வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்

INDIA’S SUCCESSFULLY LAUNCHES GSAT-30

மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

14 வருடங்களுக்கு முன் ஏவப்பட்ட இன்சாட் – 4ஏ செயற்கைக்கோள் தனது ஆயுட்கால முடிவில்,  செயல்பாட்டை நிறுத்தவிருக்கும் தருவாயில், தடையில்லாத் தொடர்புச் சேவைகள் தொடர, இம்மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்ட 41ஆவது தொலைதொடர்புச் செயற்கைக் கோள் ஜிசாட்-30 மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள கேபிள் நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் ஒலி/ஒளிபரப்பு செய்ய இன்சாட் 4 ஏ செயற்கைக்கோளைப் பயன்படுத்தி வந்தன. இந்தச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி இன்னும் 15 வருடங்களுக்குத் தொடர இந்த ஜி சாட்- 30 உதவும்.

ஃப்ரென்ச் கயானாவின் கௌரௌவில் உள்ள ஐரோப்பிய விண்வெளித் தளமான கயானா விண்வெளி மையத்திலிருந்து ஏரியேன்ஸ்பேஸின் ஏரியேன் -5 ராக்கெட்டின் மூலம் ஜி சாட்-30 ஏவப்பட்டது. 1981ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஆப்பிள்-ஐ ஏவிய ஏரியேன்ஸ்பேஸ்-ஆல் செலுத்தப்படும் இந்தியாவின் 24 ஆவது செயற்கைக்கோளாகும் இந்த ஜிசாட்-30. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தொலைதொடர்புச் சேவைகளை வழங்கக்கூடிய புதிய தலைமுறை செயற்கைக்கோளான யூடெல்சாட் கனெக்ட்-ஐயும் இந்த ஏர்யேன் – 5 சுமந்து சென்றது.

15 ஆண்டு ஆயுட்காலம் கொண்ட இஸ்ரோவின் இந்த உயர் ஆற்றல் தொலை தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30,  வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய அலைவரிசைப் பிரிவுகளையும் சேவை எல்லையையும் வழங்கக்கூடிய தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தடையில்லா தொலைதொடர்புச் சேவைகளைத் தொடர இன்சாட்-4ஏ வின் பணியை இப்போது இந்தச் செயற்கைக் கோள் தொடங்கும். இன்சாட் 4 ஏ தனது ஆயுட்கால இறுதியை எட்டுகிறது. 12 சி மற்றும் 12 கேயூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஜிசாட் -30 தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டி.டி.எச் சேவைகளை மேம்படுத்தும். இந்தியப் பகுதிகளுக்கும் தீவுகளுக்கும் சேவை வழங்க கேயூ ட்ரான்ஸ்பாண்டர்களும் இந்தியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளுக்கு இருவழித் தொடர்புச் சேவை வழங்கவும் தொலைக்காட்சி ஒலிபரப்பை வழங்கவும் சி பேண்ட் ட்ரான்ஸ்பாண்டர்களும் பயன்படுத்தப்படும். செயற்கைக் கோளின் உள்ள ட்ரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக உயர்த்தும் வகையில் பேலோட் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவிக்கிறது. இது சேவை எல்லையை விரிவுபடுத்தவும் இந்திய ஒளிபரப்பாளர்கள் தங்கள் சேவைகளை மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கவும் உதவும்.

இந்திய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, இந்த  விண்கலம் தற்போதுள்ள விசாட் அல்லது மிகச் சிறிய துளை முனைய நெட்வொர்க், தொலைக்காட்சி அப்-லிங்கிங் மற்றும் டெலிபோர்ட் சேவைகள், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் பல செயற்கைக்கோள் சார்ந்த பயன்பாடுகள் தொடர உதவும். டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு அமைப்புகளை பராமரிக்க இது உதவும், இது இந்தியாவில் உள்ள செய்தி நிருபர்கள் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களிலிருந்து தொலைதூர இடங்களுக்கு நிகழ்நேரத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்கிறது. இந்தச் சேவை, மேற்கில் ஐரோப்பாவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது.

.

புதிய மேம்பட்ட தொழிநுட்பத்தின் உதவியுடன் 2030கள் வரை செயலபடக்கூடிய வகையில் ஜிசாட்-30 வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவிக்கிறது. அண்மைக்காலங்களில்,  தொடர்ந்து பல வெற்றிகரமான செலுத்துதல்களை நிகழ்த்திச் சாதனை படைத்து வரும் இஸ்ரோ, சில தனியார் நிறுவனங்களின்  சேவைகளையும் பெற்று வருகிறது. ஜி சாட்-30 செயற்கைக்கோள் கட்டுமானம், ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற  நிறுவனத்தின் தலைமையில் அமைந்த ஒரு கூட்டமைப்பின் உதவியுடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் ஜிசாட் -30 ஐ ஏவுவதற்கான இஸ்ரோவின் முடிவு, செயற்கைக்கோள் அடிப்படையிலான தடையில்லா தகவல் தொடர்பு இணைப்புகளை அதன் பயனர்களுக்கு உறுதி செய்வதற்கான நடைமுறை அணுகுமுறையின் வெளிப்பாடாகும். இது அதன் நம்பகத்தன்மையைத் தக்கவைக்க, இன்றியமையாதது.

.

எதிர்காலத்தில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக ராக்கெட் உற்பத்தியை இஸ்ரோ அவுட்சோர்சிங் செய்யும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் கூறினார். இஸ்ரோவின் சிறப்புக்குப் பெயர் போன பி எஸ் எல் வி ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பணியை, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களின் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு மேற்கொள்ளும்.   இந்த கூட்டமைப்பு அதிக எடை கொண்ட, ஜியோ-ஸ்டேஷனரி ஏவுதல் வாகனம் (ஜி.எஸ்.எல்.வி) வகை ராக்கெட்டுகளையும் உருவாக்கும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பத்தாயிரம் கோடி ரூபாய் உட்பட, அரசு ஒதுக்கியுள்ள முப்பதாயிரம்   கோடி ரூபாயில் 80% தனியார் துறைக்குச் சேரும்.

இந்திய மண்ணிலிருந்து முதல் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இப்போது தயாராகி வருகிறது. 2022 ஆம் ஆண்டில் நாட்டின் சுதந்தரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னதாக முதல் இந்தியக் குழுவினரை பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் தொடர் வெற்றிகளின் பின்னணியில் இதுவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.