மேற்கத்திய நாடுகளுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுமா?

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பிரிவின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

ஈரானிய ஜெனரல் காசிம் சொலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரானின் அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தை எழுப்பினால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், அது அந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது, சர்வ தேச அளவிலும் அணு ஆயுதத் தடை என்ற நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சொலைமானி கொலையால் ஏற்பட்ட மற்ற அனைத்துத் தாக்கங்களையும் ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய ஆபத்தான சூழல் இதனால் உருவாகும். ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் என்று அறியப்படும் விரிவான கூட்டுச் செயல் திட்டம்(JCPOA) என்ற ஒப்பந்தம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், ஃப்ரான்சு, ஜெர்மனி ஆகிய  மூன்று ஐரோப்பிய நாடுகளால் பேணப்பட்டுவரும் சர்ச்சை தீர்வு வழிமுறை தூண்டப்பட்டதன்  எதிர்வினையாக ஈரானின் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா  அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்ந்தால், ஈரான் விலகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்த சர்ச்சை தீர்வு வழிமுறை செயல்பாடு, அதைத் தொடர்ந்து ஐ நா வில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்ற குறிப்பு இவை, ஐ நா பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க வழிவகுக்கும். ஏற்கெனவே அமெரிக்கா, ஒரு தரப்பாக விதித்துள்ள தடைகளால் உள் நாட்டில் பல சிக்கல்களை ஈரான் சந்தித்து வருகிறது. கூடுதலாக, பலதரப்பு தடைகள் விதிக்கப்பட்டால், அது உள் நாட்டு நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். தவிர, இஸ்லாமிய ஆட்சி, ஈரான் அரசு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களும் வெடிக்க வாய்ப்பு உள்ளது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே ஈரான் செயல்படுகிறது என்று சர்வதேச அணு சக்தி அமைப்பு சான்றளித்திருந்த போதிலும் 2018 மே மாதம் அமெரிக்கா இதிலிருந்து விலகுவதாக அதன் அதிபர் டோனல்டு டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போதைய ஈரான் – அமெரிக்கா மோதலுக்கு இதுவே காரணமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இதற்கு ஒரு சுமுகத் தீர்வு காணும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஓராண்டு காத்திருந்த ஈரான், 2019 மே மாதம் தான் இந்த விதிகளுக்குக் கட்டுப்படப்போவதில்லை என்று அறிவித்தது.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் பணியின் வேகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து ஈரான் வெளியேறுவது இந்த யுரேனியம் செறிவூட்டும் பணி மேலும் வேகம் பெறவே வழி செய்யும். இந்த ஒப்பந்தத்தின்  மற்றொரு முக்கிய அம்சம், ஈரானின் அணு ஆயுதச் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது. ஈரான் வெளியேறுவதன் மூலம் தனது செயல்பாடுகளை உலகம் அறியாமல் செய்யமுடியும்.

ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை இழந்து விட்டால், அது மற்ற நாடுகள், குறிப்பாக, அதன் பிராந்திய போட்டியாளர் சவுதி அரேபியா,  அச்சத்தின் காரணமாக அணு ஆயுதப் போட்டியை வேகப்படுத்த காரணமாக அமையும். மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை எதிர்த்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஈரானின் அணு ஆயுத அமைப்புகளின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடும். இது தற்போதுள்ள பதற்றமான சூழலைப் போர்ச் சூழலாக மாற்றக்கூடிய அபாயமும் உள்ளது. பாரசீக வளைகுடா பகுதி ஹைட்ரோ கார்பன் செறிந்த பகுதி. இங்கு போர் மூளும் சுழல் வந்தால், அது உலகப் பொருளாதாரத்திற்கே பெரிய சிக்கலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹம்மத் ஜாவத் ஜரிஃப் சென்ற வாரம் இந்தியா வந்திருந்தார். அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர் அவர்களையும் சந்தித்து உரையாடினார். வளைகுடா பகுதியில் அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புவதாக அறிவிக்கப்பட்டது.

ஈரானின் அதிபர் அலுவலகத் தலைவர் மஹ்மூத் வெய்ஸி அவர்கள், அண்மையில், ஈரானும் சவுதி அரேபியாவும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று கூறியுள்ளது ஆறுதளிப்பதாக உள்ளது. பாரசீக வளைகுடா நாடுகள் பிராந்தியத்தில் அமைதியை மீட்க இணைந்து உழைப்பது அவசியம். பிராந்திய அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அணுஆயுதப் பரவலைத் தடுப்பதற்கும் இது முக்கியமாகக் கருதப்படுகிறது. தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைந்து இணைந்து செயல்பட தூதரக வழிமுறைகளை ஆய்ந்து  செயல்பட வேண்டியது இப்போது அவசியமாகிறது.