தென் சீனக் கடல் – புதிய சர்ச்சை.

(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் ஏற்பட்ட இந்நிகழ்வால், அந்நாட்டிற்கு சீனாவுடன் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைக் கண்காணிக்க ஏதுவாக, இந்த ரோந்துக் கப்பல், குறைந்தபட்சம் நான்கு பாதுகாப்புக் கப்பல்களுடன் நிலை கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இக்கப்பல், வியட்நாமின் ஃபூ கை தீவின் தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தொலைவிலும், தெற்கு வியட்நாமின் நகரமான ஃபன் தியட்டின் கடற்கரையிலிருந்து 185 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலம், அந்நாட்டின் கடற்கரையிலிருந்து 200 நாட்டிக்கல் மைல், அதாவது, சுமார் 370 கி.மீ தூரம் வரை விரிகிறது. இந்த எல்லைக்குள், கடல்வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டிற்கு சர்வதேச மரபுகளின்படி, உரிமை உள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடும் பிற நாடுகள், அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சீனா உடனடியாக தனது ரோந்துக் கப்பலை விலக்கிக் கொள்ள வலியுறுத்த வேண்டும்.

வியட்நாமின் கடல் பாதுகாப்பிற்குச் சவால் விடும் வகையில், அதன் கடற்கரைக்கு வெகு அருகில் சீனக் கப்பல் நிலை கொண்டுள்ளது. ரோஸ்நெஃப்ட் என்ற ரஷ்ய பெட்ரோலிய நிறுவனத்தின் கூட்டாளித்துவத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேடலில் ஈடுபடும் வியட்நாமின் பணிகளுக்கு இது இடையூறாக விளங்கக் கூடும். வளங்கள் நிறைந்ததும், பரபரப்பான கப்பல் போக்குவரத்து கொண்ட பகுதியாகவும் விளங்கும் இந்த தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கோரி, பல ஆண்டுகளாக சீனாவும், வியட் நாமும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக, சில மாதங்களாக, இந்த சர்ச்சை மேலும் வலுத்துள்ளது. சீனாவில் கம்யூனிஸக் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இப்பிராந்தியத்தில், சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்படுத்த அதிபர் ஷீ ஜின்பிங் காணும் கனவுக்கு இது தூபம் போடுவது போல் அமையலாம். இதன் எதிரொலியாக, வியட்நாமின் உரிமைகளுக்குட்பட்ட பரந்த பகுதியை உள்ளடக்கிய யூ வடிவ கடல் எல்லைக்கு சீனா உரிமை கோருகிறது. இப்பகுதியில், ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் சலுகைகளை வியட்நாம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் சீனாவின் நடத்தையைக் கட்டுக்குள் வைக்க, பல வழிமுறைகளும் அமைப்பு ரீதியிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அவை இன்றும் தொடர்கின்றன. எனினும், அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை. தென் சீனக் கடலில் சச்சரவுகளுக்குத் தீர்வுகாணத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து, இப்பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வகை செய்யும் பொறுப்பு, ஆசியான் அமைப்புக்கு உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தின்போது, அதன் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. பாங்காக்கில் நடைபெறவுள்ள அடுத்த உச்சிமாநாட்டில், ஆசியான் உறுப்பு நாடுகள், ஒருமித்த குரலில், அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் சீனா இறங்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டியது அவசியம். ஆசியான் உச்சிமாநாடு 35 என்ற இந்த உச்சிமாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் தாய்லாந்து, இக்கூட்டத்தில், தென்சீனக் கடல் குறித்த பிரகடனத்தை வெளியிட முன்வர வேண்டும். சட்டங்களுக்கு உட்பட்டு, மீறத்தகாத வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க, சீனாவை வற்புறுத்துவதன் மூலமே, தனது முக்கியத்துவத்தை  ஆசியான் நிலைநிறுத்த முடியும்.

தென்சீனக் கடல் பகுதி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, யூஎன்சிஎல்ஓஎஸ் என்ற, ஐ.நா.வின் கடல்சார் சட்ட நியதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் இறுக்கம் அதிகமானால், அது சர்வதேச கடல்சார் வணிகத்தைப் பாதிக்கும் என்று இந்தியா நம்புகிறது. முக்கியத்துவம் மிக்க தென்சீனக் கடல் வழியாக, ஆண்டொன்றுக்கு 5 லட்சம் டாலர் அளவிற்கு வணிகம் நடைபெறுகிறது. சூயஸ் கால்வாயில் நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து அளவைவிட, இந்தியப் பெருங்கடலை தென்சீனக் கடலுடன் இணைக்கும் மலாக்கா ஜலசந்தி வழியாக, ஐந்து மடங்கு அதிகமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையினால், தென்சீனக் கடல் பகுதியில் உள்ள இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் செயலுத்தி உறவுகள் வலுப்பட்டுள்ளன. கிழக்காசிய உச்சிமாநாட்டில், கிழக்காசிய நாடுகளின் தலைவர்களும், ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் தென் சீனக் கடல் விவகாரத்தைத் தீவிரமாக விவாதிப்பர் என எதிர்பார்க்கலாம். சுதந்திரமான கடல் போக்குவரத்து, சர்வதேச சட்ட நியதிகளுக்குட்பட்ட கடல்வழிக் கட்டமைப்பு, அமைதியான முறைகளில் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றில் தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தும்.