அண்டை நாடுகளுக்கு முதலிடம் – இந்தியாவின் பிராந்தியக் கண்ணோட்டம்.

(தெற்காசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியாவின் முதன்மை அறிவுசார் ஆய்வு அமைப்பான பாதுகாப்பு ஆய்வு நிறுவனம், புதுதில்லியில் 12 ஆவது தெற்காசியக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. ”அண்டைநாடுகளுக்கு முதலிடம் – இந்தியாவின் பிராந்தியக் கண்ணோட்டம்” என்ற கருப் பொருளுடன் நடைபெற்ற கருத்தரங்கில், கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தெற்காசியா மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். இருநாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில், 25 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அயல்நாடுகளிலிருந்து பங்கேற்றவர்களைத் தவிர, இந்தியாவைச் சேர்ந்த 9 ஆய்வாளர்கள், இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு முதலிடம் குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். தொடக்கவுரை ஆற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சரும், இட்ஸா அமைப்பின் தலைவருமான ராஜ்நாத் சிங் அவர்கள், தெற்காசிய நாடுகள் தங்களது தனிப்பட்ட ராஜ்ய அடையாளங்களைத் தாண்டி, ஒட்டுமொத்த தெற்காசிய அமைப்பின் அங்கங்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அண்டைநாடுகள் குறித்த இந்தியாவின் கொள்கைகளை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

2014 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்றபோது, இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரதமராகப் பதவியேற்றபின், தனது முதல் அயல்நாட்டுப் பயணமாக பூடானுக்கும், தொடர்ந்து மற்ற அண்டை நாடுகளுக்கும் மோதி அவர்கள் பயணம் மேற்கொண்டார். இதன்மூலம், நாட்டின் முந்தையப் பிரதமர்களின் அயல்நாட்டுக் கொள்கைகளிலிருந்து மாறுபட்ட கொள்கையாக, அண்டை நாடுகளுக்கு இந்தியா முதலிடமும், முக்கியத்துவமும் அளிக்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பின்பற்றியது வெளிப்பட்டது. ”அனைவருடனும், அனைவரின் மேம்பாடுக்காகவும்” என்று பொருள்படும் ”சப்கா சாத், சப்கா விகாஸ்” என்ற தாரக மந்திரத்தை 2014 ஆம் ஆண்டில் கையிலெடுத்த பிரதமர் மோதி அவர்கள், பின்னர் அதனை விரிவாக்கி, “அனைவரின் நம்பிக்கைக்கும்” என்ற மந்திரத்தை இணைத்தார்.

பிரதிபலனை எதிர்பாராது, வளத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே இந்தியாவின் அண்டைநாடுகளுடனான இருதரப்பு உறவுகள் நிலைநாட்டப்பட்டன. இதன்மூலம், தன்னிச்சையாக சலுகைகளை அளித்ததோடு, அண்டைநாடுகளுடனான நம்பிக்கைக் குறைபாடுகளைக் களையவும் இந்தியா முற்பட்டது. இந்தியாவுக்கும் அண்டைநாடுகளுக்கும் இடையே அதிகார ஏற்ற இறக்கங்கள் நிலவியதால், சிலசமயம், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்ற நாடுகளை அணுகத் துவங்கின. இந்நிலையில், அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்குப் பரஸ்பரம் பொறுப்பேற்பது அவசியமாகிறது. அண்டை நாடுகளுடன் தொடர்புகள், நீர்ப் பங்கீடு, எரிசக்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிராந்தியத்திற்குட்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனை, 6 சதவிகிதம் என்ற மிகவும் குறைத அளவிலேயே விளங்குகிறது இதனை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன. வர்த்தகத் தடைகள், நீண்ட வழிமுறைகள், போதிய தொடர்புகள் இல்லாமை போன்ற பிரச்சனைகளால், பிராந்தியத்திற்குட்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனை குறைந்த அளவில் உள்ளது. இக்குறைபாடுகளைக் களையும் விதமாக, தொடர்புகள் உள்ளிட்ட பல திட்டங்களை, கடனுதவி அளித்து, இந்தியா செயல்படுத்தி வருகிறது. அண்மைக்காலமாக, எரிசக்தி வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இந்தியா, பங்களாதேஷுக்கு 1200 மெகாவாட் மின்சக்தி ஏற்றுமதி செய்கிறது. க்ரிட் இணை[ப்புக்கள் ஏற்பட்டபின், இது மேலும் அதிகரிக்கும். பங்களாதேஷ், பூட்டானில் 100 கோடி டாலர் அளவில் நீர்மின் திட்டங்களில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. நேபாளத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா ஆர்வம் காட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய மின் வர்த்தக ஒழுங்குமுறை, இவ்வியாபாரத்தை மேலும் ஊக்குவிக்கும். அண்டைநாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போரினால் சிதிலமடைந்த பகுதிகளின் மறுசீரமைப்பு, அதிகாரிகள் மற்றும் ராணுவப் படையின் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

பலதுறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அண்டைநாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. நேபாளமும், பூட்டானும் இந்தியாவுடன் கைகோர்ப்பதால் கிடைக்கும் அனுகூலங்களைப் புரிந்து கொண்டுள்ளன. மாலத் தீவுகளும், பூட்டானும் இந்தியாவுக்கு முதலிடம் அளித்துள்ளன. பங்களாதேஷ், நம்பிக்கைக்கும், உள்ளடக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.  நேபாளமும், பூட்டானும் பங்களாதேஷின் துறைமுகங்களைப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்க விழைகின்றன.

பிராந்தியத்தில் உருவாகும் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும். இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் பயங்கரவாத சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இருதரப்பு உறவுகள் இப்பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், சார்க், பீம்ஸ்டெக், பிபிஐஎன், பிசிஐஎம் போன்ற பிராந்தியக் குழுக்களும், இப்பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு முக்கியப் பங்காற்றுகின்றன. அண்டை நாட்டு உறவுகளில், வேற்றுமைகளுக்கு இடையே, அமைதியையும், வளமையையும் நாடுவதே சாலச் சிறந்தது என்பதில் ஐயமில்லை..