இந்திய, பங்களாதேஷ் இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்ப்பு.

(தெற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன்  ஷ்ரிங்லா அவர்கள், டாக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம், பங்களாதேஷ் நாட்டுடனான இந்தியாவின்  நீடித்த நெருக்கமான உறவுகள் வெளிப்படுகின்றன. இந்த இரு தரப்பு உறவுகள், குறிப்பாக, தற்பொழுது அவாமி கட்சியைச் சார்ந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் தலைமையில், மேலும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது. ஷ்ரிங்லா அவர்கள், டாக்காவில் 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் வரை, பங்களாதேஷ் நாட்டிற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்  என்பதும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அண்மையில் இந்தியாவில் நடந்தேறிய சில நிகழ்வுகளால், தங்கள் நாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையை பங்களாதேஷ் வெளிப்படுத்தியது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் உள்நாட்டு நிகழ்வுகளால் பங்களாதேஷ் நாட்டில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று  உறுதியளித்துள்ளார். இது அதிகாரபூர்வமாக, பங்களாதேஷுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கபந்து  ஷேக்  முஜிபுர் ரஹ்மான்  அவர்களின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்த மாதத்தின் நடுவில்  நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோதி அவர்கள்  பங்களாதேஷுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவே வெளியுறவுச் செயலரின் இந்தப் பயணம் அமைந்தது. ”ஷேக்  முஜிபுர் ரஹ்மான்  அவர்கள்  எங்களுக்கும் தேசியக் கதாநாயகர் தான்”  என்று பிரதமர் மோதி அவர்கள் கூறியுள்ளார். வரும் வாரங்களில், மற்ற பல விஷயங்கள் பற்றியும், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான உறவுகள், கடந்த சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இருநாடுகளும் தங்களுக்கு இடையே இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் இதற்கு மேலும் ஊக்கமளித்துள்ளன.  நில எல்லை ஒப்பந்தம் மற்றும் சர்வதேச நடுவர் மூலம் கடல்வழி எல்லையில் தீர்வு போன்றவை, இவற்றிற்கான இந்தியாவின் அணுகுமுறை குறித்து ஏற்பட்டு வந்த தொடர் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. சரியான எல்லை வரையறைப்பினால், எல்லை கண்காணிப்பு மேம்பட்டு, 2001 ஆம் ஆண்டு பிர்டிவாவில் ஏற்பட்ட சம்பவம் போன்றவை குறைக்கப்பட்டுள்ளன. எனினும், எல்லைப் பகுதியில் சில சமயம் நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள், எல்லையில் நிகழும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் சவாலாக உள்ளதைப் பிரதிபலிக்கின்றன.

2011 ஆம் ஆண்டில், ஜவுளி உள்ளிட்ட மொத்தம் 61 பொருட்களுக்கு இந்தியா வரிவிலக்கு அளித்ததன் விளைவாக, இருதரப்பு வர்த்தகம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.  ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகம்  (EPB) அளித்துள்ள தகவலின்படி, இந்தியாவிற்கான, பங்களாதேஷ் நாட்டின் ஏற்றுமதி, 42.9 சதம் அதிகரித்து, 125 கோடி டாலர் அளவை எட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் 87.32 கோடி டாலர் அளவாக இருந்தது.  பங்களாதேஷ் பொருளாதாரம், ஆண்டொன்றுக்கு  7 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வருவதால், இருதரப்பு வர்த்தகம் மேலும் வளர்ச்சி பெறும்.  எனினும், சில வரியற்ற தடைகள் இதற்கு முட்டுக்கட்ட போடுகின்றன. செயல்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்கள், பிபிஐஎன் எனப்படும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபால்  மோட்டார் வாகன சட்டம், பீம்ஸ்டெக்  மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் மூலம், இருதரப்பு வர்த்தகம் புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.  எரியாற்றல் துறையில் வர்த்தகம் மற்றும்  நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து போன்றவை, இருதரப்பு வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும்.

இந்த மாதம் நிகழவிருக்கும்  பிரதமர் மோதி அவர்களின் பங்களாதேஷ் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு  இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக இந்தியா 50 கோடி டாலர் கடனுதவி  வழங் க முன்வந்துள்ள போதிலும், அதனை செயல்படுத்துவது குறித்து இருநாடுகளும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தக் கடனுதவித் திட்டத்தை செயலாக்கும் தருணம் நெருங்கி விட்டது எனலாம். கடலோரக் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்த 2019 ஆம் வருடம் இருநாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது சம்பந்தமாக மேலும் பேச்சுவார்த்தைகள் இந்தப் பயணத்தின் போது நடைபெறக்கூடும். இருநாடுகளுக்கும் இடையே, சம்ப்ரிதி என்ற பயங்கரவாத எதிர்ப்புத் தொடர் பயிற்சியும், பொதுவான பாதுகாப்பை முன்னிட்டு, ஒருங்கிணைந்த கண்காணிப்பு ரோந்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

750 கோடி டாலர் கடன் உதவித் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது அவசியமாகிறது. அறிக்கைகள் தரும் தகவல்களின்படி, கடந்த 8 வருடங்களில் அளிக்கப்பட்டுள்ள நான்கு கடனுதவிகளில், 51% மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. 51.01 கோடி  டாலர் மதிப்பிலான மூன்று ரயில் திட்டங்களில், 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் வரை,  8.77 கோடி டாலர் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்வதில் பங்களாதேஷ் தரப்பில் மிகவும் காலதாமதம் ஏற்படுவதால், நிதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.  இதனால் சில திட்டங்களில் செலவும் அதிகரித்துள்ளது.

புதிய பேருந்துகள் மற்றும் புகை வண்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் மூலம், மக்களுக்கு இடையேயான தொடர்புகள் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளன. “ அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற இந்திய அரசாங்கத்தின் கொள்கை மூலம், தனிப்பட்ட மருத்துவ விசாக்கள் மற்றும் விசாக்கள் வழங்குவதில் தளர்வு  போன்றவை முக்கிய முன்னேற்றங்கள் ஆகும். இதன் பின்னணியில், இந்திய வெளியுறவுச் செயலர் மேற்கொண்ட டாக்கா பயணம்,  இரு நாடுகளுக்கிடையே  உயர்மட்ட அளவில் ஈடுபாடுகள் தொடர்வதை எடுத்துக்கட்டுவதாக அமைந்துள்ளது.