இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் சிங்கப்பூர்.

(தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா அவர்களின் ஆங்கில உரையின்  தமிழாக்கம்- லட்சுமண குமார்)

சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கை  ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் ஷண்முகரத்தினம் அவர்கள், இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும், நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும் மற்றும் பிற தலைவர்களையும் சந்தித்தார். சிங்கப்பூரின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சைகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் அவருடன் வந்தனர். அவர் மஹாராஷ்டிர முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே அவர்களையும் மற்றும் பிற தொழிலதிபர்களையும் மும்பையில் சந்தித்தார்.

அவரது இப்பயணத்தின்போது,  இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு  அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, திறன் வளர்ச்சி மற்றும் இந்தியா – சிங்கப்பூர் விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் முதலியன குறித்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன் அவர் நடத்திய  பேச்சுவார்த்தை இதற்கு சான்றாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி.20 நாடுகள் அமைப்பின்  உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு சிங்கப்பூரின் ஆதரவை அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ஏறுமுகத்தில் உள்ள இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம், 2019 ஆம் ஆண்டில் 2600 கோடி அமெரிக்க  டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இந்தியாவும்,  சிங்கப்பூரும்  இருதரப்பு வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று நன்கு உணர்ந்துள்ளன. ஆர்சிஈபி (RCEP) எனப்படும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதாரக் கூட்டாளித்துவ அமைப்பிலிருந்து வெளியேறுவது என்ற இந்தியாவின் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து,  இந்தியா – சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம்,  2005 ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையே கையெழுத்தான சிஈசிஏ (CECA)  எனப்படும் விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மூலமே நிர்வகிக்கப்படும். இந்த ஒப்பந்தம் இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு மறு  ஆய்வு செய்யப்பட்டது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களுக்கு சிங்கப்பூரை எளிதாகவும், விரிவாகவும் அணுகக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் இரு தரப்பு வர்த்தகம் மேலும் வலுவடையும்.

இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களின் மீது சிங்கப்பூர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிய அமைச்சைர்  ஷண்முகரத்தினம் அவர்கள், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவில்,  குறிப்பாக, தொழில் நுட்பப் பூங்காக்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீடு அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரம் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி கண்டு வரும் வேளையில், இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்துள்ள சிங்கப்பூரின் நடவடிக்கை நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யும் நாடு சிங்கப்பூர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

தனது உள்கட்டமைப்பு இலக்குகளை எட்ட சிங்கப்பூர் உதவி செய்ய வேண்டும் என்று இந்தியா, அமைச்சர்  ஷண்முகரத்தினம் அவர்களிடம் கோரிக்கை வைத்தது. என்ஐபி (NATIONAL INFRASTRUCTURE PIPELINE) எனப்படும் தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தை சமீபத்தில் துவக்கிய இந்தியா, 102 லட்சம் கோடி மதிப்பில் அரசு  செலவு  மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.  இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் தரமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால், இதற்குப் பெரிய அளவில் பொருள் தேவை உள்ளதால், காலங்காலமாக உற்ற துணையாக விளங்கும் சிங்கப்பூரை உதவிக்கு அழைத்திருப்பது  இந்தத் திட்டம் விரைவில் வெற்றி பெருவதற்கு வசதியாக இருக்கும்.

சிங்கப்பூர் துவங்கியுள்ள என்டிபி ( ‘NETWORKED TRADE PLATFORM (NTP) INITIATIVE’)   எனப்படும் வர்த்தக மேடை வலைய முன்னெடுப்புத் திட்டத்தில் இரு நாடுகளும் இனைந்து செயல்படுவது என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. சிங்கப்பூரின் சுங்கத் துறையும்  அரசு தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயல்படுத்தும்  இத் திட்டம்,  டிஜிட்டல் சார்ந்த ஒன்று என்றும், தடையற்ற துரிதமான முறையில் வர்த்தகம் மேற்கொள்ள உதவும் திட்டம் என்றும் புகழப்படுகிறது.  டிஜிட்டல் இ – வர்த்தகத்தில்  சிங்கப்பூருடன் கூட்டாளித்துவம் செய்து கொண்டுள்ள இந்தியா, இதன் மூலம் தொழிலாளர் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து, தொழில் நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு மாறுவதற்குப் பெரிதும் துணை புரியும்.

இதுவே  இப்போது இந்தியாவிற்கு தேவையும் கூட. இந்திய ரிசர்வ் வாங்கி ஏற்பாடு செய்திருந்த ” பரவலான செழிப்பு – அடிப்படை விஷயங்களைக் கையாளுதல்” என்ற தலைப்பில், அமைச்சர்  ஷண்முகரத்தினம் அவர்கள் சுரேஷ் டெண்டுல்கர் நினைவு சொற்பழிவாற்றினார். மனித மூலதனத்தில் அமைப்பு ரீதியில் மாற்றங்கள் மற்றும் சுத்தமான மற்றும் பொலிவான நகரங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார். மனித மூலதனம் குறித்துப் பேசிய அவர், கல்வி, சுகாதாரம், திறன்  சமன் செய்தல் மற்றும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் முதலியனவற்றில் மாற்றங்கள் தேவை என்று குறிப்பிட்டார். உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலைகலன்களாக புதிய நகரங்கள் அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தனது நகரங்களை சுத்தமானதாகவும், அழகானதாகவும் வைத்துக் கொள்வதில் சிங்கப்பூரிடமிருந்து இந்தியா நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு சார்ந்த செயல்பாடு, இந்திய மக்கள் சிங்கப்பூருக்கு  அதிகளவில் சுற்றுலா  செல்வதன்  மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 லட்சமாகும். சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லும் உலகப் பயணிகளின் எண்ணிக்கையில், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா வரும்  சிங்கப்பூர் மக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.