இந்திய, அமெரிக்க முப்படை கூட்டுப் பயிற்சி ஒத்திகை – 2019

(அமெரிக்க விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

பொருளாதார வளர்ச்சி பெற்று, உலக அளவில் அதிக பங்களிப்பினை அளிப்பதற்கான இந்தியாவின் நோக்கத்துக்கு, அண்மைக்காலமாக அமெரிக்கா உறுதுணையாக விளங்கி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுடனான கூட்டாளித்துவத்துக்கு அதிக வலுசேர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ராணுவ ஒத்துழைப்பு முக்கியத் தூணாக விளங்குகிறது.

இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரத்தில், ’டைகர் ட்ரையம்ஃப்’ எனப்படும் மனிதாபிமான, பேரிடர் நிவாரணம் குறித்த, இருநாட்டு முப்படைகளின் முதல் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், அமெரிக்கத் தரப்பில் யூ. எஸ். மரைன் கோர் மற்றும் சிறப்பு உளவுப் படையும், இந்தியத் தரப்பில்,  கடற்படையின் பி.8 ஐ(P8i) எனப்படும் தொலைதூர கடல்சார் உளவுப் படையும் பங்கேற்கின்றன. இப்பயிற்சியின் முதாலாவது கட்டம், நவம்பர் 13 முதல் 16 ஆம் தேதி வரை விசாகப் பட்டினம் துறைமுகத்திலும், இதன் இரண்டாவது கட்டம் காக்கிநாடாவில், நவம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன. இந்திய ராணுவ சிக்னல் பிரிவு, மருத்துவம் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளிலிருந்து  சுமார் 400 வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். இதற்கு முன்னர், ரஷ்யாவுடன் மட்டுமே இதுபோன்ற கூட்டு ஒத்திகையை இந்தியா நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் இக்கூட்டுப் பயிற்சி குறித்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது 2 ப்ளஸ் 2 எனப்படும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, விவாதிக்கப்பட்டது. அதில், இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான வளர்ந்து வரும் பிணைப்புக்களைக் கருத்தில் கொண்டு, இருநாட்டு முப்படைகளின் புதிய கூட்டுப் பயிற்சியைத் துவங்குவது என்றும், இருநாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே, பரஸ்பரப் பரிவர்த்தனைகளை அதிகரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோதி அவர்கள், அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற மோதி நலமா? நிகழ்ச்சியின்போது, இக்கூட்டுப் பயிற்சிக்கான அறிவிப்பினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டார்.

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை குறித்து ஒத்த கருத்து கொண்டுள்ள இருநாடுகளும், இப்பிராந்தியத்திற்கான இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை, போக்குவரத்துப் பரிவர்த்தனை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தொடர்புகள் ஒத்திசைவு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவையாகும். தவிர, மூன்றாவதாக, அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ள இருநாடுகளும் தயாராகி வருகின்றன. இருநாட்டு ராணுவங்களுக்கிடையே, ஆண்டொன்றில், 50 க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளை இருநாடுகளும் நிகழ்த்தி வருகின்றன. தவிர, ஜப்பானுடன் இணைந்து நடத்தும் மலபார் கடல் பயிற்சி, வஜ்ர பிரஹார் மற்றும் யுத் அப்யாஸ் என்ற பயங்கரவாதத்துக்கு எதிரான போர்ப் பயிற்சி ஆகியவையும் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இக்கூட்டுப் பயிற்சிகளால், இருநாட்டு ராணுவத்துக்கும், போர் சூழல் குறித்த அனுபவங்கள் கிடைப்பதோடு, வருங்காலப் போர் நடவடிக்கைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் வகை செய்யப்படுகிறது. இந்திய, அமெரிக்க பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதால், இக்கூட்டுப் பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நிலப் பகுதியிலும், கடல் பகுதியிலும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களைத் திறம்பட சமாளிக்க, இந்திய பாதுகாப்புக் கட்டமைப்பு, அதிவிரைவில், தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு, அதிநவீன தொழில்நுட்பமும், உபகரணங்களும் அவசியம். ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், பெருமளவில் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்ய முனைந்துள்ள இந்தியாவுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன் அளிக்கும் பயன்பாடுகள் வரவேற்கத்தக்கவையாக விளங்குகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில், இந்தியா, கூட்டாளி நாடாக செயல்படும் சாத்தியக்கூறுகளும், இந்தியா அளிக்கும் பாதுகாப்புத் தளவாட சந்தையும் ஈர்க்கக் கூடிய அம்சங்களாக விளங்குகின்றன.

மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு,, திறன் அதிகரிப்பு மற்றும் பரஸ்பர ராணுவப் பரிவர்த்தனைகள் ஆகியவை உள்ளிட்ட கண்ணோட்டத்தில் இந்திய, அமெரிக்க உறவுகளை அமெரிக்கா நோக்குகிறது. மற்றொரு நாட்டில், துவக்கநிலைத் தொழில் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு, ஏற்றுமதிகள் செய்வதற்கு ஏதுவாக, 2012 ஆம் ஆண்டு, இருநாடுகளும் ஏற்படுத்திக் கொண்ட பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இருநாடுகளும் முற்பட்டுள்ளன. இதனால் தொழில் நிறுவங்களுக்கு இடையிலான, ஆரய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். 2018 ஆம் ஆண்டு, முதன்முதலாக மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, இருநாடுகளும் அலசி வருகின்றன.

 

***************************