தேசிய நலன்களை முன்னிறுத்தி ஆர்சிஇபி லிருந்து விலகி நிற்கும் இந்தியா.

(மூத்த பொருளாதார நிபுணர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்: இராஜ்குமார் பாலா)

தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் நாடுகள் மற்றும் வட்டாரக் குழுக்களுடன் ஒவ்வொரு நாடும் இணைந்து செயல்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன், ஆர்சிஇபி எனப்படும் பிராந்திய, விரிவான, பொருளாதாரக் கூட்டாளித்துவம் தொடங்கப்பட்டபோது, கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைகளின் எதிரொலியாக, இந்தியா அதில் பங்கேற்றது இயல்பாக இருந்தது. ஆர்சிஇபி யின் நோக்கம், நவீன, பரஸ்பரம் பயன் தரத்தக்க, விரிவான பிராந்தியக் குழுவை ஏற்படுத்துவதேயாகும். இந்த நோக்கத்தை அடைய, ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்குப் பிறகும் இந்தியா இதனை வலியுறுத்தியது.

கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் மேற்கொண்ட பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் பின்னடைவைச் சந்தித்த போதிலும், பிராந்திய அளவிலான நட்புணர்விற்கு மதிப்பளித்து, இந்தியா, ஆர்சிஇபி பேச்சுக்களில் கலந்து கொண்டது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியான், ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, இரு மடங்கு அதிகரித்துள்ளது.  இந்தியாவில், தடையற்ற வர்த்தகக் கூட்டாளி நாடுகளிடமிருந்து இறக்குமதிகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வர, அந்நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதியோ மந்த நிலயிலேயே இருந்தது. காரணம், அந்நாடுகளில் இந்தியாவின் சந்தை அணுகலுக்கு, கட்டணம் சாரத் தடைகள் இருந்ததேயாகும். ஆசியானுடனான சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், கட்டணங்களை இந்தியா பெரிதும் குறைத்தது. வர்த்தகச் சேவைகள் ஒப்பந்தத்தின் மூலம் இந்த இழப்புக்களை ஈடு செய்யலாம் என இந்தியா நம்பியது. சில ஆசியான் உறுப்பு நாடுகள் வெளிப்படுத்திய தயக்கத்தின் காரணமாக, சரக்கு வர்த்தக ஒப்பந்தம் துரதிருஷ்டவசமாக, செயலாக்கம் பெறவில்லை.

சரக்கு மற்றும் சேவைகள் குறித்த பேச்சுக்களை ஒன்றொடொன்று இணைக்குமாறு, உயர்தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களே, ஆர்சிஇபி உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியிருந்தார். இது,  சரக்கு வர்த்தகம் குறித்த பேச்சுகளில் இந்தியா சந்திக்கக்கூடிய சாத்தியமான இழப்புகளை ஈடு செய்திருக்க முடியும். இருப்பினும், துரதிருஷ்டவசமாக, சில நாடுகள் தங்கள் சேவைகள் துறையைத் திறந்துவிட தயக்கம் காட்டின. அதே வேளையில், இந்தியாவின் சந்தைகளைத் தங்களின் சரக்கு வர்த்தகத்துக்குத் திறந்து விடுவதில் அளவுக்கு மீறிய பெரும் கோரிக்கைகளையும் முன்வைத்தன.

ஆர்சிஇபி யை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டின், ’சலுகை பெற உகந்த நாடு’ என்ற தகுதியின் அடிப்படையிலான வரி விகிதங்களைப், பேச்சுக்களுக்குப் பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் ஆர்சிஇபி முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், தற்கால நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சுங்க வரிச் சலுகைகளை வழங்குவதற்கான அடிப்படை ஆண்டாக 2019 ஆம் ஆண்டைக்   கடைப்பிடிக்க இந்தியா கோரிக்கை வைத்திருந்தது.  இந்த ஆலோசனையைப் பல நாடுகள் ஏற்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஏற்றுமதிகள், குறிப்பாக சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் பெருமளவு குவிந்து, உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.  எனவே கட்டுக்கடங்கா இறக்குமதிகளைத் தடுக்கும் நோக்கில், தன்னிச்சையாக உயர் வரி விகிதங்களை விதிக்க வகை செய்யும் பாதுகாப்பு செயல்பாட்டு முறையைப் பின்பற்ற இந்தியா வேண்டுகோள் விடுத்தது. எனினும், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையை மனதில்கொண்டு, நாடுகள் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தன.

கூடுதலாக, மறைமுக மற்றும் மாற்றுவழியிலான முறைகளில், மாறுபட்ட கட்டண முறைகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், பொருட்கள் உற்பத்தி ஆகும் இடம் பற்றிய விதிகளைக் கடுமையாக்க இந்தியா வலியுறுத்தியது. 20 ஆண்டு காலத்துக்கு சீனப் பொருட்கள் மீதான கட்டணங்களைக் குறைப்பதற்கு, இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், இவற்றில் பெரும்பாலான பொருட்களுக்கு, மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளில், வரிகளற்ற சந்தை அணுகல் கிடைத்திருக்கும். எனவே பொருட்கள் உற்பத்தியாகும் இடம் பற்றிய விதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உற்பத்தி ஆகும் இடம் குறித்த விதிகளை மீறியது தொடர்பாக, குறிப்பாக, ஆசியான் நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் நியாயமற்ற சர்வதேச வர்த்தக நடைமுறைகளில் இருந்து தனது உள்நாட்டுத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்கு, ஏமாற்ற இயலாத கட்டமைப்புகள் தேவை என்று இந்தியா விரும்புகிறது. ஆர்சிஇபி நாடுகள் பல இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முற்றிலும் நியாயமான இந்தக் கோரிக்கை கேட்பாரற்றுப் போனது.

முதலீடுகள் மற்றும் மின்னணு வர்த்தகம் தொடர்பாக, ஆர்சிஇபி யிலுள்ள பணக்கார நாடுகள் அறிமுகப்படுத்திய உலக வர்த்தக அமைப்பின் பிற கூடுதல் ஷரத்துக்கள், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது. கட்டாயமான தொழில்நுட்பப் பரிமாற்றத்தைத் தடுப்பது, முதலீடுகளின் கீழ், ராயல்டி தொகை வெளியேறுவதற்கான அதிகபட்ச உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படுவதைத் தடுப்பது, மின்னணு வர்த்தகத்தின் கீழ், தரவுகள் உள்ளூர்மயமாக்குவதை தடுப்பது போன்ற ஷரத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதியாவிற்கு கொள்கை உருவாக்கத்தில் சுதந்திரம் பறிபோகும்.

ஆர்சிஇபி அமைச்சர்கள் நிலைக் கூட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தகைகளின்போது, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அவர்களும் இதர மூத்த பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் இந்தக் கவலைகளை எடுத்துரைத்தனர். துருதிருஷ்டவசமாக, சமநிலையான ஒப்புதல் வெளிவராத நிலையில், இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை என்று முடிவு செய்தது. தனது உள்நாட்டுத் தொழில் துறை மற்றும் சிறு தொழில்களின் நலன்களைப் பாதுகாப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, இந்தியா இந்த முடிவை எடுத்தது. எனினும், இந்தியாவின் முக்கிய நலன்களையும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகளையும் பரஸ்பரம் திருப்தியளிக்கும் விதமாக இடம்பெறச் செய்தால், இந்தியா, ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி பரிசீலனை செய்யும் என்று ஆர்சிஇபி தலைவர்களின் கூட்டறிக்கையும், இந்திய அரசும் தெளிவுபடுத்தியுள்ளன.