இந்தியாவின் பிராந்தியப் பொருளாதாரப் பரிவர்த்தனைகளுக்கான செயலுத்தி – 2020 க்கும் அப்பாலும்.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.)

2020 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவ்வேளையில், இந்தியாவின் தெளிவான, திட்டமிட்ட, பிராந்தியப் பொருளாதார செயலுத்தி நடவடிக்கைகள், ராஜீய அதிகார மையங்களில் தென்படத் துவங்கியுள்ளன. சர்வதேச நாடுகளின் மத்தியில் தங்களது குரல் ஒலிக்க வேண்டும் என்றால், இருப்பதை வைத்து திருப்திபட்டுக் கொள்வது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், சிறிது நியாயமற்றதாகத் தோன்றினாலும், தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளை இந்தியா ஏற்று வந்தது. அண்மைக் காலம் வரை, அதுவே, பிராந்திய அளவில் முக்கியத்துவமும் பெற்றிருந்தது.  ஆனால், பிராந்திய அளவிலான விரிவான பொருளாதாரக் கூட்டாளித்துவ அமைப்பான ஆர்சிஈபி (RCEP) யிலிருந்து  இந்தியா வெளியேறியதன் மூலம், அத்தகைய எண்ணம் தடாலடியாக மாறியுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். பிராந்திய அளவிலான செயலுத்திகளை செயல்படுத்த, பாரபட்சமான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற சில சகிப்புத் தன்மைகள் தேவை என்ற கண்ணோட்டமும் புறந்தள்ளப்பட்டுள்ளது.

ஆர்சிஈபி (RCEP) யிலிருந்து  வெளியேறுவது என்ற முடிவை பாங்காக் உச்சி மாநாட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு மோதி அவர்கள் எடுத்தார். இந்தியாவின் விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பாதிக்கும் அம்சங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இந்தியா  இது போன்ற அமைப்புகளிலிருந்து வெளியேற ஒரு போதும் தயங்காது என்ற இந்தியாவின் ஆணித்தரமான முடிவு உலகுக்குத் தெளிவாகவும் உரக்கவும் சொல்லப்பட்டது. பொருளாதாரத் தூதாண்மை நடவடிக்கைகள் மற்றும் தேச நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் நோக்கிலேயே இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்கும். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழும் இந்தியா, அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதாரம் என்ற அளவை எட்டவுள்ளது. இத்தகைய வளர்ச்சியை எட்டும் முயற்சியில், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த உத்தியையும் இந்தியா ஒரு பொழுதும் பின்பற்றாது.

இந்தியாவின் வர்த்தக உடன்படிக்கைகள், பெரும்பாலும்,  கிழக்காசிய நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’ மற்றும் ‘கிழக்கு நோக்கிய செயல்பாடுகள்’ ஆகியவற்றின் வெளிப்பாடு இவை என்பது கண்கூடு. இருப்பினும், பெரிய அளவில் வர்த்தகப் பற்றாக்குறை, சந்தைகளில் இந்தியப் பொருள்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளின் குறைவான செயலாக்கம் போன்ற இந்தியாவிற்குப் பாதகமான அம்சங்கள் இந்தத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளில் உள்ளன. முன்னுக்கு பின் முரணான வெளிநாட்டு செயலுத்தி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும், உள்நாட்டு நலன்களையும், துறைகளையும் பாதுகாக்க  வேண்டும் என்ற நியாயமான கொள்கைகளுக்கும் இடையே, தூதரக அதிகாரிகளுக்கு, வர்த்தக ஒப்பந்தங்களை எந்தத் திசையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை அரசு தெளிவாகக் கூறியுள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நலிவுற்ற, இயலாமை நிலையோடு, இந்தியா  ஒருபோதும் அணுகாது. உள்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து, சமநிலையோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலேயே ஒப்பந்தங்ளை இந்தியா முடிவு செய்யும் என்பது தெளிவாகப் பறைசாற்றப்பட்டுள்ளது.

பொருளாதார ஒப்பந்தங்கள் விஷயத்தில் இந்தியா தற்காப்பு அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதோ என்று, பிறநாடுகள் கொள்ளும் ஐயப்பாட்டினைப் போக்கும் வகையில், தற்போதுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும், புதிய, நியாயமான, சமத்துவமிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்தியா தயார் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுடன், தற்சமயம் செய்யப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில், மறு  ஆய்வுக்கான ஷரத்துகள் உள்ளன. இந்த ஷரத்துகள் படி  இந்தியா மூல உற்பத்தி விதிகளையும், கட்டணம் சாரா தடைகள் குறித்தும் பேச முடிவு செயதுள்ளது. இதே அடிப்படையில், ஐரோப்பிய யூனியனுடன் தடைபட்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டு உடன்படிக்கைக்கான விரிவான அம்சங்கள் குறித்த பேச்சுவார்த்தையையும் இந்தியா மீண்டும் துவக்க உத்தேசித்துள்ளது. சிக்கலான விஷயங்களான வேளாண் சந்தைக்கான அணுகுமுறை, கட்டண அமைப்பு மற்றும் அறிவு சார் சொத்துரிமை ஆகியவற்றைப் புதிய கண்ணோட்டத்துடன் அணுகித் தீர்வு காண இரு தரப்பும் முன்வந்துள்ளன. இந்தியா, அமெரிக்காவுடனும் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பிரெக்ஸிட்டுக்கு, அதாவது, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து வெளியேறுவதற்குப் பிந்தைய பிரிட்டனுடன், சுதந்திரமான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட இந்தியா உத்தேசித்துள்ளது. கணிசமான அளவில் பயனடையும் வகையில், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யூரேஷியப் பொருளாதாரக் கூட்டமைப்பு நாடுகள் ஆகியவற்றுடன், பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தடையற்ற மற்றும் நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டில், உலக அளவிலும் பிராந்திய அளவிலும் ஒருங்கிணைந்து  பங்காற்ற  விரும்புவதை இந்தியா கோடிட்டுக் காட்டியுள்ளது. தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன், சம்பந்தப்பட்டவர்களுடன் வெளிப்படையான முறையில் ஆலோசனைகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. இத்தகைய உடன்படிக்கைகள் குறித்த முடிவுகள் அவசர கதியில் எடுக்கப்பட மாட்டாது. போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட பிறகே தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் அமல்படுத்தப்படும். எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சரக்கு துறையின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்படமாட்டாது. இந்தியாவின் பலமிக்க துறையாக விளங்கும் சேவைத் துறையிலும் கவனம் செலுத்தப்படும். இந்தியாவின் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், 2020 ஆம் ஆண்டு, புதிய மற்றும் பிரகாசமான அத்தியாயத்திற்கான துவக்கம் என்றால் அது மிகையல்ல.