ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்குக்குப் புதிய விடியல்.

(அரசியல் விமர்சகர் எம் கே டிக்கு அவர்களின் ஆங்கில உரையில் தமிழாக்கம்: இராஜ்குமார் பாலா.)

நேற்று வரை ஒரு ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அறியப்பட்டது, ஒரு வரலாற்றுப் பிழையாக விளங்கியது. ஆங்கிலேயர்களுக்கும் டோக்ரா ஆட்சியாளர் மகாராஜா குலாம் சிங்குக்கும் இடையே, 1846 ஆம் ஆண்டு கையெழுத்தான அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் விளைவாக, தெற்கு ஜம்மு வட்டாரமும், காஷ்மீர் பள்ளத்தாக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டன. புத்த மதத்தினர் அதிகம் வசித்த இமயமலையின் மேட்டுநிலப் பகுதியான, குட்டி திபேத் என்று அழைக்கப்பட்ட, லடாக் பகுதியை ஜெனரல் ஜோராவர் சிங்  கைப்பற்றியதையடுத்து, டோக்ரா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அது மாறியது. அவ்வாறு மூன்று தனிப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி உருவான ஜம்மு காஷ்மீர் மாநிலம், தற்போது, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி, இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் திருத்தி அமைக்கப்பட்டது.

லடாக் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையின் விளைவாக, மாநிலத்தின் ஒரு சிறு பகுதியாக இருந்த அப்பகுதி, ஒரு தனி யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. இமயமலையில் மேட்டு நிலப்பகுதியாக லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற லடாக் பகுதி மக்களின் கோரிக்கை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையானது.  1970 களில், லடாக் பகுதியைச் சேர்ந்த புத்த மதத் தலைவர்களில் ஒருவரான லாமா லோப்சாங் அவர்கள், மத்திய அரசின் ஆட்சியின் கீழ் ஒரு யூனியன் பிரதேசமாக லடாக் மாற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். பின்தங்கிய இந்தப் பகுதியின் மேம்பாட்டுக்கு இதுவே தீர்வு என்று லடாக் பகுதியில் வசித்த பல மக்கள் கருதினார்கள்.

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியில் இருந்த அனைவரும் இந்த தனி யூனியன் பிரதேசக் கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டதாக அப்பகுதி மக்கள் கருதினார்கள். பிரத்யேக கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தவும், அதன் முழு பொருளாதார ஆற்றலை அடையவும் லடாக் பகுதி அனுமதிக்கப்படவில்லை. எனவே, லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லே மற்றும் லடாக்கின் பிற பகுதிகளில் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் களை கட்டியதில் ஆச்சரியமில்லை.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகத் தாம் மாறியுள்ள புதிய நிலைப்பாடு, வரலாற்றுத் தேவை என்று ஜம்மு மக்கள் வரவேற்றுள்ளனர். உண்மையில், மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையே, நெருங்கிய இணக்கம் வேண்டும் என்று, 1950 களின் முற்பகுதியிலேயே ஜம்முவில் கோரிக்கை எழுந்தது. ’ஒரே அடையாளம், ஒரே தலைமை’ என்ற இயக்கத்தை, ஜம்முவை அடிப்படையாகக் கொண்ட பிரஜா பரிஷத் கட்சி முன்நடத்தியது.

எனினும், ஜம்மு காஷ்மீரை ஒரு புதிய யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஒரு சில ’சலுகை பெற்றுவந்த’ சிறிய குழுக்கள் மட்டுமே எதிர்த்தன. தாங்கள் அனுபவித்துவந்த சலுகைகளையும் அதிகார மையங்களுடனான தொடர்புகளையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக, இந்த எதிர்ப்பை அக்குழுக்கள் காட்டின.

மேம்பாட்டுக்கான நிதியை காஷ்மீர் பள்ளத்தாக்கு தற்போது முழுமையாகப் பயன்படுத்தும். நிர்வாக ரீதியாக நடந்து வந்த ஊழல் தற்போது களையெடுக்கப்படும். முக்கியமாக, பிரிவினைவாத சக்திகள், உள்ளூர் அரசியல் கட்சிகளின் ஆதரவில் அனுபவித்து வந்த பாதுகாப்பு வசதிகள் முடிவுக்கு வரும். திருத்தப்பட்ட இந்த அமைப்பினால், பெரிய அளவில் தீவிரவாதக் கொள்கைகள் பரப்பப்படுவதைத் திறம்பட அடக்க முடியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களைச் சீரழிப்பதில் கைகோர்த்துச் செயல்படும் தீவிரவாதமும், எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடக்கப்படவேண்டும்.

ஜம்மு காஷ்மீர், முன்பு போலவே ஒரு மாநிலமாக மாறுவதற்கு, வருங்காலத்தில் சாதகமான சூழல் ஏற்படும் பட்சத்தில், மத்திய அரசு அந்த  முடிவைத் திறந்த மனதுடன் ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், இந்த நடவடிக்கை, சிலர் குற்றம் சாட்டுவதுபோல், காஷ்மீரின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்காக இல்லாமல், காஷ்மீர் பள்ளதாக்கு சந்தித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை சமாளிக்கவே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதற்கான அரசின் உத்தேசமும் இதன் மூலம், புலனாகிறது. மதவாத பிரிவினைவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றின் எழுச்சியால் சந்திக்க நேர்ந்த சவால்கள் சமாளிக்கப்பட்டு, அங்கு அமைதியும் சமத்துவமும் திரும்பிய பின், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க அரசு  திறந்த மனதுடன் உள்ளதை அறிய முடிகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளான கடந்த வியாழக் கிழமையன்று, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  எழுபது ஆண்டுகளுக்கு முன்,  இந்திய யூனியனை ஒரு தனிமனிதராக உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்பதும் நினைவுகூரத்தக்கது.