காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் தலையீட்டிற்கு இந்தியா கண்டனம்.

(துருக்கி மற்றும் சிஐஎஸ் நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

துருக்கி அதிபர் ரிசெப் டய்யிப் எர்டோகன் அவர்கள், அண்மையில் மேற்கொண்ட பாகிஸ்தான் பயணத்தின்போது, காஷ்மீர் நிலை குறித்த தனது கவலைகளை வெளியிட்டார். அண்மையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரும் காஷ்மீரில் இக்கட்டான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.தீர்மானங்களின் அடிப்படையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப, தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் மக்களுக்குத் தாம் ஆதரவாக இருப்பதாகவும், துருக்கியில் முதலாம் உலகப் போரின்போது, அயல்நாட்டு ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியைப் போல காஷ்மீர் போராட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டது, அபத்தமானது.

துருக்கி நாட்டுத் தூதரை அழைத்து, அந்நாட்டு அதிபரின் விமரிசனத்துக்குத் தனது தீவிர கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது. துருக்கி அதிபரின் விமரிசனம், வரலாறு மற்றும் ராஜீய விவகாரங்கள் குறித்த சரியான புரிதல் இன்மையைப் பிரதிபலிப்பதோடு, இந்தியாவுடனான துருக்கியின் உறவுகளையும் பெருமளவில் பாதிக்கக் கூடும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி தலையிடும் போக்கின் படியே அதிபரின் விமரிசனம் விளங்குகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்தியாவுக்கு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. வெளிப்படையாகவே இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் கையாண்டு வருவதைத் துருக்கி மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயற்சிப்பதை இந்தியா நிராகரிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கம் என்றும், காஷ்மீர் விவகாரத்தில் அந்நிய நாடுகளின் தலையீட்டை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது என்றும் இந்தியா உறுதிபடக் கூறி வருகிறது.

ஜம்மு – காஷ்மீரில் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவை இந்தியா நீக்கியது பற்றி துருக்கி அதிபர் எர்டோகன் அவர்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கடந்த ஆண்டு மேற்கொள்ளவிருந்த துருக்கிப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அளவற்ற ஆதரவைத் துருக்கி வழங்கி வருவதால், அந்நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு உறவில் அண்மைக் காலமாக ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் அபத்தமான கருத்துக்களைத் துருக்கி அதிபர் வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ஐ.நா. பொதுச்சபையில் எர்டோகன் அவர்கள் ஆற்றிய உரைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த உரையில், காஷ்மீர் விவகாரம், போதிய அளவில் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைப் பெறவில்லை என்றும், நீதி, சமத்துவ அடிப்படையில், பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.  துருக்கியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள் முதலே, எர்டோகன் அவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தராக இருக்க முயற்சித்து வருகிறார். அதனை இந்தியா முற்றிலும் நிராகரித்து வந்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் துருக்கியின் வரலாற்றை எர்டோகன் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இருதரப்பு விவகாரமான காஷ்மீர் குறித்து மூன்றாவது நாடு தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று இந்தியா தனது நிலையை உறுதிபட, தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அரசியலமைப்பின் 370 ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானோ அல்லது வேறெந்த நாடோ குறுக்கிடுவது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றும், ஐ.நா.வின் சட்டப்படி, இது சட்ட விரோதம் என்றும் இந்தியா கூறியுள்ளது.

மத ரீதியாகவும், சைப்ரஸ் விவகார ரீதியாகவும், துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு பார்க்கப்படுகிறது. மத ரீதியாக, பாகிஸ்தானும், துருக்கியும் நெருக்கமாய் உள்ள நாடுகளாகும். அவ்விரு நாடுகளும், மலேசியாவுடன் இணைந்து, இஸ்லாம் மதத்தின் மீதான அச்சம் மற்றும் தவறான எண்ணங்களைக் களையும் பொருட்டு, தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் துவக்க முடிவெடுத்துள்ளன. சைப்ரஸைப் பொறுத்தவரை, அந்நாட்டின் வடக்குப் பகுதியை சுதந்திரமான தனிநாடாக இந்தியா அங்கீகரிக்கவில்லை. இது, இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. கிரேக்க சைப்ரஸின் ஒற்றுமைக்கும், சுதந்திரத்துக்கும், எல்லைகளுக்கும், முழுமையான, இறையாண்மைக்கும் இந்தியா ஆதரவளித்து வருகிறது. அங்குள்ள ஆட்சி சட்டபூர்வமானது என்று இந்தியா கூறுகிறது. சைப்ரஸ் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நேரெதிரான நிலைப்பாட்டைப் பாகிஸ்தான் கொண்டுள்ளது. மேலும், வரலாற்று ரீதியாக, கிரீஸ் மற்றும் ஆர்மீனியாவுடன் துருக்கி இறுக்கமான உறவு கொண்டுள்ள நிலையில், அந்நாடுகளுடன் இந்தியா சுமுகமான உறவினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பிரச்சனைகளுக்கு இடையேயும், துருக்கியுடன் தனது இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்தியா மதிப்பளிக்கும் நட்புநாடாக துருக்கி உள்ளது என்றும், அந்நாட்டுடன் காலத்தைக் கடந்த உறவுகளை இந்தியா கொண்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். ஆனால், அடிக்கடி துருக்கி காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவது, இருதரப்பு உறவுகளைப் பெரிதும் பாதிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான, உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இந்தியா, அதில் எப்போதும் இரட்டை வேடம் தரிப்பது இல்லை. எனவே, மத ரீதியிலான நெருக்கம் இருப்பினும், ராஜீய விவகாரங்களில் முறை தவறாமல் மற்ற நாடுகள் இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. மனித நேயமே முக்கியமே தவிர, மதம் இல்லை என்பதைப் பிற நாடுகள் உணர வேண்டும்.