கம் அதிக நாட்கள் தாங்காது என்று கூறி வந்தன. ஆனால், மேற்கத்திய நாடுகளின் இந்தக் கணிப்பு தவறானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிவேக மாற்றங்களைச் சந்தித்து வரும் இன்றைய உலகில், அணிசேரா நாடுகள் இயக்கம் இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக, 2011 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தில் உறுப்புநாடாகச் சேர்ந்த அஸர்பெய்ஜானில், இவ்வியக்கத்தின் இருநாள் கூட்டம் நடந்து முடிந்ததுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் ஒருமித்த குரலை ஒலிக்கச் செய்ய, சிறந்த மேடையாக அணிசேரா நாடுகள் இயக்கம் திகழ்கிறது.

அணிசேரா நாடுகள் இயக்கத்தை நிறுவிய நாடுகளுள் ஒன்றான இந்தியா, இவ்வியக்கத்தை முன்னெடுத்துச் செல்லுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அணிசேரா நாடுகள் இயக்கத்தின் கொள்கைகளையும் இலக்குகளையும் எட்டுவதற்கு இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாடு நன்கு அறியப்பட்டதே என்றும், அதை மீண்டும் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் கூறினார்.

எதிர்பார்த்தபடியே, அணிசேரா நாடுகள் இயக்கம் அளிக்கும் மேடையை, தனது வழக்கமான காஷ்மீர் குறித்த பல்லவியைப் பாடுவதற்குப் பயன்படுத்த, பாகிஸ்தான் தயங்கவில்லை. பாகிஸ்தான் அதிபர் ஆரீஃப் ஆல்வியின் ஆக்ரோஷமான இந்தியா எதிர்ப்பு உரைக்குப் பதிலளிக்கையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையம் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த காஷ்மீர் பல்லவியைப் பாடும் கொள்கையை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலைப் பாகிஸ்தான் கைவிட்டால், அது அந்நாட்டுக்கு மட்டுமல்லாது உலகுக்கே பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மரபுகள் வலியுறுத்தும் கொள்கைகளைப் பின்பற்றி, பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் முறியடிக்கும் முயற்சிகள் மேற்கொள்வது என்ற உறுதிப்பாட்டை அணிசேரா நாடுகளின் பிரகடனம் வெளியிட்டது. பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பட்டை இது பிரதிபலிப்பதாக உள்ளது. பனிப்போர் காலத்தில், மாறுபட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் உலகம் இரு அணிகளுக்கிடையே பிளவுபட்டிருந்த சூழலில் அணிசேரா இயக்கம் உருவானது. அப்போதிருந்த சூழலைத் தாண்டி, தற்சமயம் உலகம் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. மாறுபட்ட அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணிசேரா இயக்கமும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அதன்படி, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறு, தன்னைத் தளர்த்திக் கொண்டாலும், அணிசேரா இயக்கம், ஐ.நா. அல்லாத மிகப்பெரிய நாடுகளின் கூட்டமைப்பாகத் திகழ்கிறது. 120 உறுப்புநாடுகளைக் கொண்ட இவ்வமைப்பு, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையின் பிரதிநிதியாக விளங்குகிறது.

தன்னைத் தனிப்பட்ட வழியில் செல்லும் அமைப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, தொலை நோக்குடன், ஐ.நா. அமைப்பைச் சார்ந்தே பங்களிக்கும் விதமாக, அணிசேரா இயக்கத்தின் உச்சிமாநாடு முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது. பாகு பிரகடனத்தில், பல்தரப்பு வர்த்தக நிலையை ஊக்குவிக்கவும், ஐ.நா. பொதுச்சபையை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. உலகின் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாகச் செயல்படும் அணிசேரா நாடுகளின் தீர்மானங்களை ஐ.நா. கருத்தில் கொண்டு, தனது சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஐ.நா. தலைமைச் செயலர் விடுத்துள்ள செய்தியில், அதிகரித்து வரும் நம்பிக்கைப் பற்றாக்குறை, உலகமயமாக்கலின்மீது மக்களின் நம்பிக்கை இழப்பு, வளர்ந்து வரும் சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக, கூட்டாகச் செயல்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். இதனால், உலகின் இரு பெரும் மக்கள் பிரதிநிதிக் குழுக்களாக விளங்கும் ஐ.நா.வும், அணிசேரா நாடுகள் இயக்கமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி தருணம் இது என்றால் அது மிகையல்ல.