250 ஆவது அமர்வை எட்டும் இந்திய நாடாளுமன்ற மேலவை.

(மூத்த பத்திரிகையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

ராஜ்யசபை என்று அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை, 250 ஆவது அமர்வை எட்டியுள்ளது. இத் தருணத்தில், இந்திய அரசியல் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும்பங்காற்றியுள்ள மேலவையின் மகத்துவத்தைப் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். 1952 ஆம் வருடம் துவங்கப்பட்ட நாள் முதல், தேசநலனைக் காப்பதில் இது முன்னின்று செயல்பட்டு வந்துள்ளது.  1952 ஆம் வருடத்தில் நிறைவேற்றிய இந்து திருமண மற்றும் விவாகரத்து மசோதா முதல், 2019 ஆம் வருடத்தில்,  முஸ்லிம் பெண்களுக்கான திருமண உரிமை பாதுகாப்பு மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்பு மசோதா ஆகியவற்றை நிறைவேற்றியது வரை, இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத சுவடை மாநிலங்களவை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவ்வப்போது மிகுந்த சவால்களை எதிர்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்துவதில் நாடாளுமன்ற மேலவை நீண்ட தூரம் பயணித்துள்ளது என்று, இந்திய குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான எம் வெங்கையா நாயுடு அவர்கள் மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாடு தனது முழு சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து சாதிக்க, தவறவிட்ட நேரத்தையும், வாய்ப்புக்களையும் ஈடுகட்ட இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

1952 ஆம் வருடம் மே மாதம் 13-ஆம் தேதி துவங்கிய முதல் அமர்விலிருந்து, 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி  நிகழ்த்திய 249 ஆவது அமர்வு வரை, மொத்தம் 5466 அமர்வுகளை நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 108 அரசியலமைப்பு திருத்த மசோதா உள்பட, மொத்தம் 3817 மசோதாக்களை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது. கடந்த 67 வருட ஒப்பற்ற காலகட்டத்தில், மொத்தம் 2,282 பேர், உறுப்பினர்களாக மேலவையை அலங்கரிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதில் 208 பெண்கள் மற்றும் 137 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்குவர். இதன்மூலம், 1950 ஆம் வருடம் முதல்  மாநிலங்களவை மேற்கொண்ட அர்த்தமுள்ள பயணம்  முன்வைக்கப்படுகிறது.

மாநிலங்களவைக்கு மேலும் வலுசேர்ப்பது, அதன் தனித்துவமான, காலவரையற்ற தொடர்நிலையாகும். இரண்டு அவைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில், ஒவ்வொரு ஐந்தாண்டுக்குப் பிறகும் குடியரசுத் தலைவரால், நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான மக்களவை கலைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவருக்கு பிரதமர் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவும் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். ஆனால், மாநிலங்களவை, காலவரையற்றுத் தொடர்கிறது.

மாநிலங்களவை, இந்தியாவின் பன்முகத் தன்மையின் பிரதிநிதி என்றும், நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் பிரதிபலிப்பாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்,  250 ஆவது அமர்வில் உரையாற்றும்போது மிகச்சரியாகக் குறிப்பிட்டார். நாட்டின் அரசியலமைப்பின் தொலைநோக்கிற்கிணங்க, நாட்டில் சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஒரு முக்கிய அங்கமாக மாநிலங்களவை பங்களித்து வருகிறது. கடந்த 60 வருட காலமாக நாட்டைக் கட்டமைக்கும் முயற்சிகளில் இது மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. வறுமை ஒழிப்பு, படிப்பறிவின்மை, வியாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம், பயங்கரவாதம், சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், அல்லது பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு, போன்ற  பிரச்சினைகளுக்குத் தீர்வு என, நாடு தழுவிய விவகாரங்களில் மாநிலங்களவையின் முக்கியப் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

சமீபத்தில், மாநிலங்களவையில், மிக முக்கிய மசோதாக்களான, சரக்கு மற்றும் சேவை வரி, முத்தலாக், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள உயர்ஜாதி மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கம் குறித்து, பிரதமர் மாநிலங்களவையில் வெளியிட்ட அறிக்கை கவனிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு, மாநிலங்களவையில், அதன் முதல் தலைவரான  என் கோபாலசாமி ஐயங்காரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய இந்த சட்டப்பிரிவு, அதே அவையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவைக்கு மற்றுமொரு மகிமை உண்டு. அது, பல்வேறு தரப்பிலிருந்து சிறந்த குடிமக்களை அது தன்பால் ஈர்த்துள்ளது என்பதேயாகும். இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கலை, அறிவியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து வந்த திறமை மிக்கவர்களை இந்த அவை கண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். அவர்கள் இருந்ததால், பொது நலன்கள் குறித்த முக்கியமான பிரச்சனைகளில், சிறந்த தரமான விவாதங்கள் ஏற்ப்பட்டது மட்டுமல்லாமல், மாநிலங்களவையின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் உற்சாகமும் ஏற்பட்டது.

“நமது இரண்டாவது அவையை இரண்டாம் நிலை அவையாகக் கருதும் தவற்றை யாரும் செய்யலாகாது. விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற உயர் கல்வி படித்தவர்கள் இந்த மாநிலங்களவையை அலங்கரிப்பது, நாட்டின் ஜனநாயக உணர்வை வளப்படுத்துவதோடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு வலு சேர்க்கிறது” என்று, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2003 ஆம் வருடம், 200 ஆவது மாநிலங்களவையின் அமர்வின்போது கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.

உலகளவில், இரண்டாவது நாடாளுமன்ற அவை தொடர்ந்து இருப்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், 250 ஆவது அமர்வு என்ற மைல்கல் சாதனையை இந்திய மாநிலங்களவை

எட்டியிருப்பது, இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது.

*************************