ஒளிரும் புதிய தொழில் முனைவு இயக்கம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் –ன் மூத்த சிறப்பு நிருபர், மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்


புதிய தொழில்முனைவு இந்தியா திட்டம் 71 ஆவது குடியரசு தினத்தன்று தனக்குரிய இடத்தைப் பெற்றது. குறுகிய காலத்தில் மூன்று லட்சம்  வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவுகள் நாடு முழுவதும் உருவாகியுள்ளன. அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆரோக்கியமான சூழல் இந்தத் தொழில்முனைவுகளை உயர் முதலீட்டுப் பாதையில் இட்டுச்சென்றுள்ளது. இந்த ஸ்டார்ட்- அப்புகளின் மொத்த மதிப்பீடு இப்போது 3500 கோடி டாலர் அளவில் உள்ளது.

இந்தியாவின் உயர் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களிலிருந்து பயின்று வரும் மாணவர்கள் புதிய் தொழில் தொடங்க அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர்.  இவர்களின் வெற்றிப்பயணம், நாட்டில் உள்ள தொழில் முனைவுத் திறமைகளுக்குச் சான்றளிப்பதாக உள்ளது.

புதிய தொழில்முனைவு குறித்த அலங்கார ஊர்தி, குடியரசுதினத்தன்று பார்வையாளர்களைப் பெருமளவில் ஈர்த்தது. தொழில் முனைவு சூழல் மிக உயிரூட்டமாக  ஊர்தியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வரிச்சலுகைகள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் மூலம் சிறந்த தொழில் முனைவுக்கான சூழல்  உருவாக்கப்பட்டு சிறு செடிகளை பெரும் மரங்களாக்கும் என்பது அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

2016-ல் தொடங்கப்பட்ட  இந்த திட்டம், ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது, என்றாலும் இதன் வெற்றி அபரிமிதமான அளவை எட்டியுள்ளது. புதிய முனைவுகள் பல எல்லை கடந்த பிற நாடுகளிலும் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றன.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தம மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் நிறைவைத் தருபவையாக உள்ளன. 28 மாநிலங்களிலும் ஏழு யூனியன் பிரதேசங்களிலும்  சேர்த்து 551 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  புதிய தொழில் நிறுவனங்கள் இந்த துறையில் பதிவு செய்துகொண்டுள்ளன.  இந்த புதிய தொழில் முனைவுகள், தொழில் நுட்பம் மற்றும் உணவு விநியோகம் ஆகிய துறைகளில் மட்டும் அல்லாமல், ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2023-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் இலக்கை எட்ட இந்த ஸ்டார்ட்-அப்புகள் மிகப்பெரிய பங்களித்து வருகின்றன

இந்திய புது தொழில் முனைவுகளை நோக்கி முதலீடுகள் குவிந்து வருகின்றன.  2019 ஆம் ஆண்டில் மட்டுமே 1400 கோடி டாலர் முதலீடுகள் வந்துள்ளன. ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் ஜாம்பவான்கள், வேகமாக இந்திய தொழில் முனைவுகளில் போட்டி போட்டுக்கொன்டு முதலீடு செய்து வருகின்றன.  இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் கூட  தொழில் முனைவுகளில் முதலீடு செய்து வருகின்றன.  இதனால், மேலாண்மை அனுபவம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை அறிந்து தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

எனினும் சில புதிய தொழில் முனைவுகள்  மிக அதிக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று  நிலையில்லா வணிக முறைகளில் ஈடுபட்டு தொடர் நஷ்டங்களைச் சந்தித்து வருவதாக விமரிசனங்கள் எழுகின்றன. இது வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. சரியான வணிக நடைமுறைகள் மற்றும் நிலையான இலக்குகள் ஆகியவையே தொழில்முனைவோரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வற்றாத தேவைகள் நிறைந்த நுகர்வோர் சேவைத் துறைகளிலேயே அதிக அளவு புதிய தொழில் முனைவோர் ஈடுப்பட்டிருப்பதும் மறுக்க முடியாதது. பல துறைகளிலும் உள்ள தேவைகளை ஆராய்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  அமெரிக்க பொருளாதாரத்தின் வெற்றிக்குப் பின்னால் இந்த புதுமை முயற்சிகளே உள்ளன. தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில்  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆய்வுக் கூடத்திலிருந்து தொழிற்சாலை என்ற பாதை தான் இந்திய தொழில் முனைவுகளின் கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்பது தான் விரும்பப்படுகிறது.  இந்தியாவின் அதிக மக்கள் தொகை, உற்பத்தித் துறையில் தொழில் முனைவோரின் அதிக பங்களிப்பு வெள்நாட்டுச் சந்தைக்கும்  இந்தியாவின்  சேவை சென்று சேர உதவுகிறது.  இது தான் புதிய தொழில் முனைவோரின் அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியாவின் புதிய தொழில் முனைவு  இடம் பெறும் அளவுக்கு இந்தியாவின் தொழில் முனைவு இயக்கத்தின் வெற்றி பாராட்டும்படியாகவே உள்ளது. அரசு அறிவித்துள்ள வரிச்சலுகையும் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. புதிய வணிக யோசனைகளுடன் வரும் இளைஞர்களுக்குச் செவி சாய்க்க பெரிய முதலீட்டாளர்களை இது ஊக்குவிக்கிறது.  முன்பிருந்த தயக்கத்தை விடுத்துத் திறந்த மனதுடன் புதிய தொழில் முனைவுகளை வரவேற்க வங்கித் துறையும் முன் வருகிறது. இந்த  ஸ்டார்ட் அப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தது ஒரு கிளையாவது திறக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.