நான்காவது மேற்காசிய மாநாடு.

(மேற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் முகமது முடாசிர் க்வாமர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – சத்யா அசோகன்)

இந்தியாவின் முக்கிய சிந்தனையாக்க அமைப்பாக விளங்கும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனமானது “ மேற்காசியாவில் பத்தாண்டு கால அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் –  சவால்கள், பாடங்கள் மற்றும்  எதிர்காலப் போக்குகள்” எனும் கருவை மையமாகக் கொண்டு புது தில்லியில் நான்காவது மேற்காசிய மாநாட்டை நடத்தியது.  இந்த மாநாட்டில் எகிப்தின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு நபில் ஃபாமி, லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு ஃபாட் சினியோரா உட்பட பல சர்வதேச மற்றும் இந்திய வல்லுனர்கள் பங்கேற்று அந்தப் பிராந்தியத் தொடர்புடைய பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாள் விவாதங்கள், பிராந்தியப் பாதுகாப்பு சூழ்நிலை, வெளி சக்திகளின் பங்கு, பொருளாதாரம்,, மாறிவரும் பிரச்னைகள், மோதல்களின் தன்மைகள் மற்றும் மேற்காசியாவுடன் வளர்ந்து வரும் இந்தியாவின் உறவுகள், ஈடுபாடுகள் போன்ற கருப்பொருள்களில் ஆறு அமர்வுகளாக நிகழ்ந்தன.

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் விஜய் குமார் சிங் அவர்கள், தனது சிறப்புரையில் கடந்த பத்தாண்டு காலங்களில் இந்தப் பிராந்தியம் சந்தித்துள்ள பெரும் மாற்றங்கள் குறித்தும், இந்தப் பிராந்தியத்திற்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பித்துப் பேசினார். மனோகர் பாரிக்கர்  ஐ.டி.எஸ்.ஏ. வின் பொது இயக்குனர் இந்தியத் தூதர் சுஜான் ஆர். செனாய், தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் நிகழ்வுகளால், வட்டாரத்தின் பொருளாதார முன்னேற்றம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.  வலுவான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூட்டாளித்துவங்களில், இந்தப் பிராந்தியத்திலுள்ள பல நாடுகளுடன் இந்தியா தனது செயலுத்தி ஈடுபாடுகளை ஆழப்படுத்தியுள்ளது என்பதையும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

உரையாற்றிய பலரும்,கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பிராந்தியம் சந்தித்துள்ள மாற்றங்கள் குறித்து வலியுறுத்திப் பேசியதோடு, இதற்கான ஒரு தீர்வைத் தங்களுக்குள்ளேயே, இந்தப் பிராந்திய நாடுகள், அதன் தலைவர்கள் மற்றும் மக்கள் கண்டறிய வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தனர். டிசம்பர் 2010-ல் துனீசியாவில் அரபுக் கிளர்ச்சி துவங்கியதிலிருந்து, பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரம் மிகவும் மோசமாகிவிட்டது என்றும், இதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், இது அங்கிருக்கும் புவி அரசியல் போட்டியையும் தீவிரப்படுத்தியுள்ளது என்றும் விவாதிக்கப்பட்டது.

சர்வாதிகாரத்திலிருந்து, அனைத்தையும் உள்ளடக்கிய, பொறுப்புணர்வுடன் கூடிய, ஜனநாயக ஆளுகைக்கான மாறுதலைக் கோரும் முழக்கத்துடன் அரபுக் கிளர்ச்சி துவங்கியது. எனினும், பத்தாண்டு காலம் கழிந்துவிட்ட போதிலும், பெரும்பான்மையான நாடுகள் தொடர்ந்து அதே பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றன.  பங்கேற்பு அரசியலுக்கு மாறுவதற்கான செயல்முறையானது பல நாடுகளில் மிகவும் கடினமாகவும், வலி தருவதாகவும், முடிவுக்கு வராததாகவும் இருந்து வருகிறது.  சிரியா, யேமன், இராக், லிபியா போன்ற நாடுகள் கடுமையான உள் நாட்டு சண்டைகள், மோதல்களினால் பாதிக்கப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிலான மனிதாபிமான நெருக்கடியையும், மக்கள் இடம் பெயர்வையும் சந்தித்து வருகின்றன.

இந்த அலைக்கழிவுகளும், நெருக்கடிகளும், அல்ஜீரியா, சூடான், லெபனான், இரான் போன்ற நாடுகளில், கடந்த ஆண்டு புதியதொரு கிளர்ச்சி அலையை உருவாக்கியுள்ளன. இளைய சமுதாயத்தின் அடிப்படை அரசியல், பொருளாதார அபிலாஷைகள் கவனிக்கபடாமல் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.  தொடரும் நிச்சயமற்ற தன்மையானது, பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது.  இன்றைய நிலவரப்படி,  உலகிலேயே மிக உயர்ந்த வேலையின்மை விகிதமும், குறைந்த உள் நாட்டு உற்பத்தி விகிதமும் கொண்ட பிராந்தியமாக மேற்காசியா இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் தொகை இளைய சமுதாயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வருங்கால பொருளாதாரக் கணிப்புக்களும் கவலையளிப்பதாகவே உள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் ஸ்திரமின்மை, வன்முறை, பெருகி வரும் பதற்றங்கள் ஆகியவற்றுக்கிடையே, அப்பிராந்தியத்திலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு, எரி ஆற்றல் பாதுகாப்பானது மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், இந்தப் பிராந்தியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.  இந்தப் பிராந்தியத்துடனான இருதரப்பு வர்த்தகம், 20,000 கோடி டாலர் அளவில் உள்ளது.  தனக்குத் தேவையான எரி ஆற்றலுக்கான இறக்குமதியில் 60 சதவிகிதத்திற்கு மேலாக இங்கிருந்துதான் இந்தியா இறக்குமதி செய்கிறது.  ஏறத்தாழ 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர்; அவர்களது பாதுகாப்பு குறித்து இந்தியாவிற்குப் பெரும் அக்கறையும், கவலையும் உண்டு.  மேற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு சவால்கள் எழுந்தாலோ, பொருளாதாரம் வீழ்ந்தாலோ, அது  நேரடியாக இந்தியாவின் பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாகவும், செயல் தந்திர ரீதியாகவும் தனது நலங்களைக் காத்துக் கொள்வதற்காக 2014-ல் இருந்து இந்தியா துடிப்பான ராஜதந்திரத்தைக் கையாண்டு வருகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களின் மிக முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்புகளில் ஒன்று, இந்தப் பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்ததாகும்.  இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை, “மேற்கு நோக்கி” என்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, மேற்கை இணைத்து செயல்படுதல் என்று மாறுதலை அடைந்தது. இது, வளைகுடா பிராந்தியத்துடனான அரசியல் ரீதியிலான சந்திப்புகளை இந்தியா அதிகப்படுத்தியதிலேயே தெரியக்கூடும்.  அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  இப்பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி வரும் இந்தியா, பல்வேறு நிலைகளிலும் உறவுகளை முன்னெடுத்துச் செல்கிறது.

கடந்த பத்தாண்டு காலம் கற்று கொடுத்த பாடங்கள் மூலம், இப்பிராந்திய நாடுகள், இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு கொள்கைகளை வடிவமைக்கும் என்ற நம்பிக்கையை மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் வெளிப்படுத்தினர். இரு தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் இந்தியா, தொடர்ந்து மேற்காசிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்.

.