மியன்மாருடனான உறவுகளை வலுவாக்கும் இந்தியா.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

மியன்மார் குடியரசு நாட்டின் அதிபர் யூ வின் மிண்ட் அவர்கள், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு மற்றும் அண்டைநாடுகளுக்கு முதலிடம் ஆகிய அயல்நாட்டுக் கொள்கைகளுக்கு முக்கிய அச்சாரமாக மியன்மார் விளங்குகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிவான பொருளாதார மற்றும் செயலுத்தி ரீதியிலான பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விழையும் இந்தியாவுக்கு,சிஎல்எம்வி எனப்படும் கம்போடியா, லாவோ பிடிஆர், மியன்மார், வியட்நாம் திட்டத்தின் கீழுள்ள நாடுகளை நெருங்க, மியன்மார் முக்கியப் பங்காற்றுகிறது.

பாரம்பரிய வரவேற்பினைத் தொடர்ந்து, மியன்மார் அதிபர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடனான பிரதிநிதிகள் நிலையிலான சந்திப்பில், இருதலைவர்களும் இருதரப்பு, பிராந்திய, உலக விஷயங்களில் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.

இருதரப்பு உறவுகளில் ஒத்துழைப்பை அதிகரிக்குமுகமாக, இந்த உச்சகட்டப் பயணத்தின்போது, இருநாடுகளுக்கும் இடையே, 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மியன்மாரிலுள்ள ரகைன் மாவட்டத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. ரகைன் மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், முரௌக் ஊ நகர மருத்துவமனைக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலை, விதைக் கிடங்குகள் கட்டுமானம், குவா(GWA) நகரக் குடிநீர் விநியோக அமைப்பு, ஐந்து நகரங்களில் சூரிய ஒளிச் சக்தியில் தயாரிக்கப்பட்ட மின் விநியோகம், புதேடௌங் நகரில், கயால்யௌங் – ஓல்ஃபியூ சாலைக் கட்டுமானம், கியூ டௌங் கியா பௌங் சாலைக் கட்டுமானம் ஆகிய திட்டங்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், வடக்கு ரகைன் மாவட்டத்தில், புலம் பெயர்ந்தோருக்காக, முன்னரே கட்டமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியது. தவிர, மெகோங் – கங்கா ஒத்துழைப்பு வழிமுறையின் கீழ், விரைவு மற்றும் உயர் தாக்க சமுதாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

பிராந்தியத் தொடர்புகளுக்கான இந்தியாவின் திட்டங்களுக்கு, மியன்மார் முக்கிய நாடாக விளங்குகிறது. சித்வே துறைமுகம் மற்றும் கலாதான் பல்வழி இடைப் போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. சித்வே துறைமுகம் மற்றும் பலேட்வா உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து முனையம் ஆகியவற்றைப் பராமரிக்க, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு துறைமுக நிர்வாக நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த உச்சமட்ட சந்திப்பின்போது, கலாதான் நெடுஞ்சாலைப் பணியின் இறுதிக்கட்டமான பலேட்வா – ஸோரின்பூய் சாலைக் கட்டுமானத்தை விரைந்து முடிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது. இத்திட்டம், சித்வே துறைமுகத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியுடன் இணைக்கும். 2021 ஆம் ஆண்டுக்குள், முத்தரப்பு நெடுஞ்சாலையின் யார்கியீ பகுதி அமைக்கும் பணி முடிக்கப்படும். முத்தரப்பு நெடுஞ்சாலையில் உள்ள 69 மேம்பாலங்களை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. நவீன ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி ஒன்றை டாமுவில் பகுதி 1 திட்டத்தின் கீழ் கட்டமைத்தல், மோட்டார் வாகன ஒப்பந்தம் குறித்த ஆலோசனைகளை விரைந்து முடித்தல் ஆகியவையும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்றன. மணிப்பூர் மாவட்டத்திலுள்ள இம்ஃபால் மற்றும் மன்டலே நகருக்கு இடையே, ஒருங்கிணைந்த பேருந்துப் போக்குவரத்து வசதியை இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் துவக்க, தனியார் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மியன்மார் தகவல் தொடர்பு நிறுவனம், நவீன வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவை உள்ளிட்ட திறன் வளர்ப்புத் திட்டங்களில் இந்தியா ஈடுபாடு கொண்டுள்ளது.  பகோக்கு மற்றும் மியங்யான் நகரங்களில் இந்தியாவின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள மியன்மார் – இந்தியா தொழிற்பயிற்சி மையங்களில் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்ற்னர். இத்தகைய பயிற்சி மையங்கள், மோனிவா மற்றும் தாடோன் நகரங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன. சின் மாகாணத்தில் மியன்மார் – இந்தியா எல்லை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நாகா சொந்த நிர்வாகப் பகுதி உள்கட்டமைப்பு மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

அண்டை நாடுகளுக்கு முதலிடம் அளிக்கும் கொள்கையை செயலாக்க, ராணுவப் பயிற்சி, கண்காணிப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. மியன்மார் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க இந்திய, மியன்மார் ராணுவம் இணைந்து மேற்கொண்ட கூட்டு செயல்பாடுகள், இருநாடுகளுக்கும் இடையே வலுவான அஸ்திவாரத்தை நல்கியுள்ளது. தகவல் மற்றும் உளவுப் பரிமாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், பயங்கரவாதத் தாக்குதல்களையும், குழுக்களையும் முறியடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு வலு சேர்த்துள்ளது.

ஆசியாவின் துடிப்புமிக்க பொருளாதார நாடுகளுள் ஒன்றாக விளங்கும் மியன்மார், இந்தியாவுக்குப் பல வாய்ப்புக்களை நல்குகிறது. எனினும், இருதரப்பு வர்த்தகம், 175 கோடி டாலர் அளவிலேயே உள்ளது. இணைப்புக்களை மேம்படுத்தல், சந்தை அணுகல், நிதிப் பரிவர்த்தனையில் உதவி, தொழில்களுக்கு இடையேயான தொடர்புகளை எளிமையாக்குதல், பிராந்திய, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆதரவு அளித்தல் ஆகியவை அவசியமாகிறது. எரியாற்றலிலும் இந்தியாவின் முக்கியக் கூட்டாளியாக மியன்மார் விளங்குகிறது. இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மியன்மாரில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவுக்கும், மியன்மாருக்கும் இடையே, வரலாற்று, கலாச்சார, மத ரீதியிலான உறவுகள் பகிரப்படுகின்றன. அதிபர் யூ வின் மிண்ட் அவர்கள், புத்த கயாவிற்கும் ஆக்ராவிற்கும் பயணம் மேற்கொண்டார். இந்தோ-பசிஃபிக் பிராந்திய ஒத்துழைப்பையும் கவனத்தில் கொண்டு, மியன்மாருடனான உறவுகளுக்கு மேலும் வலுசேர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

 

**********************************************************************************