தென் கிழக்காசியாவுடன் நீடித்த கூட்டாளித்துவத்தைக் கட்டமைக்கும் இந்தியா.

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கிலேய உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்)

இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மற்றும்  ‘இந்திய-பசிபிக் பார்வை’ ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆசியான் தொடர்பான உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்றார். 16 ஆவது இந்திய – ஆசியான் உச்சிமாநாடு, 14 ஆவது கிழக்காசிய மாநாடு மற்றும் 3 ஆவது  ஆர்சிஈபி (RCEP) எனப்படும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார கூட்டாளித்துவ மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோதி அவர்கள் கலந்து கொண்டார். இவை தவிர, செயலுத்திக் கூட்டாளிகளுடனான தொடர் இருதரப்புக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். முன்னதாக,  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள், பாங்காக்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியான் தொடர்பான அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்றார்.

6 ஆவது இந்திய, ஆசியான் உச்சிமாநாட்டில்  பேசிய பிரதமர் மோதி அவர்கள், பரஸ்பர நலன்களின் அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான  இந்திய-பசிஃபிக் பகுதியின் ஒழுங்குமுறையை நிலை நாட்ட வேண்டியிருப்பதை  வலியுறுத்தினார். ஆசியான் மற்றும் இந்திய-பசிஃபிக்கிற்கான பொதுவான கோட்பாடுகள் ஒன்றிணைவதின் அவசியத்தை கோடிட்டுக்காட்டிய பிரதமர் மோதி அவர்கள், கடல் சார் ஒத்துழைப்பு, நேரடி மற்றும் டிஜிட்டல் தொடர்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான உதவிகள்  ஆகியவை மேம்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். விவசாயம், அறிவியல், ஆராய்ச்சி, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றின்  திறன் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆசியான் பகுதியில் இணைப்புத் திட்டங்களுக்கு இந்தியா 100 கோடி டாலர் கடன் வசதி கொண்டுள்ளது. மேலும் திட்டங்களைக் கண்டறிந்து, இந்தக் கடன் தொகையைப்  பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. முன்னதாக, வர்த்தக சமநிலையில் ஏற்பட்டுள்ள குறைகளைக் களைய, இந்தியாவும் ஆசியானும் இருதரப்புத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மறு  ஆய்வு செய்வது என்று  முடிவு  செய்துள்ளன.

கிழக்காசிய  உச்சிமாநாட்டிலும்  பிரதமர் மோதி அவர்கள் பங்கேற்றார். கிழக்காசிய உச்சிமாநாட்டை நிறுவிய  நாடுகளில் ஒன்றான இந்தியா, பிற நாடுகளுடன் இணைந்து  இதனை  மேலும் பலப்படுத்தி,  கடல் சார் பாதுகாப்பு, தீவிரவாதம், முறையற்ற வகையில் இடம்பெயர்தல் உட்பட, பொதுவான கவலை அளிக்கும் விஷயங்களில் செயலுத்தி ஒத்துழைப்பை  அதிகரிப்பதில்  தான் கொண்டுள்ள  உறுதிப்பாட்டை நிலைநாட்டியது. கிழக்காசிய உச்சிமாநாடு  வளர்ச்சிக்கான முன்னெடுப்பு (2018-2022) குறித்த ஃப்னாம் பென் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்ல, மேற்கொள்ளப்பட்ட மனிலா செயல்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்  குறித்து  தலைவர்கள் கேட்டறிந்தனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை , நாடுகடந்த குற்றங்கள், நீடித்த வளர்ச்சிக்கான கூட்டாளித்துவத்தை ஏற்படுத்துதல் என, மூன்று ஆவணங்கள் இந்த உச்சிமாநாட்டில் ஏற்கப்பட்டது.

ஆர்சிஈபி ( RCEP)  எனப்படும் பிராந்திய அளவிலான,  விரிவான பொருளாதாரக் கூட்டாளித்துவ அமைப்பின் பேச்சுவார்த்தை  நிலையைச் சுற்றியே, இந்த ஆண்டு  ஆசியான் உச்சிமாநாட்டில் முக்கியக் கவனம் இருந்தது. 16 தேசங்கள் அடங்கிய தடையற்ற வர்த்தகத்திற்கான இந்த அமைப்பு, உலகின் உள்நாட்டு உற்பத்தியில்  32 சதவிகிதப் பங்கு வகிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை உருவாகாத காரணத்தால், இந்தியா இல்லாத ஆர்சிஈபி என்று முடிவு செய்வதா  அல்லது,   ஆர்சிஈபி ஐ ஆசியான் + 3 என்ற கட்டமைப்புக்குள்  முன்னெடுத்துச் செல்வதா  என்று விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிய பசிபிக் பகுதியில் ஆக்கப்பூர்வமான தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சேவைத்  துறையை தாராளமயமாக்க வேன்டும் என்றும், வர்த்தகப் பற்றாக்குறையைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா  தன் தரப்பு வாதங்களை  முன் வைத்தது.

உச்சிமாநாட்டில், இந்தியா நீங்கலாக, மீதமுள்ள 15 உறுப்பினர்கள்,  20 அத்தியாயங்களை உள்ளடக்கிய, சந்தை அணுகல் விஷயங்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிப்பதை உறுதி செய்தன. இருப்பினும், தீர்க்கப்படாத நிலுவையிலுள்ள பிரச்சனைகள் குறித்து இந்திய தனது ஐயப்பாட்டைத் தெரிவித்தது. கூடுதல் சந்தை தொடர்பு, கட்டணமில்லா தடைகள் தொடர்பான பிரச்சனைகள், பொருட்கள் தோன்றிய இடத்திற்கான விதிகளை மதிக்காமலிருப்பதற்கான சாத்தியக் கூறுகள், பொருள்களின் மீதான கட்டணங்களைக்  குறைப்பதற்கான அடிப்படை வருடத்தை நிர்ணயிப்பது போன்றவற்றில் கருத்து வேற்றுமை நிலவியது. நியாயம் மற்றும் சமன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த அமைப்பில் சேருவதில்லை என்று  இந்தியா  முடிவெடுத்துள்ளது. அனைத்து இந்தியர்களின், குறிப்பாக, சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் இருப்பவர்களின் மீது, இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடிய எதிர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எட்டப்பட்டது என்று பிரதமர் மோதி அவர்கள் வலியுறுத்தினார்.

தமது தாய்லாந்து பயணத்தின் போது,   ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன், இந்தியாவின் செயலுத்தி நலன்களை முன்னிறுத்தி, பிரதமர் மோதி  அவர்கள் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். மேலும், தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடனான, பல பரிமாண உறவுகளையும் அவர் முன்னெடுத்து சென்றார்.

இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மாநாட்டை ஒட்டி சந்தித்தனர். இணைப்புக்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு, தீவிரவாத  எதிர்ப்பு, சைபர் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாயாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் தென்கிழக்கு ஆசியா முக்கிய  இடம் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு, இந்தியாவின் 69 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில், ஆசியான் நாட்டின் பத்து தலைவர்கள் தலைமை விருந்தினர்களாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆசியானுடன்  இந்தியாவின் பலதரப்பு உறவுகள்  ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும் இந்தக் கொண்டாட்டங்கள் அமைந்தன. தென்கிழக்காசியாவுடனான இந்தியாவின் செயலுத்தி  உறவுகள், வர்த்தகம், இணைப்பு மற்றும் கலாச்சாரம் என்ற  மூன்று அம்சங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆசியான்-இந்தியா செயலுத்திக் கூட்டளித்துவத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்தியா தொடர்ந்து ஆசியானுக்கு முக்கியத்துவம் அளித்து வரும்.