அமெரிக்க, இந்திய பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாளித்துவம்: ஏழாவது கூட்டம்.

(தேசிய பொது நிதி மற்றும் கொள்கையின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

அமெரிக்க, இந்திய பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாளித்துவத்தின் ஏழாவது கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், அமெரிக்கக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்டீவன் நூச்சின் அவர்களும் தலைமை தாங்கினர்.

2022 ஆம் ஆண்டில், ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இக்கூட்டத்தில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதை அமெரிக்க உறுதி செய்தது. உலக அளவில், கடன் வசதிகளின் நீடித்த தன்மை குறித்தும், இருதரப்பு கடன் வழங்கலில் வெளிப்படைத் தன்மை குறித்தும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு, முதலீடுகளில் உலகளாவிய ஒருங்கிணைப்புத் திட்டங்களை இந்தியா மேற்கொள்வதற்கு இது உதவும். தவிர, வெளியுலக மேக்ரோ பொருளாதார நிலைகளை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் நோக்கத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இக்கூட்டத்தில், உலகளாவிய பொருளாதார விஷயங்களில், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதற்காக, நிதித்துறையில் சீரமைப்புக்களை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது மற்றும் வங்கிகளுக்கு மறுமுதலீடு வழங்குவது ஆகியவை குறித்த திட்டங்களும் விவாதிக்கப்பட்டன. காப்பீட்டுத் துறைக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிதித்துறைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் அலசப்பட்டன. அமெரிக்க நிதியமைச்சர் நூச்சின் அவர்கள், ரிசர்வ வங்கி ஆளுநர் ஷக்திகாந்த தாஸ் அவர்களையும் சந்தித்து, நாணய மேக்ரோ கட்டமைப்பு குறித்து விவாதித்தார்.

இக்கூட்டத்தில் அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை எச்சரிக்கையுடன் ஆராய்வது அவசியம். ஏனெனில், இது வட்டிவிகித மாற்றங்களுக்கு ஏற்ப மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அயல்நாட்டு முதலீடுகளுக்கு இக்கூட்டம் அதிக முக்கியத்துவம் அளித்தது. இது இந்தியாவின் பொருளாதார ராஜதந்திரங்களை ஆராய்வதற்கும் முக்கியத்துவம் பெற்றது.

ஆர்சிஇபி எனப்படும் பிராந்திய, விரிவான பொருளாதார கூட்டாளித்துவ அமைப்பின் கூட்டத்திலும் இந்தியா பங்கேற்றது. 10 ஆசியான் நாடுகள் மற்றும் ஆசியானின் தடையற்ற வர்த்தகக் கூட்டாளி நாடுகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள்  ஆர்சிஇபி கூட்டத்தில் பங்கேற்றன. இக்கூட்டத்தில், இந்தியாவின் நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. வர்த்தகப் பற்றாக்குறை குறித்த இந்தியாவின் கவலைகளுக்கு சரியான முறையில் தீர்வு எட்டப்பட்டிருந்தால், ஆர்சிஇபி ஒப்பந்தம், கிழக்கு நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் திருப்பத்தை மாற்றக் கூடியதாக அமைந்திருக்கும். வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு, சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் போன்ற குற்றங்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தப் பொருளாதார மற்றும் நிதிப் பேச்சுவார்த்தைகளில், நாடுகள் வாரியான அறிக்கைகளைத் தன்னிச்சையாகப் பரிமாறிக் கொள்வது வலியுறுத்தப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான வரிகள் குறித்த சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஃபேக்டா எனப்படும் வெளிநாட்டுக் கணக்கு வரி செலுத்தல் சட்டம் குறித்த அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், நிதி குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது குறித்து, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பரஸ்பர நலன்களுக்காக, தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கநிலை நீடிக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பது குறித்து, கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்திய மாநிலங்கள் மற்றும் நகராட்சிகள், தங்கள் அகக்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக அயல்நாட்டுப் பத்திரங்களை நாடும் போக்கை சுட்டிக்காட்டுவது முக்கியம். உதாரணமாக, வெளிநாட்டில் கேரள அரசு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் எனப்படும் ரூபாய் பத்திரங்களைக் குறிப்பிடலாம். 2017 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் நகரத் திட்டத்திற்காக புனே நகராட்சிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்க, இந்தியாவில் புதிய தேசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிதி (NIIF) உருவாக்கப்பட்டதன் பின்னணியில், இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவியும் பரவலான செயலுத்திக் கூட்டாளித்துவத்தையும் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.