ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு.

(மூத்த  பொருளாதார பத்திரிக்கையாளர்   ஆதித்ய தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.)

உலகளாவிய மந்த நிலை காரணமாக, பொருளாதார வளர்ச்சியில்  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முக்கியத் துறையான ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான  ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ள   முடிவு, சரியான திசையில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம்,

இந்தியப்  பொருளாதாரத்தின் அனைத்துத்  துறைகளிலும் தேவைகளைத்  தூண்ட இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தை விரிவடையச் செய்வதன் மூலம், அதனை  உயர் வளர்ச்சிப்  பாதையில் நிலைநிறுத்தும் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள அரசு, 458,000 வீடுகளைக் கட்டும் 1600  திட்டங்களை மீண்டும் துவக்க, 25 ஆயிரம்  கோடி ரூபாய்  ஒதுக்கியுள்ளது.  இதில், வங்கிகளால் வாராக் கடனாக அறிவிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களும், திவால்  வழக்குகளில் சிக்கியுள்ள திட்டங்களும் அடங்கும். நிதி அமைச்சர் கூறியிருப்பது போல, தடைபட்டுள்ள திட்டங்களில் வீட்டுக் கடன் பெற்று தவணை கட்ட முடியாதவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

கட்டுப்படியாகக்கூடிய விலையில், நடுத்தர   வருமானத்தினருக்கான வீடு கட்டும் திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக, 20,000 கோடி ரூபாய் அளவில் நிதி  ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு,  இந்த ஊக்க நிதி, ரியல் எஸ்டேட் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் முதலீடுகள் செய்து கட்டப்பட்ட  புது அடுக்கு மாடிக் குடியிருப்புகளை விற்கமுடியாமல்,  போதிய பண புழக்கம் இல்லாததால் வீழ்ச்சியை சந்தித்து வரும் ரியல் எஸ்டேட் துறையை மீட்க,  இந்த நடவடிக்கை  பெரிதும் உதவும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.  இந்த நடவடிக்கை வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட்  துறையினருக்கும் என, இருசாராருக்குமே சாதகமாக விளங்கும் என்று கருதப்படுகிறது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட துறையாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை, பொருளாதாரத்திற்கு ஏற்றம் தரக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவில், ரியல் எஸ்டேட்  துறை என்பது,  வீடு  கட்டுதல் மற்றும் கட்டுமானத்தை  ஒட்டியதாகும். வேலை வாய்ப்பை  உருவாக்குவதில் இத்துறை  முக்கியப்  பங்காற்றுகிறது. எஃகு, சிமெண்ட் உட்பட, முக்கிய  பொருளாதாரத் துறைகளில்  தேவை சுழற்சியைத் தூண்டுவதில் ரியல் எஸ்டேட்  துறை பெரும் பங்காற்றுகிறது.

பொருளாதாரத்தின்  அனைத்துத்  துறைகளிலும் நேரடி, மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தும் 14 முக்கியத் துறைகளில், கட்டுமானத் துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்துறையில் வளர்ச்சியைத் தூண்ட எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டு மொத்த வளர்ச்சியை  ஏற்படுத்தும்.

இந்தியப்  பொருளாதாரத்தைப்  பொறுத்த மட்டில், இந்திய ரியல்  எஸ்டேட் துறை 2030 க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  13  விழுக்காடு அளவுக்கு இத்துறை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ரியல் எஸ்டேட் துறை, நேரடி அந்நிய முதலீட்டையும் ஈர்க்க வல்லது.

இந்திய  கட்டுமானத் துறையில், 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், 2,504 கோடி டாலர் வரை நேரடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது  என்று,  மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை கூறுகிறது.

செபி எனப்படும்  இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஆர்இஐடி எனப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கு ஒன்று. பலதரப்பட்ட முதலீட்டாளர்களும் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய இந்த டிரஸ்ட் உதவும்.

அடுத்த சில ஆண்டுகளில், 1965 கோடி டாலர்  மதிப்பிலான வாய்ப்புக்கள் இந்திய சந்தையில் உருவாகும்.

இத்துறை பற்றிய நுணுக்கங்களைப் புரிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் பெருக்கம், உலகமயமாக்கல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ரியல் எஸ்டேட் துறையினர், புதிய  சவால்களை எதிர்கொள்ள தங்களைத் தயாராக்கிக் கொண்டுள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்து வருவதால், இத்துறையின் வெளிப்படைத்தன்மை  ஊக்குவிக்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் கணக்கு மற்றும் மேலாண்மைத் தரத்தை மேலும் சிறப்பானதாக்கும் வகையில் மாற்றி வருகிறார்கள்.

பல நகரங்களில், பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் மேலாண்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தேவையான கட்டுமானப் பொருள்களையும் மனித ஆற்றலையும் பெறும் வகையில்,  மத்திய தொகுப்பை உருவாக்குவதிலும் ரியல் எஸ்டேட் துறையினர் முதலீடு செய்கிறார்கள். திட்ட மேலாண்மை, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் அவர்கள் அதிக தகுதி வாய்ந்த தொழில்முறை வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி வருகிறார்கள்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளும்போது, அனைத்து வகையிலும்  பொருளாதாரத்திற்கு ஏற்றம் அளிக்க கூடிய இந்தத் துறையை  இந்தியா ஒதுக்கிவிட  முடியாது. அரசு எடுத்துள்ள இந்த சாதகமான முடிவு, ரியல் எஸ்டேட் துறையை  வெகுவாக ஊக்குவிக்கும் என்பது திண்ணம்.