பாகிஸ்தானின் வழக்கமான அரசியல்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – சத்யா அசோகன்.)

காஷ்மீர் விவகாரம் என்பது சர்வதேச சமூகத்தினரைப் பொறுத்த மட்டில் முடிந்து போனதொரு அத்தியாயம் என்னும் உண்மையை  பாகிஸ்தானால் ஏற்று கொள்ள முடியவில்லை.  இந்திய மாநிலமாக விளங்கிய ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்ட நாள் முதல்,  அது குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் பலத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்தியா, தனது நாட்டின் அரசியலமைப்பின் படிதான் செயல்பட்டது எனவும், ஜம்மு – காஷ்மீரில் மேற்கொண்ட மாறுதல்கள் அனைத்தும் இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்டே செயல்படுத்தப் பட்டுள்ளன என்ற உண்மையையும் இந்தியா வெற்றிகரமாக உலகுக்கு எடுத்துரைத்து விட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மிக அதிகமாக தனிமைப்படுத்தப் பட்டிருப்பதை உணர்ந்துள்ள நிலையில், வழக்கமாக காஷ்மீர் குறித்து அரசியல் செய்து வரும் பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், அரசும் எழுப்பும் கூச்சல் ஆர்ப்பாட்டங்கள் குறைந்திருப்பது போல் தெரிகிறது.  காஷ்மீர் விவகாரங்கள் மற்றும் கில்கிட், பால்டிஸ்தானுக்கான பாகிஸ்தானிய அமைச்சர் அலி அமீன் கந்தாபூர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை ஏவுகணைகளால் தாக்குவோம் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆக்ரோஷமாகப் பேசி வரும் பாகிஸ்தானிய அமைச்சர் காந்தாபூர், உள்ளூர் பாகிஸ்தானிய தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்தால், பாகிஸ்தான் போர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானின் எதிரி என்று கருதப்படும் என்றும், அந்த நாட்டின் மீதும் ஏவுகணைகள் ஏவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது ஆக்ரோஷமான, ஏறுமாறான பேச்சுக்குப் பெயர் போன பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீதைப் பின்பற்றும் அரசியல்வாதியாவார் காந்தபூர்.

ஆக்ஸ்போர்டில் படித்த பாகிஸ்தான் பிரதமர், உயர் பதவிகளில் இத்தகைய ஆட்களை நியமித்திருப்பது முரண்பாடு. கந்தாபூர், ரஷீத் போன்ற வெற்றுக் கூச்சலிடும் அரசியல்வாதிகளால், ‘புதிய பாகிஸ்தான்’ என்ற கனவு சுக்குநூறாகிக் கிடக்கிறது என்றால் அது மிகையல்ல.

பற்பல உள்னாட்டு  நெருக்கடிகளால் திரும்பவும் கொந்தளிப்பான காலங்களை நோக்கி பாகிஸ்தான் சென்று கொண்டிருப்பதால், மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக, இம்ரான் கான் அரசானது,  இந்திய எதிர்ப்பு உணர்வுகளை முன்னிறுத்தி நிலைமையை சமாளிக்கப்பார்க்கிறது.  கடந்த மூன்று மாதங்களாக, இத்திசையில் பாகிஸ்தான் ராஜதந்திரங்கள் பலவும் செய்து பார்த்துள்ளது. அவற்றுக்குப் பலன்தான் ஏதுமில்லை என்பது கண்கூடு.

காஷ்மீர் விவகாரம் இம்ரான்கானுக்குப் பெரும் பின்னடைவு என்பது தெளிவு.  சர்வதேச சமூகம், தற்போது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தானிய கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பதை பாகிஸ்தான் ஆய்வாளர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.  இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாகியுள்ள ஜம்மு -காஷ்மீர், லடாக்கின் வளர்ச்சிக்கு இந்தியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக்கிற்கு சர்வதேச முதலீடுகள் வருவதற்கான பெரும் வாய்ப்பிருக்கிறது. இந்த  இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் மிகப்பெரும் வளர்ச்சித் திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது. இப்பிரதேசங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இரண்டு யூனியன் பிரதேச மக்களும் பங்குதாரர்களாக்கப்படுவர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்கான வளர்ச்சி குறித்து கேட்கப்பட்டபோது, காஷ்மீர் விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் காந்தபூர் அவர்கள்,  மக்களுக்காகப் போராடுவதில் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் குறித்து கவனத்தை ஈர்க்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், மோசமடைந்து வரும் பொருளாதார நிலை மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி, பிரதமர் இம்ரான்கான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி, அரசுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் இஸ்லாமாபாதில் கூடியுள்ளனர். வலது சாரி மத்த் தலைவரும்,  ஜமாய்த்- உலீமா-இஸ்லாம்-ஃபசல் கட்சியின் தலைவருமான, மெளலானா ஃப்ஸல் உர் ரஹ்மான் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.

டீசல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதனால் ‘மெளலானா டீசல்`  என்று இம்ரான்கான் அவர்களாலேயே  புனைப்பெயரும் சூட்டபட்டிருக்கும் மெளலானா ஃப்ஸல் உர் ரஹ்மான், கராச்சியிலிருந்து திரண்ட தனது ஆதரவாளர்களை வழிநடத்தினார். குஜ்ரான்வாலாவில் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது,  இந்த அரசானது பதவி இறங்க வேண்டும் என்றும், மக்களிடம் அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைத்து விடவேண்டும் என்றும் ஆவேசமாக முழங்கியுள்ளார். இம்ரான் அரசானது நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாகவும் அவர்  கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க் கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பி.பி.பி ஆகிய இரண்டு கட்சிகளும் மெளலானா ஃப்ஸல் உர் ரஹ்மான் அவர்களின் ஆர்ப்பாட்ட்த்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் தலைதூக்கியுள்ளது.

இதற்கிடையே, ஜே.யூ,ஐ ஃபசல் கட்சியின் இளைஞர் தன்னார்வப் பிரிவான அன்சார்-உல்-இஸ்லாமை பயங்கரவாத அமைப்பு என்று இம்ரான்கான் அரசு தடை செய்துள்ளது.  இதனை எதிர்த்து, ஜே.யூ.ஐ-ஃபசல் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. ஏராளமான ஆர்ப்பாட்டகாரர்கள் இஸ்லாமாபாதில் கூடியுள்ளதால், நிலைமை கட்டுமீறுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் சிரில் அல்மேய்டா அவர்கள், இம்ரான்  கான் அரசானது, இந்த ஆர்ப்பாட்டம் குறித்துக் கவலைப்பட வேண்டும் என்று கூறுகிறார். பாகிஸ்தான் அரசுக்கு அனுபவம் இல்லை என்றும், அரசியல் நெருக்கடியை அமைதியாக எதிர்கொள்ளும் திறன் இப்போது சோதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அரசானது பதற்றமடைந்தாலோ,  அதிகப்படியாக எதிர்வினையாற்றினாலோ, அது வன்முறையில் கொண்டு போய்விட்டு நிலமையை கட்டுக்கு அடங்காமல் மாற்றி விடக்கூடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இதுதான் பாகிஸ்தானின் முரண்பட்ட, துயர் நிலை என்பது வருந்தத்தக்கது.