டாஷ்கண்டில் நடைபெற்ற எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்ஸில் கூட்டம்.

(மத்திய ஆசியா மற்றும் சிஐஎஸ் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அத்தார் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 18 ஆவது கூட்டம், கடந்த வார இறுதியில் உஸ்பெகிஸ்தானிலுள்ள டாஷ்கண்டில் நடைபெற்றது. யூரேஷியாவை மையப்படுத்தும் இந்த அமைப்பில் 2017 ஆம் ஆண்டு இந்தியா இணைந்தது. இந்த அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கு கொள்வது இது மூன்றாவது முறையாகும். இதன் முதலாவது கூட்டம், 2017 ஆம் ஆண்டு, நவம்பர் – டிசம்பரில் ரஷ்யாவிலுள்ள ஸோச்சியிலும், இரண்டாவது கூட்டம், 2018 ஆம் ஆண்டு, தஜிகிஸ்தானிலுள்ள டுஷான்பேயிலும் நடைபெற்றன.

இந்தியா, கஸகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் என, எட்டு உறுப்புநாடுகள், எஸ்சிஓ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பார்வையாளர் அந்தஸ்தில் 4 நாடுகளும், பேச்சுவார்த்தைக் கூட்டாளி நாடுகளாக ஆறு நாடுகளும் விளங்குகின்றன. இந்த அமைப்பின் முடிவுகளை மேற்கொள்ளும் உயர்நிலையில் இருப்பது, அரசுத் தலைவர்கள் கவுன்சிலாகும். இந்த கவுன்ஸில் ஆண்டு தோறும் கூடுகிறது. பொருளாதாரம், ஒத்துழைப்பு ஆகிய விஷயங்களை இந்த கவுன்சில் கவனித்துக் கொள்கிறது.

டாஷ்கண்டில் நடைபெற்ற எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சிறப்புக் பிரதிநிதியாக, இந்தியாவின் தரப்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டார். பயங்கரவாதத்திற்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக, அனைத்து சர்வதேச சட்டங்களையும் வழிமுறைகளையும் வலுப்படுத்தி செயலாக்குமாறு, ராஜ்நாத் சிங் அவர்கள் எஸ்சிஓ வைக் கேட்டுக் கொண்டார். உலக சமுதாயங்களையும், வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களையும் பயங்கரவாதம் பாதிக்கிறது என்ற அவர், இந்த அமைப்பு, இச்சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டியது அவசியமானதாகும் என்று கூறினார். பருவநிலை மாற்றங்கள், வறுமை, வளர்ச்சி குன்றிய நிலை, சமச்சீரின்மை போன்ற சவால்களையும் உலகம் எதிர்கொள்கிறது.

உலக மக்கள் தொகையில் 42 சதவிகிதமும், உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதமும், மொத்த நிலப் பரப்பில் 22 சதவிகிதமும் பங்கு கொண்டுள்ள எஸ்சிஓ அமைப்பு, அளவற்ற பொருளாதார சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், வர்த்தகம் புரிவதில் சுலபம் என்ற தரவரிசையில், கணிசமான முன்னேற்றம் கண்ட இந்தியா, வர்த்தகம் புரிவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனங்களில் கூட்டாக முதலீடு செய்ய முன்வருமாறு, எஸ்சிஓ நாடுகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

எஸ்சிஓ அமைப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. வளங்கள் குறித்த கணிப்புக்கள், வேளாண் படிப்பு, செயற்கைக் கோள் ஏவுதல், மருந்துப் பொருட்கள், தொலை மருத்துவம், மருத்துவச் சுற்றுலா, விருந்தோம்பல், நிதி சேவை உள்ளிட்ட துறைகளின் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்புத் திட்டங்களில் இந்தியா தனது அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்ள இயலும் என்று அமைச்சர் கூறினார்.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கு அபிரிமிதமான வாய்ப்புக்களை உலகமயமாக்கல் வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். இருப்பினும், அது சவால்களையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பது அவசியம் என்று அவர் கூறினார். வளர்ந்து வரும் நாடுகளில், வர்த்தகத்தில் தற்காப்பு மற்றும் தனிமைப்படுத்தும் போக்கு நிலவுவதாக அவர் தெரிவித்தார். இது எந்த நாட்டிற்கும் பயனளிக்கவில்லை என்று கூறிய அவர், வெளிப்படையான, சட்டங்களுக்குட்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய, பாரபட்சமற்ற, உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வழிமுறைகளே பலனளிக்கக் கூடியவை என்று ராஜ்நாத் சிங் அவர்கள் தெளிவுபடுத்தினார். பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு மேற்கொள்வதே மக்களின் எதிர்காலத்திற்கும், சிறப்பான வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமையும் என்று அவர் கூறினார். மக்களின் நலனே நாடுகளின் கொள்கைகளுக்கு மையப் பொருளாக விளங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இயற்கைப் பேரிடரிலும், சுற்றுச் சூழல் பாதிப்பிலும் சிக்கும் அபாயம் எஸ்சிஓ நாடுகளுக்கு உள்ளது. 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை செயல்பாட்டு உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், உலகளாவிய, பேரிடர் தாங்கவல்ல கட்டமைப்புக்கான கூட்டமைப்புத் திட்டத்தை முன்வைத்தார். இந்தக் கூட்டமைப்பு, நாடுகளின் பேரிடர் தாங்கவல்ல கட்டமைப்புக்கான கொள்திறனை அதிகரிக்க உதவி புரியும். இந்தக் கூட்டமைப்பில் பங்குபெற முன்வருமாறு, எஸ்சிஓ நாடுகளை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக் கொண்டார். சேண்டை கட்டமைப்பின் கீழ், பேரிடர் இழப்புக்களைக் குறைக்கும் இலக்குகள் குறித்து கவனம் செலுத்துவதோடு, பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற தழுவலையும் இக்கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.

எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா நிக்மடோவிச் அரிபோவ், உறுப்புநாடுகளின் தலைவர்கள், எஸ்சிஓ தலைமைச் செயலர் விளாடிமிர் நோரோவ், பிராந்திய பயங்கரவாதத் தடுப்பு அமைப்பான ராட்ஸ் இன் தலைமை இயக்குநர் ஜுமகோன் கியோசோவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாஷ்கண்டில், சாஸ்திரி சாலையில் நிறுவப்பட்டுள்ள லால்பஹதூர் சாஸ்திரி அவர்களின் உருவச் சிலைக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போரை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட டாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அடுத்த நாளே, அதாவது, 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள், லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் மரணமடைந்தார். அவரது நினைவாக கட்டப்பட்ட பள்ளி ஒன்றிற்கும் ராஜ்நாத் அவர்கள் விஜயம் செய்தார்.

எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் அடுத்த கூட்டம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.