பொருளாதார அமைப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கத் தவறிய இம்ரான் கான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

அதிகம் பேசப்பட்ட பயணமாக, உலகப் பொருளாதார அமைப்பு, 2020 கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் டாவோஸுக்கு மேற்கொண்ட பயணம் நிகழ்ந்தது. சுவிட்ஸர்லாந்து சொகுசு விடுதியில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை சந்தித்தார். அவர் வழக்கம் போல், இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்செடுத்தார். இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்ட பின்னர், செயலுத்தி ரீதியாக பாகிஸ்தான் எவ்வளவு வலுவாக உள்ளது என்று உலகம் அறிந்து கொள்ளும் என்றும், தமது நாட்டில் பயங்கரவாதம் இல்லையென்றும் அவர் கூறினார்.

இதனைவிட உண்மைக்குப் புறம்பான நிலை ஏதும் இருக்க முடியாது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் அரசின் முழு ஆதரவுடன் தலைவிரித்து ஆடுகிறது. பாரீஸிலுள்ள பயங்கரவாத நிதித் தடுப்பு அமைப்பான நிதி நடவடிக்கைப் பணிக்குழு, தனது அடுத்த கூட்டத்தில் பாகிஸ்தானை பட்டியலில் இணைப்பதற்கான முடிவை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தமது நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், தாக்குதல்களை நடத்தாமல் இருக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

டாவோஸில் இந்தியா குறித்தும், இந்திய, பாகிஸ்தானிய உறவுகள் குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் விமரிசனம் செய்ததில் வியப்பேதும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. உண்மைக்குப் புறம்பாகவும், முன்பின் முரணாகவும் இம்ரான் கான் அவர்கள் பேசியது, அவரது ஏமாற்றங்களின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. ஒருபுறம் தாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் பயங்கரவாத்துக்கு முழு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை உலகம் புரிந்து கொண்டுள்ளது என்பதைப் பாகிஸ்தான் உணர வேண்டும். உண்மையிலேயே தான் கூறிவருவது போல், இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விழைந்தால், அதற்குத் தக்கவாறு சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு அந்நாட்டுக்கு உள்ளது.

நம்பகமான, மீண்டும் பிறழாத, சரிபார்க்கத் தக்க நடவடிக்கைகளைத் தனது நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் எடுக்க வேண்டுமே தவிர, உலகின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் தவறான, பீதியைக் கிளப்பும் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

டாவோஸில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், ஆஃப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் வருகிறது என்றும், தமது நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்றும் இம்ரான் கான் அவர்கள் கூறினார்.

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரினால் பயங்கரவாதிகள் மேலும் பெருகியுள்ளனர் என இம்ரான் கான் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்றாலும், அவர் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டார். அது, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறியபின் நிலைமை என்னவாகும் என்பதே.          

டாவோஸில் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின் பொருளாதார நிலை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் விழிபிதுங்கினார். பாகிஸ்தானில் முதலீடுகளை ஈர்க்க முற்பட்ட இம்ரான் கான், சர்வதேச நாணய நிதியம், 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் போது தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கிணங்க, பாகிஸ்தானில் மேற்கொண்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் குறித்து, உலகநாடுகளின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. தனது நாட்டின் பொருளாதாரம் குறித்த தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்த பாகிஸ்தான் பிரதமரால் இயலவில்லை. மாறாக, அவரது பேச்சில், அந்நாட்டின் பொருளாதாரக் குறைபாடுகளே வெளிச்சத்துக்கு வந்தன.

கடந்த ஆண்டைவிட, நிகழாண்டில் தன் நாட்டில் அந்நிய முதலீடுகள் இருமடங்கு பெருகியுள்ளன என்று இம்ரான் கான் அவர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தார். எனினும், இவையனைத்துமே, பாகிஸ்தானில் முதலீடுகள் அதிகளவில் வருவாய் ஈட்டித் தரும் என்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்தவையே. உண்மையில், இவையனைத்தும் பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மையின் வெளிப்பாடேயாகும்.

இம்ரான் கான் அவர்களின் டாவோஸ் பயணமே, அவரது தொழிலதிபர் நண்பர்களான இக்ரம் செஹ்கல் மற்றும் இம்ரான் சௌத்ரி ஆகியோரின் ஆதரவினால் நிகழ்ந்ததே என அவரே ஒப்புக் கொண்டுள்ளார். முதலாளிகளுடன் கள்ளக்கூட்டுக்குப் பெயர்போன பாகிஸ்தானில் இது அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. இம்ரான் கான் அவர்களின் நண்பராக ஒரு காலத்தில் விளங்கிய நவாஸ் ஷெரீஃப், எதிரியாக மாறி சிறைக்குப் போவதற்கும் இதுவே காரணமாக விளங்கியது என்பது அனைவரும் அறிந்ததே.

டாவோஸ் பயணத்தின்போது இம்ரான்கான் அவர்கள், தமது நாட்டின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்தியா குறித்து அவர் கொண்டிருக்கும் மிகையான பகையுணர்வு, பாகிஸ்தான் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.