ஜப்பானில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு.

(நவோதயா பத்திரிக்கையின் ஆசிரியர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

உலகின் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் 20 நாடுகளின் பொருளாதார மேடையே ஜி-20 எனப்படும். இதில், 19 உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கும். நடப்பாண்டு ஜூன் மாதம் ஒசாகாவில் நடந்த 14 ஆவது உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பானின் நகோயா நகரில், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக, வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், தற்போதைய சர்வதேசப் பொருளாதார தேக்கநிலை குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர்.

மாநாட்டிற்குப் பின்னர் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சரும், இந்த ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான டோஷிமிட்சு மோடேகி அவர்கள், உலக வர்த்தக அமைப்பு விரைவில் சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தை ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இதனால் அவ்வமைப்பு, தற்காலப் பிரச்சனைகளை சரிவரக் கையாள இயலுமென்று அமைச்சர்கள் நம்புவாதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஒசாகாவில் நடந்த உச்சி மாநாட்டின் போதும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தது போல், இந்த ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலும், தகராறு தீர்வு வழிமுறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள் முன்மொழிந்த ஆசியா பசிஃபிக் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தேவையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டதாக, மோடேகி அவர்கள் தெரிவித்தார். எந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்கும் ஒருமித்த கருத்தை நாடாத வகையில், வெளியுறவு அமைச்சர்கள், முக்கியப் பிரச்சனைகள் குறித்த தங்கள் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

வரும் 2020 ஆம் ஆண்டில் ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவுள்ள இந்தியா, உலகப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் விதமாக, ஜி-20 அமைப்பை எவ்வாறு வழிநடத்தப் போகிறது என்பதை உலகப் பொருளாதார அமைப்புக்கள் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனிக்கும்.

உறுப்பு நாட்டு நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோருக்கான மேடையாக, 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜி-20 அமைப்பு, 2008 ஆம் ஆண்டு உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடியைத் திறம்படக் கையாண்டு தீர்வுகாணும் பொருட்டு,

ஜி–20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நிலையிலான அமைப்பாக உயர்த்தப்பட்டது. அப்போதிருந்து, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான உலக மேடையாக, ஜி-20 உருவெடுத்துள்ளது.

ஜி-20 நாடுகள், உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவிகிதமும், உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கும் பங்கு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆவது ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தக் காத்திருக்கும் இந்தியா, இதுவரை நடந்த அனைத்து ஜி-20 உச்சிமாநாடுகளிலும் பங்கேற்றுள்ளது.

அமெரிக்க, சீன வரிப்போரின் பின்னணியில் நடைபெற்ற இந்த ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், ஒசாகாவில் நடந்த உச்சிமாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, எரியாற்றல் பாதுகாப்பு, நிதி ஸ்திரத்தன்மை, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கள், சீர்திருத்தப்பட்ட பல்நிலை வர்த்தக அமைப்பு, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், பயங்கரவாதத்தை முறியடித்தல், பொருளாதாரக் குற்றங்கள் இழைத்துத் தப்பியோடிய நபர்களை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்புதல், உணவுப் பாதுகாப்பு, ஜனநாயக முறையில் தொழில்நுட்பங்கள் பகிர்வு மற்றும் நாடு விட்டு நாடு விரியும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்ளாத நிலையில், இம்மாநாட்டில், வளர்ந்து வரும் வர்த்தகத் தற்காப்பு மற்றும் தன்னிச்சையான தடைகள் குறித்தும் சில உறுப்புநாடுகள் கேள்வியெழுப்பின.

இந்த ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக இறுக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், நீடித்த வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து விவாதிக்க, உறுப்புநாடுகளுக்கு நல்ல வாய்ப்பை இந்த மாநாடு வழங்கியது.

ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே, சீனா, ஜப்பான், தென்கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன், கணிசமான அளவில், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், பரஸ்பரம் பரிவர்த்தனை செய்து கொண்டார்.

ஃபிரான்ஸ் வெளியுறவு அமைச்சருடன், இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திற்கான செயலுத்திகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள்  பேசினார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்திய உறவுகளின் வருங்காலம் குறித்து, அவர் ஸ்பெயின் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் அளவளாவினார். சிலி நாட்டுடன் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் விவாதித்தார். ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணம் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மேரைஸ் பெயின் அவர்களை சந்தித்துப் பேசினார்.

உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை முன்வைக்க, இந்தியாவுக்கு, ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

*********************************