விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி நகரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

விரிவான, உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தை நோக்கி இந்திய, அமெரிக்க உறவுகளை இட்டுச் செல்ல, பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இருதலைவர்களும் சிறப்புமிக்க இறையாண்மையையும், துடிப்பான ஜனநாயகக் கோட்பாடுகளையும் அனுசரிக்கும் நாடுகளின் பிரிதிநிதிகளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளும் மக்களின் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் விதிகளுக்குட்பட்ட ஒழுங்குமுறை ஆகிய விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் நாடுகள் என்பது சிறப்புமிக்க அம்சமாகும். இருநாட்டு செயலுத்தி உறவுகளை பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட ஆர்வங்கள், நல்லெண்ணம், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான, துடிப்பு மிக்க பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அச்சாரமாகக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல இருநாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்களும் பாதுகாப்புக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளனர். கடல்சார், விண்வெளிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல் பரிமாற்றம், ராணுவ வீரர்கள் பரிவர்த்தனை, சிறப்புப் படைகளிடையே நவீன, விரிவான ராணுவ கூட்டுப் பயிற்சிகள், ராணுவத் தளவாடங்களையும், உதிரி பாகங்களையும் கூட்டாகத் தயாரித்தல், பாதுகாப்புத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே கூட்டாளித்துவம் ஆகியவற்றின் மூலம் இதனை சாதிக்க இருதலைவர்களும் முனைந்துள்ளனர். அடிப்படைப் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்த பாதுகாப்புக் கூட்டுறவு அம்சங்களை விரைவில் தீர்மானிக்க இருதலைவர்களும் ஆர்வமாயுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் ஹைட்ரோ கார்பன் முதலீடுகளை இந்தியப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் வரவேற்றுள்ளனர். எரியாற்றல் துறையில் செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் மூலம், இத்துறையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விரிவாக்கவும், புதுமைகளைப் புகுத்தவும் இருநாடுகளும் விழைகின்றன.

இஸ்ரோவும், நாசாவும் இணைந்து, 2022 ஆம் ஆண்டில் கூட்டாகத் தயாரித்து செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளதை இருநாடுகளும் வரவேற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம், இரட்டை அலைவரிசை செயற்கை அபெர்ச்சர் ரேடார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பூமியைக் கண்காணித்தல், செவ்வாய் மற்றும் பிற கிரகங்களை ஆராய்தல், ஹீலியோ பௌதீக ஆய்வுகள், மனிதர்களை விண்ணில் ஏவுதல், வர்த்தக ரீதியான விண்வெளிக் கூட்டுறவு ஆகியவை குறித்த ஆலோசனைகளை இருநாட்டு விண்வெளி நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதை இருநாடுகளும் பாராட்டியுள்ளன.

இருநாட்டுத் தலைவர்களும், உயர்கல்வியில் ஒத்துழைப்பை அதிகரிக்க விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம், இளம் புதுமைப் படைப்பாளிகளுக்குப் பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்றம் ஆகியவ்ற்றுக்கு ஊக்கம் கிடைக்கும். அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளதை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

திறந்த, சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான, வளமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்ய, அமெரிக்காவும், இந்தியாவும் நெருக்கமான கூட்டாளித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதில் ஆசியான் அமைப்பு மையப்படுத்தப்படும். இதன் மூலம், இப்பிராந்தியத்தில், சர்வதேச விதிகளுக்குட்பட்ட ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகம், பாதுகாப்பான, சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து, தடையற்ற வர்த்தகம், சர்வதேச விதிகளுக்குடப்பட்ட கடல்சார் சர்ச்சைத் தீர்வு அமைப்பு ஆகியவை உறுதி செய்யப்படும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா நல்கும் பங்களிப்பை அமெரிக்கா பாராட்டியுள்ளது. இப்பகுதியின் நீடித்த, வெளிப்படையான, தரமான உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன.

வளர்ந்துவரும் நாடுகளில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் பொருட்டு, யூஎஸ்எய்டு மற்றும் இந்திய மேம்பாட்டுக் கூட்டாளித்துவ நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையிலான புதிய கூட்டாளித்துவத்துக்கு இருதலைவர்களும் தீவிர ஆர்வம் கொண்டுள்ளனர்.

 

ஆஃப்கானிஸ்தானில் ஒற்றுமை, இறையாண்மை, ஜனநாயகம், உள்ளடக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் வளமை ஓங்க, இருஇநாடுகளும் ஆர்வமாயுள்ளன. ஆஃப்கானிஸ்தானில் இணைப்புக்களை உருவாக்கிப் பாதுகாப்பதில் இந்தியா அளித்து வரும் மேம்பாட்டு, பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் வரவேற்றுள்ளார்.

அனைத்து விதமான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் இந்தியாவும், அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. தங்கள் நாட்டு எல்லைக்குள் இருந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை பாகிஸ்தான் முற்றிலும் தடுக்க வேண்டும் என்று இருநாடுகளும் கூறியுள்ளன. தவிர, மும்பைத் தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அனைத்து தீவிரவாதக் குழுக்களையும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தித் தண்டனை வழங்கவும் பாகிஸ்தான் அறிவுறுத்தப்பட்டது.

வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பை வலுப்படுத்தத் தேவையான திறந்த, நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதியை வழங்க இருநாடுகளும் உறுதியாக உள்ளன. இருநாட்டு கல்வியகங்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு இடையிலான கூட்டுறவை அதிகரிப்பதன் மூலம், புதிய தொழில்நுட்பத் திறனாய்வு, முக்கிய இடுபொருள் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குதல் ஆகியவற்றை மேம்படுத்த இருநாடுகளும் விழைகின்றன.