இந்திய அரசியல் சாசனம் : தேசத்தின் உச்சபட்ச சட்டம்

பேராசிரியர் பல்வீர் அரோரா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

மூன்றாண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆயுட்காலம் நீண்டதாக  இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் அன்றே கணித்திருந்தனர். இன்றும் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உறுதியான அடித்தளமாக இது விளங்குவது, அறிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு இதை உருவாக்கியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அஞ்சலியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது இந்திய அரசியலமைப்புச்சட்டம். எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இதன் அடிப்படைக் கட்டமைப்பு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. எண்ணிலடங்கா திருத்தங்களுக்குப் பிறகும் அதன் முகவுரையில் பட்டியலிடப்பட்டுள்ள கொள்கைகளே இன்றளவும்  ஒரு அதன் மீதான நம்பிக்கைக்கு ஒரு உந்து சக்தியாகவுள்ளது.

”இந்தியக் குடிமக்களாகிய நாம்” எனத் தொடங்கும் அந்த முகவுரையுடன், நீதி, சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவான இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாட்டின் உருவாக்கத்தை உலகத்துக்கு முன் அறிவிக்கப்படுகிறது. நாட்டின் கட்டமைப்பு குறித்தும் அங்கங்கள் குறித்தும் விரிவாக விளக்கும்   சட்டப்பூர்வமான ஆவணமாக மட்டுமல்லாமல், மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்தரங்கள் பற்றி விளக்கும் ஒரு உண்மையான சாசனமாகவும் இது விளங்குகிறது.

குடியரசுதினத்தன்று கொண்டாடப்படும் இந்திய அரசியல் சாசனம் எக்காலத்துக்கு பொருந்தும் ஆவணமாக உள்ளது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா ஒரு குடியரசு நாடானது. இன்றளவும் அது தொடர்கிறது. அரசியல் சாசனத்தின் மீது ஒவ்வொரு இந்தியனும் கொண்ட நம்பிக்கையின் காரணமாக இந்தியாவின் ஜனநாயகம் கடந்த 70 ஆண்டுகளில் வலுவடைந்துள்ளது.

ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும், ராஜ்பத்தில் நடக்கும் அணிவகுப்பின் போது,  இந்தியாவின் முப்படைகளின் ஆற்றல் காட்சிப்படுத்தப்படுகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களும் அரசியல் சாசனத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு நாளாகவும் இது விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவரது உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு ஆவணம் இந்த அரசியல் சாசனம். நாட்டின் புனித நூலாகக் கருதப்படும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும்  நிறைவேற்ற ஒவ்வொரு இந்தியரும் இந்த நாளில் உறுதி பூணுகிறார். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனத்தின் மீது பற்று வளர இதுவே காரணம்.

வெள்ளையர்களின் காலனி ஆட்சிக்கு எதிராக, மஹாத்மா காந்தியின் தலைமையின் கீழ் தேசம் முழுவதும் வெடித்த சுதந்தர[ப் போராட்டங்களின் விளைவாக இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். காந்தியடிகளின் அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட டாக்டர் பி ஆர் அம்பேத்கர், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி குறித்த வாக்குறுதிகளை மேலும் விரிவாகவும் நுணுக்கமாகவும் அரசியல் சாசனத்தில் விவரித்தார்

கூட்டாட்சி கட்டமைப்பைக் கைக்கொள்வது இந்த சாசனத்தின் மற்றொரு சிறப்பம்சம். மாநிலங்களின் கூட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் இந்தியக் குடியரசு, மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி நிர்வாகத்தையும் உருவாக்கியுள்ளது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம், கூட்டாட்சி முறை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. பல மேற்கத்திய குடியரசுகளைப் போல் அதிக அதிகாரம் மைய அரசிடம் என்றில்லாதது இந்தியாவின் சிறப்பம்சம்.

அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் உரிமைகளும் அடிப்படை சுதந்தரங்களும்  சட்டப்பூர்வமான ஜனநாயகம் என்பதற்கான முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனை உச்ச நீதிமன்றம் பல முறை அங்கீகரித்துள்ளது. வாழும் உரிமை என்பதை கண்ணியத்துடன் வாழும் உரிமை என்று விரிவாக்க இது உதவியுள்ளது. கருத்துரிமை, தகவலறியும் உரிமை, தனி நபர் தனியுரிமை ஆகியவை இந்தியாவின் ஜனநாயகத் தன்மைக்கு வலுசேர்க்கின்றன. உலகின் மற்ற குடியரசு நாடுகள் பலவற்றைக் காட்டிலும் இந்தியக் குடியரசின் வளர்ச்சி அபாரமானதாக இருந்து வந்துள்ளது. இந்தியக் குடியரசின் சிறப்பான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுவதாக நமது அரசியல் சாசனம் உள்ளது. வரும் காலங்களில் இந்தியக் குடியரசுடன் தங்களை இணைக்கும் இந்த சாசனத்திற்கு குடிமக்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டியது அவசியம்.