வளர்ச்சிப் பாதையில் இந்திய-அமெரிக்க உறவுகள்

டாக்டர். ஸ்துதி பேனர்ஜி, அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  ஸ்ரீபிரியா சம்பத்குமார்

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச்  செயலர் திருமதி அலைஸ் வெல்ஸ் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேத்யு போடிங்கர் ஆகியோர், தொடர்ச்சியான பல இருதரப்பு சந்திப்புகளில் கலந்து கொள்ளவும், ஐந்தாவது ராய்சினா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவும் இந்தியா வந்தனர். திருமதி வெல்சின் இந்த பயணத்தில், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கான பயணங்களும் அடங்கும்.  

ராய்சினா பேச்சுவார்த்தைகளின் போது, மேத்யூ போடிங்கர், இந்தோ-பசிஃபிக் பகுதி, ஒரு சீரான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகக் கூறினார். சட்டத்தின் ஆட்சி, வானம் மற்றும் கடலில் சுதந்தர போக்குவரத்துக்கான உறுதி, திறந்த வெளி வர்த்தகத்திற்கான ஊக்கம், திறந்த மனப்போக்கு, அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கான உண்மையான மதிப்பு ஆகியவை நிறைந்த நாடுகளின் சமூகமாகும் இந்தோ-பசிஃபிக் பகுதி என்று அவர் வர்ணித்தார். இந்தப் பகுதி, சுதந்திரமாகவும், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியும் இருப்பதோடு, பொதுவாக இருக்கும் கோட்பாடுகளையும் அனைத்து நாடுகளையும் பின்பற்றச் செய்கிறது. சுதந்தரமான இந்தோ-பசிஃபிக் பகுதியை ஆதரிக்கும் நாடுகள், ஆள்பவர்களின் நலனை விட, மக்கள் நலனை மையமாகக் கொண்ட நாடுகள் என அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்புச் செயலர் மேலும் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டதைத் தவிர, உதவிச் செயலர் வெல்சினுடைய பயணம், 2020 பிப்ரவரி மாதம், எதிர்பார்க்கப்படும் அதிபர் டிரம்பின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகின்றது. இது உறுதியானால், அதிபர் டிரம்ப், 2016-ல் பொறுப்பேற்றதிலிருந்து, அவர் மேற்கொள்ளப்போகும் முதல் இந்தியப் பயணமாக இது இருக்கும். பிரதமர் மோதியும் அதிபர் டிரம்பும் ஒரு நல்ல வலுவான உறவைக் கொண்டுள்ளனர். 2019-ல் டெக்சாசில் நடந்த ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் இது கண்கூடாகத் தெரிந்தது.

 இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது செயலுத்திக் கூட்டாளித்துவத்தை முன்னோகி எடுத்துச் செல்ல, வெவ்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றன. 2019 டிசம்பரில் நடந்த டு பிளஸ் டு பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் திருமதி. வெல்ஸின் பயணம் இருப்பதாகப் பார்க்கப் படுகின்றது. சிவிலியன் துறைகளில் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஐ.எஸ்.ஏ எனப்படும் தொழில்துறை பாதுகாப்பு அனெக்சில் இரு நாட்டினரும் கையொப்பம் இட்டனர். இதன் மூலம் முக்கிய ராணுவ ஆவணங்களை இந்திய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் தொழில்துறைகள் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும், டி.டி.டி.ஐ எனப்படும் பாதுகப்புத் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முயற்சிகளில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றம் பற்றியும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனியார் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையிலான கூட்டுறவிற்கு ஊக்கமளிக்கும் என நம்பப்படுகின்றது. பாதுகாப்பு புதுமுறைகாணலிலும் தங்களுக்குள் உள்ள உறவை முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மூத்த இந்திய அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்த திருமதி வெல்ஸ், சுதந்தரமான இந்தோ-பசிஃபிக் பகுதியின் பகிரப்பட்ட விருப்பங்கள், அது வளரச் செய்யும் செழுமை, ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவை உட்பட, பலதரப்பட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சனைகளைப் பற்றி பேசினார். தற்போதைய பேச்சுவார்த்தைகள், 2019- ஆம் ஆண்டு வாஷிங்டன் டி.சி.-யில் நடந்த, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கொண்ட நாற்கரத்தின், முதல் அமைச்சர்கள் நிலைச் சந்திப்பின் அடிப்படையில் விஷயங்களை முன்னெடுத்துச் செல்லும். இந்தோ-பசிஃபிக் பகுதிகளில் அதிவேக கூட்டுறவை வளர்க்கச் செய்ய, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு இன்னும் ஊக்கமுடன் கூடிய குறிப்பிடத்தக்க முனைப்பை அளித்தது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவிச் செயலர் இந்திய வணிக சமூகத் தலைவர்களையும் சந்தித்தார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் பேசி வருகின்றன. விவசாய மற்றும் பண்ணைத் துறைகள், உள்நாட்டுத் தொழில்துறைகளுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் சலுகைகள் ஆகியவை தொடர்பாக உள்ள கருத்து வேறுபாடுகளைப் பற்றி இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன.  

கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய-அமெரிக்க உறவுகள் மாறியுள்ளன. இரு நாடுகளும் இணைந்து உழைக்காத துறைகளே தற்போது இல்லை என்றே கூறலாம். கடந்த இருபது ஆண்டுகளாகச் சீராக விரிவாகிக்கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகளை வைத்துப் பார்க்கும்போது, இன்றளவில் இருக்கும் கூட்டுப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் வியத்தகு வகையில் உள்ளன. அரசாங்கத் தலைவர்களுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் இருதரப்பு உச்சிமாநாடுகள், தொடர்ந்து நடக்கும் மூத்த-அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகள் ஆகியவை இதற்குச் சான்றுகளாகும். மேலும், விரிந்த எல்லை கொண்ட பாதுகாப்புப் பயிற்சி ஏற்பாடுகள், பயங்கரவாத எதிர்ப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கூட்டுறவு போன்ற பல செயலுத்திக் கலந்துரையாடல்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன. இது தவிர, எரியாற்றல், கல்வி, அறிவியல் மற்றும் தொழிநுட்பம், பொது சுகாதாரம் மற்றும் கலை கலாச்சாரம் ஆகியவற்றிலும் கூட்டுறவு மேலோங்கி உள்ளது.