இந்தியா – சவூதி அரேபியா: வர்த்தகத்தைத் தாண்டிச் செல்லும் இருதரப்பு உறவுகள்.

(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் பி ஆர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் வழங்குபவர்  –  ஆ. வெங்கடேசன்.)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இரண்டு நாள் பயணமாக, இந்த வாரம் சவூதி அரேபியாவிற்குச் சென்றார். அவரது இப்பயணம், சவூதி அரேபியா குறித்த இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், அவற்றால் விளையக்கூடிய பரஸ்பர நன்மைகளையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க ஹஜ் புனிதப் பயணம் மற்றும் எரியாற்றல் இறக்குமதி போன்றவை இருதரப்பு உறவுகளுக்கு அடிப்படையாக அமைந்து  வந்த நிலையில், கடந்த சில வருடங்களில் இருநாடுகளும் இத்தகைய பரிவர்த்தனைகளைத் தாண்டி, இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் ஈடுபட்டு வருகின்றன.

சவூதி  அரேபிய  இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த “எதிர்கால முதலீடு முன்முயற்சி ” என்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் என்பது  குறிப்பிடத்தக்கது. பாலைவனத்தில் டாவோஸ் என்றழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில், கச்சா எண்ணெய் சாராத மற்ற துறைகளான, வழக்கத்துக்கு மாற்றான எரியாற்றல், அறிவுசார் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில், சவூதி அரேபியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து வெளிப்படுத்தப்பட்டது. கச்\சா எண்ணெய் மீதான சார்புநிலையிலிருந்து விடுபட்டு, சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பட்டத்து இளவரசரின்  இம்முயற்சியும், இந்தியப் பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு எடுத்துச் செல்லும் பிரதமர் மோதி அவர்களின் விழைவும் ஒத்திசைவுடன் விளங்குகின்றன.

சவூதி அரேபியாவுடன்  வளர்ந்து  வரும்  இந்தியாவின்  ஈடுபாடுகளின்  ஒரு அங்கமாகவே பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.  2014 ஆம் வருடம் பிரதமர் மோதி அவர்கள் பதவி ஏற்றது முதல், இருநாட்டுத் தலைவர்களும் சந்திப்பது இது எட்டாவது முறையாகும். பட்டத்து இளவசருடன் பிரதமர் மோதி அவர்கள் மேற்கொண்ட ஆறாவது சந்திப்பாகும் இது. இந்த வருடத்தில் நிகழ்ந்த மூன்றாவது  சந்திப்பாகவும், ஜம்மு- காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் நிகழும் முதல் சந்திப்பாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் வருடம், சவூதி அரசர் அப்துல்லா அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, வெளியிடப்பட்ட டெல்லி பிரகடனத்தில், இருதரப்பு உறவுகளுக்கு ஊக்கம் அளித்து முன்னெடுத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்கப்பட்டது. சமீப காலம் வரை, இதில் முன்னேற்றம் மந்தமாக இருந்தது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் முதலீடு செய்ய சவூதி அரேபியா  காட்டிய ஆர்வம், உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்தில் 1500 கோடி டாலர் பங்கு முதலீடு செய்ய  முன் வந்தது ஆகியவை, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சவூதி அரேபியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அறிகுறிகளாக அமைந்துள்ளன.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோதி அவர்கள் அரசர் சல்மான் உள்பட, சவூதி அரேபியாவின் பல தலைவர்களை சந்தித்தார். 2014 ஆம் வருடம் முதல் இதுவரை மோதி அவர்கள் சவூதி அரசரை மூன்று முறை சந்தித்துள்ளார்.  இதற்கு முன்பாக, கடைசியாக, 2016 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பிரதமர் மோதி அவர்கள்  மேற்கொண்ட சவூதி அரேபியா பயணத்தின் போது சவூதி அரசருடனான சந்திப்பை நிகழ்த்தியிருந்தார்.

பிரதமர்  மோதி அவர்களின் பயணத்தின் முடிவில் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில்,   ஒரு நாட்டின் உள்விவகாரங்களில்  பிற நாடுகள் தலையிடுவதை முற்றிலும் எதிர்ப்பதில் இருநாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. தவிர, நாட்டின் இறையாண்மையின் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பதில், சர்வதேச சமுதாயத்துக்கு உள்ள பொறுப்பை நிறைவேற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. ராஜீய ரீதியாக, இந்தக் கூட்டறிக்கை ஏற்படுத்தும் தாக்கம் கண்கூடு. இந்தியா சந்தித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும், சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலும் இக்கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அவற்றுக்குத் தகுந்த பதில் நடவடிக்கைகளை எடுப்பதில் சர்வதேச சமுதாயத்துக்கு உள்ள பொறுப்பும் கவனத்தில் கொண்டுவரப்பட்டது. .

சவூதி இளவரசர் மற்றும் இந்தியப் பிரதமரின் தலைமையின் கீழ் செயலுத்திக் கூட்டாளி சபை நிறுவப்பட்டது, பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக விளங்கியது. ஆகவே, இருதரப்பு உறவுகளை மேலெடுத்துச் செல்ல இரு தலைவர்களும் தவறாமல் சந்திப்பு நடத்துவார்கள் என்பது புலனாகிறது.

எரியாற்றல், விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவம் மற்றும் மருத்துவப் பொருட்களில் ஒழுங்குமுறை  ஆகியவற்றில், 12 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  பிரதமர் மோதி அவர்கள் “ ருபே”என்ற செயலி திட்டத்தை சவூதி  அரேபியாவில் துவக்கி  வைத்தார். பாலஸ்தீனப் பிரச்சனையில் ஆதரவு அளிப்பது  போன்ற பாரம்பரிய விஷயங்களும் கூட்டறிக்கையில் இடம்  பெற்றிருந்தன. வெளியுறவு விவகாரங்களைப் பொருத்தவரை, சவூதி அரேபியாவுக்குத் தலைவலியாய் இருக்கும் ஏமன் நாட்டுப் பிரச்சனை பற்றி, இரு தலைவர்களும் விவாதித்தனர். சிரியா நாட்டு விவகாரமும் இதில் இடம் பெற்றது.

இந்தியாவின்  எரியாற்றல் உட்கட்டமைப்பில் சவூதி அரேபியாவின் முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் மோதி அவர்கள் விவரித்தார்.  அடுத்த சில வருடங்களில், இத்துறையில் 10,000 கோடி டாலர் அளவிற்கு சவூதி அரேபியா முதலீடு  செய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் இந்தப் பயணத்தின் மூலம்,  இருநாடுகளுக்கிடையே, வலுவான பொருளாதாரம் மற்றும் செயலுத்தி ஈடுபாடுகள், குறிப்பாக, பொது மற்றும் தனியார் துறைகளில் இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் வளம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றில்  ஏற்படுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அவர்களின் இப்பயணத்தினால் விளையும் பயன்கள், இருநாடுகளும் குறுகிய காலத்தில் ஒப்புக்கொள்ளப்ப்பட்ட இலக்குகளை எட்டுவதைப் பொறுத்து அமையும்.