இந்திய – மொரீஷியஸ் உறவுகளை வலுவாக்கும் ஜக்னாத் அவர்களின் இந்தியப் பயணம்.

(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

மொரிஷியஸ் பிரதமராக மீன்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப்ரவிந்த் ஜக்நாத் அவர்கள், சென்ற வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது பயணம் அமைந்துள்ளது. 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட, இந்தியப் பெருங்கடலின் வெனிலா தீவு என்றழைக்கப்படும் மொரிஷியஸில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இதுவே, இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகிய அம்சங்களில் இயல்பாகவே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கக் காரணமாக உள்ளது..

பிரதமர் ஜக்நாத் அவர்களின் வருகை தனிப்பட்ட ஒன்று என்று புதுதில்லியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கான இடமான ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோதி அவர்கள் மொரீஇஷியஸ் பிரதமரை சந்தித்துப் பேசினார். இரு நாட்டுப் பிரதமர்களும் உறவுகளை வலுப்படுத்த தமக்கு உள்ள ஆர்வத்தை உறுதிப்படுத்தினர். சிறந்த பாதுகாப்பு கொண்ட, நிலையான, வளமான நாடாக மொரிஷியஸ் உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குக்கு இந்தியாவின் ஆதரவைப் பிரதமர் மோதி அவர்கள் உறுதிப்படுத்தினார்.

வலுவான மொரிஷியஸைக் கட்டமைக்கும் லட்சியத்திற்கு இந்தியாவின் இதயபூர்வமான, தொடர்ந்த ஆதரவு உண்டு என்பதை மொரிஷியஸ் அரசுக்கும் மக்களுக்கும் இந்தியப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். தீவு நாடான மொரிஷியஸில் முதல் மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், காது மூக்கு தொண்டை நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனை, சமூக குடியிருப்புத் திட்டம் போன்ற பல  வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு  இந்தியா அளித்து வரும் தொடர் ஆதரவுக்கு அந்நாட்டுப் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மொரிஷியஸ் மக்களுக்கு உண்மையான பலன்களை நல்கியுள்ளன. மொரிஷியஸுடனான தனது, பொருளாதார, அரசியல் உறவுகளை, பல ஆண்டுகளாக,  கவனமாகப் பராமரித்து வரும் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு மக்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளார்கள்.

மொரிஷியஸ் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதும், இந்தியாவுடனான ஒத்துழைப்புக்கான சாத்தியக் கூறுகளை ஆழப்படுத்துவதும் புதிய அரசின் முன்னுரிமைகளாக இருக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜக்நாத் பாரதப் பிரதமரிடம் தெரிவித்தார். இந்த முயற்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஜக்நாத் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததுடன், விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார் பிரதமர்  நரேந்திர மோதி அவர்கள். அந்த அழைப்பை  ஏற்று, தனது கட்சியான மிலிடன்ட் சோஷியலிஸ்ட் மூவ்மென்ட் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஒரு மாதத்திற்குள், தனது மனைவியுடன் இந்தியாவுக்கு வருகை புரிந்தார் பிரதமர் ஜக்நாத் அவர்கள்..

பிரதமர் ப்ரவிந்த் ஜக்நாத், மொரிஷியஸின் ஒப்பற்ற பிரதமராக விளங்கிய அனிருத் ஜக்நாத் அவர்களின் மகனாவார். இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர்களால் கரும்புத் தோட்டங்களில் பணி செய்ய, இந்தியாவைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் மெரீஷியஸ் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். இன்று, இந்த இந்திய வம்சாவளியினர், மொரீஷியஸ் நாட்டின் பெருமை மிக்க பிரஜைகளாக உள்ளனர். அந்தத் தீவின் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட தன் தந்தையின் பாரம்பரியத்தை மகனும் தொடர்கிறார். தான் அமைந்திருக்கும் இடத்தால், உலகின் வல்லரசுகளின் சிறப்புப் பார்வையில் இருக்கும் மொரீஷியஸ், இந்தியாவுடனான தொடர்புகளைத் தொடரவும் வலுப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கிறது. மொரிஷியஸ் மக்கள், இந்தியாவின் செயலுத்தி ஆர்வங்களுக்கு  முக்கியத்துவம் அளித்துப் பாதுகாக்கின்றனர்.

இந்தியப்பெருங்கடலின் நட்சத்திரம் என்றும் திறவுகோல் என்றும் ஐரோப்பியப் பயணிகளால் மொரீஷியஸ் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல் வழித்தொடர்புகளைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவரும் நோக்கில், மொரிஷியஸில் தடம் பதிக்க ஐரோப்பிய நாடுகள் என்றுமே முயன்று வந்துள்ளன. முதல் முறையாக, 2015 ஆம் ஆண்டு போர்ட் லூயிஸுக்குப் பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியப் பெருங்கடலில், அனைவருக்குமான பாதுகாப்பும் வளர்ச்சியும் என்று பொருள்படும் இந்தியாவின் செயலுத்தியான ’சாகர்’ என்பது குறித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள் செய்யும் நாடுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள மொரிஷியஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆப்பிரிக்க  ஒன்றியம், இந்தியப் பெருங்கடல் விளிம்பு அமைப்பு, இந்தியப் பெருங்கடல் ஆணையம் ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ள மொரிஷியஸ், ஆப்பிரிக்க கண்டம் மற்றும் இந்தியப்பெருங்கடல் விளிம்பு நாடுகளில் இந்தியாவுக்கு உள்ள பொருளாதார மற்றும் செயலுத்தி வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்த உதவும்.

இரு நாடுகளும் பரஸ்பரம் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஆற்றக்கூடிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டுப் பிரதமர்களும், பரஸ்பர ஆர்வங்களையும் முன்னுரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டு, பன்முகத் தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளைக் கட்டமைக்கவும் ஒத்துழைப்புக்கான புதிய வழிமுறைகளைக் கண்டெடுக்கவும் இணைந்து உழைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

இரு நாட்டு மக்களுக்கிடையில் பொதுவான கலாச்சார உறவுகள் உள்ள நிலையில், பிரதமர் ப்ரவிந்த் ஜக்நாத் அவர்களின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கிடையிலான செயலுத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்றால் அது  மிகையன்று.