டிரம்ப்பின் இரு நாடுகள் திட்டம்

(ஜே என் யூ-வின் மேற்காசியக் கல்வி மையத்தின் பேராசிரியர் பி ஆர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

விரைவில் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் அவர்களும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலுக்குத் தீர்வு காண ஒரு அமைதித் திட்டத்தை அறிவித்தனர். அமைதியிலிருந்து வளமை என்ற பெயரிடப்பட்டுள்ள 180 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிகாரிகளுடனும் சில அரபுத் தலைவர்களுடனும் நடந்த பல மாதப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, மத்திய கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பாளராக ட்ரம்ப் நியமித்துள்ள ஜாரெத் குஷ்னெர் அவர்கள், இந்தத் திட்டத்தால் பெருமளவில் பயன் பெறுவர் என்று கருதப்படும்  பாலஸ்தீனியர்களின் நலன்களைப் பெரும்பாலும் புறக்கணித்துள்ளார்.

இத்திட்டம் ஒரு நடைமுறை சாத்தியமான திட்டம் என்றும் பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு கடைசி வாய்ப்பு என்றும் ட்ரம்ப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது வரலாறு படைக்கும் திட்டம் என  நேத்தன்யாஹுவும் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனியர்களின் நியாயமான சுய நிர்ணய விருப்பத்தை இத்திட்டம் அங்கீகரிப்பதாகவும், ஜெருசலேம் இஸ்ரேலின் பிளவுபடாத தலைநகராகத் தொடரும் என்றும், பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-குட்ஸ் அல்லது வேறு நகரத்தைத் தங்களது தலைநகராக நிர்மாணித்துக் கொள்ளலாம் என்றும் இது கூறுகிறது. ஜோர்டன் பள்ளத்தாக்கு உட்பட, மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள அனைத்து யூதப் பகுதிகளையும் இஸ்ரேலுடன் இணைப்பதாகவும், அதற்கு அமெரிக்காவின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதாகவும் இந்தத் திட்டம் உள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பிராந்தியப் பரிமாற்றம் என்பது 1967  ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த போரில் இஸ்ரேல் கைப்பற்றிய பாலஸ்தீனப் பகுதிகளை உள்ளடக்கியதாக இல்லை.  மான்டேட் பாலஸ்தீனம் என்ற ஆணையின் கீழ் அடங்கும் மொத்தப் பகுதியில் 15 சதவிகிதப் பகுதியே பாலஸ்தீனத்துக்கு வழங்கப்படும் என்று இத்திட்டம் குறிப்பிடுகிறது. வன்முறையைக் கைவிடுவதாக வெளிப்படையாக அறிவித்து, இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரித்து, காசா பகுதியுடன் தொடர்புடைய மற்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை, ஹமாஸ் அல்லது வேறு எந்த ஒரு அமைப்பின் உறுப்பினர்களை உள்ளடக்கிய எந்த ஒரு பாலஸ்தீன அரசுடனும் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தாது என்று அமெரிக்கா கருதுகிறது.

இத் திட்டத்தின்படி, தனது குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் இணைத்துக் கொண்டால், மேற்குக் கடற்கரையில், பாலஸ்தீனத்துக்கு, சீரான தொடர்ச்சியுடன் கூடிய நிலப்பரப்பு அமையாது. அது காசா உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் நிலத்தடி சுரங்கங்கள் போன்ற நவீன  தொழில்நுட்பக் கட்டமைப்புக்கள் மூலம்  இணைக்கப்படும் என்று இத்திட்டம் அறிவிக்கிறது.

1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரபு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த யூத அகதிகள் பற்றிக் குறிப்பிடும் இத்திட்டம், பாலஸ்தீன அகதிகள் புதிய பாலஸ்தீனம்  அல்லது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 57 உறுப்பினர் நாடுகள் ஆகியவற்றில் குடியேறுவார்கள் என்று கூறுகிறது. பாலஸ்தீன அகதிகளை ஏற்குமாறு இஸ்ரேல் கோரப்படாது என்றும் இத்திட்டம் கூறுகிறது. இது குறித்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே  ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வகையில் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும்.  பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீன அகதிகளைப் பெருமளவில் உள்ளடக்கிய ஜோர்டன், லெபனான் போன்ற நாடுகளுக்காக, 500 கோடி டாலர் முதலீட்டில் பல பொருளாதாரத் திட்டங்களும் இதில் வகுக்கப்பட்டுள்ளன.  இதன் பெரும் பங்கு அமெரிக்காவிடமிருந்தல்லாமல் எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளிலிருந்து பெறப்படும்.

பாலஸ்தீனத்தின் சுய நிர்ணயத்திற்கு வெளிப்படையான ஆதரவு, இஸ்ரேலியக் குடியேற்றத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக நிறுத்தம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான பொருளாதார அணுகுமுறை ஆகியவை தான் இத்திட்டத்தில் நம்பிக்கைக் கீற்றுக்களாக விளங்குகின்றன. இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை பாலஸ்தீனியர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.. 2017 டிசம்பரில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது, 2018 மே மாதம் அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றியது, 2019 மார்ச் மாதம் கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலியப் பகுதியாக அறிவித்தது, 2019 நவம்பரில் யூதக் குடியேற்றங்கள் சட்ட விரோதமானவை அல்ல என்று அறிவித்தது என்று, டிரம்ப் அரசு பதிவியேற்றதிலிருந்து தொடர்ச்சியாக வெளியான பல அறிவிப்புகளின் தொடர்ச்சியே இது என்று கூறப்படுகிறது.

சவுதி அரேபியா, எகிப்து போன்ற அரபு நாடுகள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனே இருக்கின்றன. இருந்தாலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே  நேரடிப் பேச்சு வார்த்தைகளைத் தான் அவை ஆதரிக்கின்றன. பாலஸ்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்தியா,  இரு நாடுகள் என்ற தீர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இரு தரப்புக்கும் ஒத்துப்போகக்கூடிய ஒரு நிலையை  நேரடிப் பேச்சு வார்த்தைகளின் மூலம் எட்டவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த அமெரிக்கத் திட்டம் உள்பட, அமைதியாக இணைந்து வாழும் அனைத்து வழிகளையும் எடை போட்டு இரு தரப்பும் முடிவெடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத் தலைமையான பாலஸ்தீன தேசிய ஆணையம் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. அது தான் சிக்கலை ஏற்படுத்துகிறது. டிரம்ப்பின் இந்த மத்திய கிழக்கு திட்டம் என்பது தலையில்லாத கிரீடம் போன்றது என்றால் அது மிகையாகாது.