அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

2018 ஆம் ஆண்டுக்கான, நாடுகள் வாரியான, பயங்கரவாதம் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதம் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெவ்வேறு நாடுகளில் பயங்கரவாத நிலை குறித்த, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ ஆய்வை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

பயங்கரவாத அமைப்புக்களான லஷ்கர் ஏ தொய்பா மற்றும் ஜெய்ஷ் ஏ முகமது ஆகியவை, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கணிசமாகக் குறைக்கத் தவறிவிட்டதாக, பாகிஸ்தான் மீது இந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஷ்கர் ஏ தொய்பாவின் நிழல் அமைப்புக்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதித்தது தவறு என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத நிழல் அமைப்புக்களை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதன் மூலம், அவ்வமைப்புக்கள் தேசிய நீரோட்டத்தில் இடம் பெறவும், அரசியல் அதிகாரம் பெறவும் வகை செய்வதற்கான நோக்கம் புலனாகிறது. இருப்பினும், இதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்ற நடவடிக்கைகளைக் குற்றச் செயல்களாக பாகிஸ்தான் அறிவித்திருந்தாலும், அவற்றை ஒடுக்குவதில் சீராகச் செயல்படவில்லை.

ஆஃப்கானிஸ்தானில், அரசுக்கும் தாலிபான்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கு ஆதரவு தெரிவித்துக் குரலெழுப்பிய பாகிஸ்தான், பாகிஸ்தானின் பாதுகாப்புடன், அந்நாட்டிலிருந்து ஆஃப்கான் தாலிபான் மற்றும் ஹக்கானி வலையம் செயல்படுவதையும், அமெரிக்க மற்றும் ஆஃப்கான் அரசுப் படைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதையும் தடுக்கவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.

பயங்கரவாதத் தடுப்புப் பணிக் குழு குறித்துக் குறிப்பிடுகையில், ஐ.நா.வால் அடையாளம் காணப்பட்ட  லஷ்கர் ஏ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் நபர்கள், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதை பாகிஸ்தான் நிர்வாகம் தடுக்கத் தவறி விட்டதாக, அந்த அறிக்கை கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானைத் தனது சாம்பல் பட்டியலில் இணைத்த பயங்கரவாதத் தடுப்புப் பணிக் குழு, தாம் நிர்ணையித்த 27 அம்சங்களில், ஐந்தில் மட்டுமே பாகிஸ்தான் செயலாற்றியுள்ளது என்பதால், அப்பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்க முன்வரவில்லை. பாகிஸ்தானில் நாடு முழுவதும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்தி கொள்ள ஏதுவான சூழல் இதனால் உருவானது. இருப்பினும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், பயங்கரவாதத் தடுப்புப் பணிக் குழுவின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்க பாகிஸ்தான் தவறவில்லை.

பயங்கரவாதத்தை முறியடிக்க, பாகிஸ்தான் ஏற்படுத்திய தேசிய செயல் திட்டம் 2015 பற்றிக் குறிப்பிடுகையில், சந்தேகத்துக்கிடமான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வங்கிகள் அறிக்கையளித்தல், பயங்கரவாதத்தைத் தடுக்க, முன்கூட்டிய கைது, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டோருக்குத் தூக்குத் தண்டனை, பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் பற்றி ஏட்டளவில் எழுதப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றுவதில் சீரான செயல்பாட்டில் தான் குறையுண்டு என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் சில பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் எடுத்திருந்தாலும், அது குறித்து திருப்தி எதுவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

பயங்கரவாதம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் நாடு வாரியான அறிக்கையில் கூறப்பட்ட காட்டமான குற்றச்சாட்டுக்களுக்கு, பாக் வெளியுறவு அமைச்சகம், அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, பயங்கரவாதத்தை எதிர்த்துப் பாகிஸ்தான் போரிட்டு வந்துள்ளதை இந்த அறிக்கை முழுமையாகப் புறக்கணித்து விட்டதாக, பாக் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் அல் கைதா இப்பிராந்தியத்தில் ஒழிக்கப்பட்டதாகவும், உலகில் பாதுகாப்பை மேம்படுத்தியதாகவும் பாக் வெளியுறவு அறிக்கை கூறிக் கொள்கிறது. எனினும், அமெரிக்க சிறப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் வரையில், அபோட்டாபாதில், பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்பில் ஒசாமா பின் லேடன் ஐந்து ஆண்டுகள் அடைக்கலம் அளிக்கப்பட்டதை அது நினைவில் கொள்ளவில்லை. ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தை அறிய உதவி புரிந்த டாக்டர் ஷகீல் அஃப்ரீதி அவர்கள், நியாயமாகப் பார்த்தால், பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருது அளித்துக் கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, கடந்த 9 ஆண்டுகளாக, சிறையில் வாடி வருகிறார்.

நல்ல பயங்கரவாதி, கெட்ட பயங்கரவாதி எனத் தரம் பிரித்து இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானின் கபட நாடகம் குறித்து உலகம் நன்கு அறியும். நல்ல பயங்கரவாதி, நாட்டின் சொத்து எனவும், பயங்கரவாதம், நாட்டின் கொள்கை எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. அனைத்து வகையான பயங்கரவாதிகளுக்கும் எதிராக, வலுவான, வெளிப்படையான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் எடுக்காத வரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் தனது நேர்மையை உலக அரங்கில் பாகிஸ்தான் நிலைநாட்ட இயலாது.