பக்தாதியின் மறைவு அரபு உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்குமா?

(மேற்காசிய விவகாரங்கள் ஆய்வாளர், டாக்டர் ஃபசுர் ரஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – இராஜ்குமார் பாலா.)

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட அபு பக்கர் அல் பக்தாதியின் மறைவு குறித்த செய்தியை அடுத்து, ஈராக்கிய நகரமான மொசூலின் தெருக்களில் கொண்டாட்டங்களைக் காண முடிந்தது. ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய நாடு என்ற பொருளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை நிறுவுவதாக இந்த சர்வாதிகாரி 2014 ஆம் ஆண்டு அறிவித்தார். அதனையடுத்து அரங்கேறிய இரத்தக்களரி, கும்பல் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தெரு வன்முறைகள், சூறையாடல், ஆள்கடத்தல், கொள்ளையடித்தல் போன்ற வன்முறைகளால், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மொசூல் நகரை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கும், ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஆருயிர் சொந்தங்களை இழக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டனர்.

கடந்த காலங்களில் பலவித உருமாற்றங்களை வெளிப்படுத்திய ஐஎஸ்ஐஎஸ், ஈராக் மற்றும் சிரியாவுக்கு இடையே, பிரிட்டனுக்கு இணையான நிலப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக அல் பக்தாதி இருந்தார். சிரியா நாட்டின் நாகரீகத்தின் மீது, பல தழும்புகளை ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பதித்துள்ளது. பால்மைரா நகரத்தை அழித்ததோடு, 2017 ஆம் ஆண்டில் மொசூல் நகரில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அல் நூரி மசூதியையும் ஐஎஸ்ஐஎஸ் தகர்த்தது. அங்கு இஸ்லாமிய காலிஃபேட் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட போரும், சிரியா நாட்டுக்குள் குர்த் இனத்து மக்கள் தலைமையில் நடந்த தைரியமான போராட்டமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை முடக்கிப்போட்டன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பக்தாதியின் மறைவுச் செய்தி, பலருக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் பக்தாதி இறந்ததாக ஏற்கனவே பல முறை செய்திகள் கசிந்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களே, பக்தாதி, ஒரு நாய் மற்றும் கோழையைப் போல் கொல்லப்பட்டதாக அறிவித்ததால், இந்த மறைவுச் செய்தியை முழுவதும் நிராகரிக்கவும் இயலவில்லை. அரபு நாடுகள் பற்றிய அமெரிக்காவின் கொள்கைகள், முக்கியமாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதைச் சுற்றியே அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குடைவுப் பாதையில், அமெரிக்கப்படைகளால் மறிக்கப்பட்ட நிலையில், பக்தாதி, தான் அணித்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனைக் கொல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்று, அபு பக்கர் அல் பக்தாதியை ஒழிக்க, அமெரிக்காவின் சிறப்பு டெல்டா படை பயன்படுத்தப்பட்டது. பக்தாதி இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்போருக்கு, இரண்டரைக் கோடி டாலர் பரிசுத்தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது.

பக்தாதி இறந்ததைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய உலகளாவிய பயங்கரவாதச் சூழல் குறித்து அறிந்து கொள்ள, சர்வதேச சமூகம் ஆர்வமாக உள்ளது. ஒசாமா பின் லேடனின் மறைவுக்குப் பின்னரும் கூட, இதுபோன்ற நம்பிக்கைகளும் கவலைகளும் தெரிவிக்கப்பட்டன. எனினும் பயங்கரவாதம் குறைந்தபாடில்லை. அல் நுஸ்ரா, ஐஎஸ்ஐஎஸ் என்ற இரண்டு மிக மோசமான பயங்கரவாத அமைப்புகள், அல்காய்தா என்ற அமைப்பின் மிச்சங்களில் இருந்து உருவாகின என்பதை நினைவுகூர வேண்டும்.

அல்காய்தா வலுவிழந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பு அதிக வலுப் பெற்றது. அந்த அமைப்பின் தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பல மோசமான தாக்குதல்களை நடத்தினார்கள். பக்தாதி மற்றும் ஒசாமா ஆகியோர், பயங்கரவாதக் குழுக்களின் வெளி முகங்களாக மட்டுமே இருந்து, ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டார்களே தவிர, அவர்கள் களத்தில் இறங்கி தாக்குதல்களை நடத்தவில்லை. இன்று பல கண்டங்களில் தனது கிளைகளைப் பரப்பி விரிவடைந்த நிலையில், தங்களுக்கெனத் தனிப்பட்ட பகுதிகளில் இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் மையத் தலைமை செய்ய வேண்டிய வேலை மிகக்குறைவே. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான பல்முனைப்போர் சிறிது காலமாகவே தொடர்ந்து நடந்து வருகிறது அதில் ஓரளவு வெற்றியும் எட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் கைதானார்கள். அவர்களில் பல ஐரோப்பியர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. கைதிகள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தப்படவுள்ளனர். எனினும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டவர்கள் பலர் உண்டு. அவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பல்வேறு சமூகக் குழுக்களில் பெரும் எண்ணிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் ஊடுருவியுள்ளதால், தீவிரவாதம் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, பக்தாதியின் மறைவினால் ஐஎஸ்ஐஎஸ் அழிந்து விட்டதாக முடிவு செய்ய இயலாது. ஐஎஸ்ஐஎஸ் தற்போது, தற்காலிகமாக மந்த நிலையில் இருக்கலாம். பக்தாதிக்குப்பின், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உட்பூசல்கள் ஏற்படலாம். ஆனால் அந்த வட்டாரத்தில் அரசியல் வெற்றிடமும் நிலையற்றதன்மையும் உள்ளவரை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உயிர்ப்புடன் இருக்கத்தான் செய்யும்.

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான சண்டை தொடர வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியங்களை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கற்கால சித்தந்தம் வலுப்பெற்றால், பேரழிவுகள் ஏற்படும். அரபு உலகில் தற்போதுள்ள ஸ்திரமற்ற நிலை மாறி, அரசியல் அமைப்புகளில் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும்.