இந்தியா-லாட்வியா உறவுகளில் புதிய உத்வேகம்.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

லாட்வியாவின் வெளியுறவு மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்ஸின் அதிகாரபூர்வ இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. 2016 செப்டம்பர் மாத்தில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள், லாட்வியாவுக்கு விஜயம் செய்திருந்தார். லாட்வியா பிரதமர் 2017 நவம்பரில் இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டார். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு அவர்கள், 2019 ஆகஸ்ட் மாதம் லாட்வியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

லாட்வியாவுடனான இந்தியாவின் உறவுகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. 1921 செப்டம்பர் 22 ஆம் தேதியன்று, லாட்வியா உலக நாடுகள் சங்கத்தில் சுயாதீன உறுப்பினரானது. 1920 ஜனவரி 10 முதல் இந்த சங்கத்தை நிறுவிய உறுப்பு நாடுகளுள் ஒன்றான இந்தியா, உலகின் முதல் பலதரப்பு அமைப்பில் லாட்வியா உறுப்பினராவதற்கு ஆதரவு அளித்தது.

உலக நாடுகள் சங்கத்தில், இந்தியாவும் லாட்வியாவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தில் ஆரம்பகாலத் தொடர்புகளைத் தங்களுக்குள் உருவாக்கின.   லாட்வியாவின் அறிவுசார் ஒத்துழைப்புக்கான தேசியக் குழு, 1923 ஆம் ஆண்டில் ரிகா பல்கலைக்கழகத்தில் லாட்வியன் வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1930 களில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கான லீக்கின் சர்வதேசக் குழுவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.1946 இல் பாரீஸில் ஐ.நா கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் அமைப்பை (யுனெஸ்கோ) நிறுவுவதில் இந்தக் குழுவுக்குப் பெரும்பங்கு உண்டு.

2019 ஜனவரி 13 அன்று, லாட்வியாவின் வெளியுறவு அமைச்சர், புது டெல்லியில் உள்ள லாட்வியன் தூதரகத்தில் ஜே.என்.யுவின் பேராசிரியர் சாதனா நைதானி எழுதிய “பால்டிக் வரலாற்றில் நாட்டுப்புறவியல்” (Folklore in Baltic History) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த முக்கியமான படைப்பு பால்டிக் நாட்டுப்புறப் பாடல்களின் கதையையும், சுதந்திர இயக்கங்களில் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் சொல்கிறது.

மகாத்மா காந்தியின் தலைமையில், நாட்டு விடுதலைப் போரில் அகிம்சையைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் வெற்றி குறித்த வலுவான விழிப்புணர்வு லாட்வியாவிலும் எதிரொலித்தது. அகிம்சை சுதந்திர இயக்கம் மூலம் 1991 ல் சுதந்திர லாட்வியா மீண்டும் தோன்றியதை இந்தியா வரவேற்றது. லாட்வியன் வெளியுறவு அமைச்சர் ரிங்கெவிக்ஸ் தனது அதிகாரபூர்வ பயணத்தின் முதல்கட்டமாக ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அண்ணல் காந்தியடிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்தார்.

இந்த வரலாற்றிலிருந்து, இந்தியாவுக்கும் லாட்வியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கான அடிப்படையைப் புரிந்துக்கொள்ளலாம். ரிகா பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 1500 இந்திய மாணவர்களை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக்கழகம், 2013 முதல் இந்திய ஆய்வுகள் மற்றும் கலாச்சார மையத்தை திறந்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பால்டிக் ஆய்வுகள் துறை மற்றும் “இந்தோ-பால்டிக் கலாச்சாரம் மற்றும் ஆய்வுகளின் சர்வதேச இதழை” வெளியிடும் ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி பல்கலைக்கழகம் ஆகியவை இருதரப்புக் கல்வி ஒத்துழைப்புக்கு இயற்கையான கூட்டாளிகளாகப்பணியாற்றுகின்றன.

பால்டிக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் ஒன்றான லாட்வியா, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் குடிமக்களின் அதிகாரம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.  தனது டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இந்த முன்னுரிமையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு, குறிப்பாக, பெண்களுக்கான திறன் மேம்பாடு உட்பட, டிஜிட்டல் துறையில் லாட்வியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

சாகர் எனப்படும்  ‘பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ என்ற கொள்கையின் கீழ், 2015 மார்ச் மாத்தில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல்சார் நலன்களை வெளிப்படுத்தினார். ரிகாவின் துறைமுக நிர்வாகம் உட்பட வலுவான கடல்சார் பாரம்பரியத்தைக் கொண்ட லாட்வியா, இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் கடல்சார் செயலுத்திகளில் ஒரு சாத்தியமான பங்காளியாகும். இதையொட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியாவுடன் இணைக்கும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்துத் தாழ்வாரம் உட்பட, இந்தியாவிற்கும் லாட்வியாவிற்கும் இடையிலான கடல் இணைப்பிற்கு இது ஒரு உத்வேகத்தை வழங்கும்.

2020 ஜூன் மாதத்தில், இந்தியா, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இரண்டு ஆண்டு காலத்திற்குத் (2021-22) தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில், லாட்வியா 2026-27 இல் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இருப்பதற்கான கோரிக்கையை அறிவித்துள்ளது. இரு நாடுகளும் பயனுள்ள மற்றும் சமமான பல்நிலைத் தன்மைக்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. கவுன்சிலின் செயல்பாட்டு நடைமுறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ சலுகையை நீக்குதல் ஆகியவை, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தத்தின் மூலம் மட்டுமே நிகழ முடியும்.

இந்தியாவும், லாட்வியாவும் இந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள், சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில், பல்நிலை சீர்திருத்தத்தின் மூலம் வெற்றி பெறும். அதற்கான முதல் வாய்ப்பு 2020 செப்டம்பர் 21 அன்று, 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும்.