இந்தியாவின் பொருளாதார வரையறைகள்.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

இந்தியா தனது பொருளாதாரத்தை விரைவில் 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனை எட்டுவதற்கு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வலுவான சூழ்நிலையை உருவாக்குவதோடு, உலகப் பொருளாதாரத்துடன் வலுவான தொடர்புகளையும் உருவாக்குவது அவசியமாகும். இந்த இலக்கை விரைவில் அடைய, நொடிந்த நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. தனது இலக்குகளை எட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியா தனது சந்தை நலன்களுக்கு உந்துதல் கொடுத்து, உலகளாவிய வர்த்தகப் பங்காளிகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறது. ஆக்கபூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன், பிராந்திய வர்த்தகம் மற்றும் இருதரப்புப் பொருளாதாரப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக மேற்கொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது. பிராந்திய, ஒட்டுமொத்தப் பொருளாதார கூட்டாளித்துவமான ஆர்சீஈபி யிலிருந்து இந்தியா வெளியேறிய பின்னர், தனது பொருளாதாரத்தைக் கதவுகளை மூடிக் கொண்டு, உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டும் இந்தியா கவனம் செலுத்தும் என்று தோன்றிய மாயையை உடைத்தெறியும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியா பல பிராந்தியக் குழுக்கள், ஐரோப்பிய ஒன்றியம், யூரேசியப் பொருளாதார ஒன்றியம் ஆகியவற்றுடனும், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், இஸ்ரேல் மற்றும் இரான் உள்ளிட்ட பல நாடுகளுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது (எஃப்.டி.ஏ) பற்றித் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 2007 இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இந்தியா ஆர்வம் காட்டியது. ஒயின் மற்றும் வாகனங்களுக்கான சந்தை அணுகல், தொழிலாளர் தரநிலைகள் மற்றும் அரசாங்கக் கொள்முதல் தொடர்பான ஏற்பாடுகளைச் சேர்ப்பது குறித்த இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பரந்த அடிப்படையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பி.டி.ஐ.ஏ) மதிப்புமிக்க கற்கள், ஆபரணங்கள் மற்றும் ஜவுளி துறைகளில் இந்தியாவுக்கு உதவிகரமாக விளங்கும். ஐரோப்பிய ஒன்றியம் நிச்சயமாகத் தனது ஏற்றுமதிப் பொருட்களின் மீதான வரிக்குறைப்பை எதிர்பார்க்கும். பிரெக்சிட்டிற்குப் பிந்தைய பிரிட்டனுடன் தனியாகத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. அதிகளவில் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களின் துணையுடன், இருநாட்டு வரலாற்றுத் தொடர்புகளைப் பரஸ்பர நன்மைக்காக பயன்படுத்தலாம். பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயமாக, முதலீட்டாளர் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பிரிட்டன் எதிர்நோக்கும்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒருபோதும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பாணியில் உடன்படிக்கை எட்டுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், இருநாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன. நடப்பாண்டில், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. அவ்வமயம், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில், பொது முறைமை முன்னுரிமைகளின் கீழ் (ஜிஎஸ்பி) அமெரிக்கா அளித்து வந்த சலுகைகளைத் திரும்பப் பெற்றது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளைத் தவிர, இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்வு குறித்த பிரச்சனைகளும் அலசப்படலாம்.

இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்பட்ட   ஆர்.சி.இ.பி. யிலிருந்து இந்தியா விலகியது. அதன்கீழ், சேவைத் துறைகளில் கட்டுப்பாடு, வலுவான அடிப்படை விதிகள் இல்லாமல் முக்கியமான துறைகளைத் திறப்பது  போன்ற கோரிக்கைகளுக்கு உடன்படுவது நிச்சயமாக இந்தியாவிற்கு நலன் பயக்காது. எது எவ்வாறாயினும், உடனடியாக, இந்தியா தனது கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான ஆசியான், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் சில ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஆர்சீஈபியின் அங்கத்தினரான  ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் நின்றுபோன பேச்சுவார்த்தைகளை  மீண்டும் மேற்கொள்ளவும் இந்தியா முடிவு செய்துள்ள. தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஏற்பாட்டை முழு அளவில் இந்தியா    பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் கட்டண மற்றும் கட்டணமில்லாத தடைகளைக் குறைக்க இந்தியா மறுஆய்வு விதிமுறைகளைப் பயன்படுத்த விரும்புகிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுடனும், யூரேசியப் பொருளாதார ஒன்றியம் போன்ற பொருளாதாரக் குழுக்களுடனும் பொருளாதார ஈடுபாடுகள் அதிகரித்ததால் நேர்மறையான நன்மைகள் விளைந்ததை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.  இந்தப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படலாம்.

எது எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகளின் அடித்தளம், பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய விரிவான ஒன்றாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன்பாக, விரிவான கலந்துரையாடல்களை நடத்தும் உத்தியை இந்தியா வகுத்துள்ளது. மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் பாதிப்படையாமல் இருக்கவும் தகுந்த உத்திகளை இந்தியா வகுத்துள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் எழும் கட்டண மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்களை சமாளிக்க, பங்குதாரர்களுக்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்படும். இவ்வாறாக, இந்தியா தனது பொருளாதார ஈடுபாடுகளுக்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

______________