பிரிக்ஸ் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா.

(செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாரயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

நான்கு நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டே, செயலுத்தி ரீதியாக, இந்தியாவின் பல்நிலை சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய இடத்தை இவ்வமைப்பு பெற்று வந்துள்ளது. உலக அரங்கில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக, பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் பின்னணியில், பிரேஸில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற 11 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி அவர்கள் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக, பிரிக்ஸ் கட்டமைப்புக்குள், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்க, பிரிக்ஸ் நாடுகள் ஆர்வமாக உள்ளதாக, பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்திருந்தார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், உலகப் பொருளாதார வளர்ச்சியில், பிரிக்ஸ் நாடுகள், 50 சதசிகிதம் பங்கு கொண்டுள்ளதாக, பிரதமர் மோதி அவர்கள் கூறினார். உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உழன்று வரும் வேளையில், பிரிக்ஸ் நாடுகள் அளித்த உந்துதலால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவந்தனர் என்றும், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பில் திருப்புமுனை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பிரிக்ஸ் உறுப்புநாடுகளின் பெரிய அளவிலான வணிக சந்தை, பன்முகத்தன்மை மற்றும் ஒத்திசைவுகள் ஆகியவை, பரஸ்பரம் பலனளிக்கும் சாதகமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகத் தொழில் நிறுவனங்களுக்கு ஆர்வமூட்டும் செய்தியாக, உலகிலேயே மிகுந்த வெளிப்படைத் தன்மை கொண்ட, முதலீடுகளுக்கு சாதகமான பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அளப்பரிய சாத்தியக்கூறுகளைத் தன்வசம் கொண்டுள்ள இந்தியாவில், குறிப்பாக, உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டில், முதலீடு செய்ய முன்வருமாறு, பிரிக்ஸ் தொழில் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரிக்ஸ் நாடுகள், தங்களிடையே நிலவும் ஒத்திசைவுகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, குறைந்த பட்சம், ஐந்து துறைகளில், கூட்டு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பரஸ்பர நலன்கள் சார்ந்த உலக விஷயங்களை முன்னிறுத்தி விவாதிக்க, உறுப்புநாடுகளின் தலைவர்களுக்கு பிரிக்ஸ் ஒரு நல்ல மேடையை அமைத்துக் கொடுக்கிறது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே, தலைவர்கள் சந்தித்து, இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்நிலை விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடக் கிடைத்த நல்வாய்ப்பினை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களைச் சந்தித்த பிரதமர் மோதி அவர்கள், தனது டுவிட்டர் செய்தியில், “அதிபர் புடின் அவர்களுடன் அருமையான சந்திப்பு நிகழ்ந்தது. இந்திய, ரஷிய உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாங்கள் இருவரும் அலசினோம். வர்த்தகம், பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற துறைகளில் இந்தியாவும், ரஷியாவும் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இருதரப்பு உறவுகளின் விளைவாக, இருநாட்டு மக்களும் அதிகமாகப் பயன் பெறுவர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 17 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மே மாதம், ரஷியாவில் நடைபெறவுள்ள வெற்றி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் மோதி அவர்களுக்கு அதிபர் புடின் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

மாமல்லபுரத்தில், சீன அதிபருடன் முறைசாரா சந்திப்பு நிகழ்த்தி, ஒரு மாதமே கழிந்துள்ள நிலையில், அவருடன் இரண்டாவது முறையாக, பிரதமர் மோதி அவர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். இந்திய, சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர். ஆர்சிஇபி எனப்படும் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைவதில்லை என இந்தியா முடிவெடுத்த சிலநாட்களுக்குள்ளாகவே, இருதலைவர்களும் மீண்டும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிஇபி யில் இந்தியா  இணைய வேண்டும் என்பதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்த தங்கள் நம்பிக்கையை சீனத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். பிரதமர் மோதி அவர்களுடான முறைசாரா சந்திப்பின்போது, அன்பான வரவேற்பளித்தமைக்கு, பிரதமர் மோதிக்குத் தமது நன்றியை சீன அதிபர் ஸீ ஷின்பிங் தெரிவித்துக் கொண்டார். சீனாவில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளவுள்ள மூன்றாவது முறைசாரா சந்திப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். இருநாடுகளுக்கும் இடையே, வர்த்தகம் மற்றும் பொருளாதார வழிமுறைகளுக்கான புதிய உயர்மட்டக் குழு விரைவில் சந்திக்க வேண்டும் என்று, இருதலைவர்களும் கேட்டுக் கொண்டனர். இருநாடுகளிலிருந்தும் சிறப்புப் பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்து எல்லைப் பிராச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், எல்லையில் அமைதி தொடர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். பிரிக்ஸ், உலக வர்த்தக அமைப்பு, ஆர்சிஇபி போன்ற பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான ராஜீய உறவுகளின் 70 ஆவது நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் குறித்து இருதலைவர்களும் பரிசீலனை செய்தனர். இக்கொண்ட்டாட்டங்கள், இருநாட்டு மக்க்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என இருதலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

 

*********************************