இந்திய போர்ச்சுகல் உறவுகளில் புதிய அத்தியாயம் துவக்கம் .

(இட்சா செய்தி ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

போர்ச்சுக்கீசிய அதிபர் மார்சிலோ ரிபெலோ டிசௌஸா அவர்கள், இந்தியாவுக்கு வெற்றிகரமான பயணம் மேற்கொண்டார். பலதரப்பட்ட விஷயங்களில் இருதரப்புக்கும் பரஸ்பரம் நலனளிக்கும் 14 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது அவரது பயணத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. இந்த ஒப்பந்தங்கள், கடல்சார் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு, புதிய தொழில் துவக்கம், விண்வெளி, ராஜீய விவகாரங்களில் பயிற்சி, அறிவியல் ஆராய்ச்சி, பொதுத்துறைக் கொள்கை ஆகியவை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளாக, மறு ஆய்வுக்கும், மாறுதல்களுக்கும் உட்பட்டு வந்த துடிப்பு மிக்க இந்திய, போர்ச்சுக்கல் உறவுகளைப் பிரதிபலிக்கும் விதமாக, போர்ச்சுக்கல் அதிபரின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. இருநாடுகளிலும் ஏற்பட்டு வரும் முக்கிய மாறுதல்களின் உந்துதல் மூலம், இருதரப்பு உறவுகளின் முழு சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள இருநாடுகளும் முற்பட்டுள்ளன.

இன்றைய எதிர்பார்க்க முடியாத, நிலையற்ற சூழலில், பலதரப்பட்ட உலகளாவிய மற்றும் இருதரப்பு விஷயங்களில் இருநாட்டு அணுகுமுறைகளும் ஒத்திசைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வல்லரசுகளின் விரோதங்கள் மற்றும் போட்டிகள், புவிசார் பொருளாதார, செயலுத்தி ரீதியிலான அடித்தளங்கள், மந்தமான பொருளாதார நிலை, வழக்கமான மற்றும் வழக்கத்துக்கு மாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை, உலக செயலுத்தி மேடையில் குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கல் தத்துவம், இழிவான தாத்பரியத்தைப் பெற்றுள்ளது. உலகநாடுகள் தங்கள் சுயலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு மேம்பட்டுள்ளது. நான்காவது தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பம் தவறான பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டிய உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், அமெரிக்காவின் ஐரோப்பிய உறவுகளுக்கான உறுதிப்பாட்டைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இத்தகைய சூழலில், நாடுகளுக்கிடையே புதிய கூட்டாளித்துவங்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய உலகளவிலான அதிரடி மாற்றங்களை எதிர்கொள்வதற்கு, உலக மேடையில் இந்தியாவுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவமும் வலிமையும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உள்ள போர்ச்சுக்கல்லின் வலிமையும் ஒன்றாக இணைந்து மேலும் வலு சேர்க்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் போன்ற புதிய உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இது உதவும்.

இந்தியாவும், போர்ச்சுக்கல்லும் இருநாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த ஆழமான புரிதலைக் கொண்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு, பயங்கரமான குண்டர்படைத் தலைவனான அபு சலேமை நாடு கடத்தியது, தனது நாடாளுமன்றத்தில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஐயத்துக்கிடமின்றி கடுமையாகக் கண்டித்தது போன்ற நடவடிக்கைகள் மூலம், போர்ச்சுக்கல் இந்தியாவுக்குப் பக்கபலமாக இருப்பது வெளிப்பட்டுள்ளது. அனைத்து பல்தரப்பு மேடைகளிலும் இந்தியா உறுப்பினராவதற்கு போர்ச்சுக்கல் உறுதுணையாக இருந்துள்ளது. தவிர, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்திய உறவுகளுக்கு, துடிப்புமிக்க உந்துதலை அளிப்பதிலும், முதலாவது, இந்திய, ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நிகழ முக்கியப் பங்காற்றியதிலும் போர்ச்சுக்கல் இந்தியாவுக்கு மிகவும் உதவிகரமாக விளங்கியது. 500 ஆண்டுகளுக்கு முன்னதாக, போர்ச்சுக்கீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா துவக்கி வைத்த இந்திய கடல்சார் பரிவர்த்தனைகளின் முத்தாய்ப்பாக, இருநாடுகளும், இந்தியப் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

அதேபோல், போர்ச்சுக்கல்லின் துடிப்புமிக்க புதுமைப்படைப்புக்கான சூழலும், அறிவுசார் பொருளாதாரமும் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இண்டெர்னெட் ஆஃப் திங்ஸ், செயற்கை அறிவு, பிளாக் செயின், ஈ நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்களில் வீறுநடை போட்டு போர்ச்சுக்கல் முன்னேறி வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக இந்தியாவை நவீனப்படுதுவதிலும், இந்தியாவின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் கொள்கையிலும் உறுதியுடன் விளங்கும் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தொலைநோக்குக்கு, போர்ச்சுக்கல்லின் டிஜிட்டல் நிபுணத்துவம் கை கொடுக்கும். இந்தியாவை முற்றிலும் நவீனப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேக் இன் இண்டியா, கிளீன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, ஸ்டார்ட் அப் இண்டியா போன்ற திட்டங்களில் போர்ச்சுக்கீசிய நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். அந்நிறுவனங்களுக்கு, தங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த இந்தியா அதிக வாய்ப்புக்களை வழங்கும். இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புலம் பெயர்தல் மற்றும் போக்குவரத்து குறித்த ஒப்பந்தம், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், போர்ச்சுக்கல்லின் மனிதவளத் தேவைகளுக்கும் பாலமாக அமையும். இத்தகைய நேர்மறை உணர்வுகளின் பிரதிபலிப்பாக, கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் போர்ச்சுக்கல்லின் முதலீடுகள் இருமடங்கு அதிகரித்துள்ளதையும், இருதரப்பு வர்த்தகம் 100 கோடி யூரோ அளவைத் தாண்டியுள்ளதையும் குறிப்பிடலாம்.

போர்ச்சுக்கல்லில் நிலவும் சாதகமான செலவின, தொழில்சார் சூழல், பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு மாற்றாக இந்தியாவுக்கு, ஐரோப்பிய சந்தையை அணுக உதவும் நுழைவாயிலாக போர்ச்சுக்கல்லை நிலைநிறுத்தியுள்ளது. வழக்கமாக, போர்ச்சுக்கல் மொழி பேசும் உலக நாடுகள் அனைத்திலும் போர்ச்சுக்கல் தலைமை வகிக்கிறது. இந்நாடுகளிலும் கால் ஊன்ற இந்திய நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது சுவாரசியமானது. இந்நாடுகளில், இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் கைகோர்க்க அசாத்திய வாய்ப்புக்கள் பெருகியுள்ளன.

போர்ச்சுக்கல்லில் வாழும் இந்திய வம்சாவளியினரின் திறமைகள், ஆரோக்கியம் குறித்த போர்ச்சுக்கல்லின் விழிப்புணர்வு போன்றவை இருதரப்பு உறவுகளுக்கு அதிக ஈர்ப்பை அளிப்பதோடு, யோகா, ஆயுர்வேதம், கால்பந்து விளையாட்டு, சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரியாற்றல், கழிவு மேலாண்மை, கடல் வளம், பாதுகாப்பு மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் அளவற்ற சாத்தியக் கூறுகளையும் வழங்குகின்றன.

எனவே, போர்ச்சுக்கல் அதிபரின் இந்தியப் பயணம், இந்திய, போர்ச்சுக்கீசிய இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயத்துக்கு உந்துதல் அளித்துள்ளது என்றால் அது மிகையல்ல.