முக்கியத்துவம் பெறும் இந்திய, ஐரோப்பிய யூனியன் செயலுத்திக் கூட்டாளித்துவம்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – கே. லட்சுமண குமார்)

ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகாரங்களுக்கான சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் ப்ரஸ்ஸல்ஸுக்குப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய யூனியனின் உயர்நிலை பிரதிநிதியும் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் துணைத் தலைவருமான  ஜோசப் போர்ரெல் ஃபாண்டெல்லெஸ் அவர்களின் அழைப்பை ஏற்று, டாக்டர் ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.  ஐரோப்பிய யூனியனின் புதிய குழு 2019 ஆம் ஆண்டு புதிதாகப் பதவி ஏற்ற பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொண்ட முதல் ஐரோப்பா பயணம் இதுவாகும்.

ஐரோப்பிய யூனியனின் உயர் நிலைப் பிரதிநிதி மற்றும்   ஐரோப்பிய யூனியனில் அங்கம்  வகிக்கும் நாடுகளின் 27 வெளியுறவுத் துறை அமைச்சகர்கள் ஆகியோரை  உள்ளடக்கி, வெளியுறவு விவகாரங்கள் சபை அமைக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனின் இந்த அமைப்பு, வெளியுறவுக் கொள்கை,  தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான செயல்பாடுகளுக்குப் பொறுப்பாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் உள்ள முன்னுரிமைகள், பிராந்திய மற்றும் உலகலாவிய கண்ணோட்டம் ஆகியவற்றை டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் வெளியுறவு விவகாரங்களுக்கான சபையுடன்  பகிர்ந்துகொண்டார். உலகின்  இரண்டு மிகப்பெரிய மக்களாட்சிகளாக விளங்கும் இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும், மக்களாட்சி, பல்நிலைத்தன்மை, விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு முறை, சர்வதேச வர்த்தக அமைப்புடன் விதிகளின் அடிப்படையிலான சர்வதேச வர்த்தகம் மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த பொதுவான விழுமியங்களை பரிமாறிக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய யூனியனின்  வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் நிலை பிரதிநிதி  ஜோசப் போர்ரெல் ஃபாண்டெல்லெஸ் அவர்கள் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவர் ரெய்சினா பேச்சுவார்த்தை, 2020 ல் கலந்து கொண்டார். இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே  இருக்கும் பொதுப்படைத் தன்மையை  மீண்டும் வலியுறுத்திய அவர், இரு தரப்பும் விதிகளின் அடிப்படையிலான பல்லடுக்கு முறையை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். உலக வர்த்தக அமைப்பின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் அமைப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தடைகளால் ஐரோப்பா, இந்தியா  மற்றும் பல தெற்காசிய நாடுகளுக்கு சவால்கள் எழுந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய யூனியன் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் எடுத்து வருவதாக ரெய்ஸினா பேச்சுவார்த்தைகள் போது  அவர் தெரிவித்தார். இந்தப் பிரச்சனையை தீர்ப்பது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என்பதால் சாத்தியமாகக் கூடிய தீர்வைக் காண வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கடற்கொள்ளை மற்றும் கடல் வளங்களை பாதுகாத்துப் பராமரித்தல் போன்ற பல சவால்களை உலக சமூகம் எதிர்கொள்ளும் வேளையில், கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, கடல் சார் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையும் பராமரிக்க இணைந்து செயல்படுவது அத்தியாவசியமாகிறது. ஆப்பிரிக்க மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலுக்கு  அப்பால் நடைபெறும்  கடல்கொள்ளையை எதிர்கொள்ள இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும்   ‘ஆபரேஷன் அட்லாண்டா’ என்ற பயிற்சி நடவடிக்கை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி, 2025 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு இந்திய – ஐரோப்பிய யூனியன் செயலுத்தி கூட்டளித்துவத்துக்குப் புதிய தடம் அமைப்பதன் தேவையையும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி வலியுறுத்தினார்.

பருவ நிலை மாற்றம், பல்லடுக்குத் தன்மையைப் பேணுவது, தற்காப்புத் துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, இணைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு , பயங்கரவாதப் பிரச்சனை போன்ற, இருதரப்பும் முன்னுரிமை அளிக்கும் பிரச்சனைகளில் தங்களது செயல்பாடுகளை இருதரப்பும் மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஐரோப்பிய பசுமைத் திட்ட செயல் துணைத் தலைவர்  ஃபிரான்ஸ் டிம்மர்மேன்ஸ் (FRANS TIMMERMANS),  வர்த்தக ஆணையர் ஃபில் ஹோகன் ( PHIL HOGAN), சர்வதேச கூட்டாளித்துவ ஆணையர் ஜட்டா உர்பிலைனென் ( MS. JUTTA URPILAINEN) ஆகியோரையும் சந்தித்தார்.

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளாக உள்ள 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட ஐரோப்பிய சபையின் தலைவர்  சார்லஸ் மிச்ஹெல் (CHARLES MICHEL) அவர்களையும் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். அப்போது வெளியுறவு விவகாரங்கள் சபையுடன் நடந்த விவாதம் குறித்து விவரித்தார்.

பெல்ஜியம் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்  ஃபிலிப் கோஃப்ஃபின் (PHILIPPE GOFFIN) அவர்களைச் சந்தித்த டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பிப்ரவரி, 2020 க்கான  ஐ நா பாதுகாப்பு சபைத் தலைமைப் பதவியைப் பெற்றதற்கு பெல்ஜியத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இருதரப்பு  விஷயங்கள், பல்லடுக்கு மன்றங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து  இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

தனது ஒரு நாள் ப்ரஸ்ஸஸ் பயணத்தின் போது, புதிய ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் அரசியல் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடுவது இது இரண்டாவது முறையாகும்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு, இந்திய – ஐரோப்பிய யூனியன் உறவுகளைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்திய – ஐரோப்பிய யூனியன் செயலுத்திக் கூட்டாளித்துவம் 2025 க்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கியுள்ளது. அடுத்த இந்திய – ஐரோப்பிய உச்சிமாநாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முழுமை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ப்ரஸ்ஸஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடனான இந்திய உறவுகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.