சிபிஈசி திட்டம் – பாகிஸ்தானின் கடன் சுமை.

(அரசியல் விமரிசகர் எம்.கே.டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்)

சிபிஈசி எனப்படும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் நிறைவு பெறுமேயானால், அது சீனாவிற்கு  மட்டுமே ஒரு வெற்றி ஒப்பந்தமாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.. மிக முக்கியமாக, 6,200 கோடி டாலர் அளவிலான  இந்தத் திட்டத்தின் மூலம், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புகுவது, சீனாவுக்கு எளிதாகும். ஏனெனில், நிலப்பரப்பினால் சூழப்பட்ட சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தையும், பலூசிஸ்தானிலுள்ள குவதார் துறைமுகத்தையும் இத்திட்டம் இணைக்கிறது.

ஆனால் இந்தத் திட்டம் பாகிஸ்தானை எங்கே கொண்டு செல்லும்? என்ற கேள்வியை, சிலகாலமாக, ஆய்வாளர்களும் பாகிஸ்தானிய விமர்சகர்களும் கேட்டு வருகின்றனர். சிபிஈசி  மட்டுமல்லாமல், அதைச் சார்ந்த மற்ற திட்டங்களும், செலவு அதிகரிப்பு மற்றும் கால தாமதங்களை சந்தித்து வருகின்றன. இவற்றுள் பிரம்மாண்டமான நீர் மின்திட்டம், கராச்சியுடன் பெஷாவர்  நகரை இணைக்கும் பெரும் ரயில் பாதைத் திட்டம்  ஆகியவை அடங்கும். பெஷாவர் ரயில்பாதைத் திட்டத்திற்கான செலவு முதலில் 820 கோடி டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்பு அது குறைக்கப்பட்டு 620 கோடி டாலருக்கு முடிவு செய்யப்பட்டது. 200 கோடி டாலர் செலவு மிச்சப்பட்டு விட்டதாகக் கொண்டாடும்  வேளையில், அத்திட்டத்தின் செலவு, உண்மையில் 900 கோடி டாலராக உயரும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முடிவு பெற்றவுடன், இந்த சிபிஈசி  திட்டம், ஒரு லட்சம் கோடி டாலர் அளவிலான, சீனாவின் பிரம்மாண்டத் திட்டமான பி ஆர் ஐ எனப்படும் வளையம் மற்றும் சாலை முன்முயற்சி திட்டத்தின் அங்கமாக மாறும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. சீனாவின் எதிர்கால லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் இந்த பிஆர்ஐ என்பது.  ஆனால் இத்திட்டத்தில் இணைக்கப்படும் சிறு கூட்டாளி நாடுகளுக்கு இத்தகைய பலங்களை அது  நல்குமா என்பது கேள்விக்குறி. பிஆர்ஐ திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் உள்பட, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 8 நாடுகளுக்குமே பெரும் கடன் நெருக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக, வாஷிங்டனில் இருந்து இயங்கும்  சர்வதேச வளர்ச்சி மையம் என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளான இலங்கையும், மாலத்தீவும், சீனாவின் கடன்  வலையில் சிக்கும்  அளவிற்குச் சென்று விட்டதே  இதற்குச் சான்றாகும். இது போன்ற அனுபவங்கள் தெற்கு ஆசியாவில் மட்டும் நடைபெறவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள், சீனாவின் திட்டத்தின் கீழ், எதிர்பாராத அளவிலான கடன்தொல்லையில் மாட்டியுள்ளன. வெளிநாடுகளின் வளர்ச்சிக்கான சீனாவின் அணுகுமுறையே இதற்குக் காரணமாகும். மானியங்கள் அல்லது சலுகைக் கடன்கள் வழங்குவதில் சீனாவிற்கு நம்பிக்கை இல்லை. பிறநாடுகளில், திட்டங்களுக்காக வியாபார அடிப்படையிலேயே கடன் வழங்குகின்றது. கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும் இத்திட்டங்கள், உண்மையிலேயே கடன் வாங்கும் நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகப் பயனுள்ளதாக அமையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, இலங்கையில் சீனாவின் கடன் உதவியுடன் கட்டப்பட்ட மட்டாலா சர்வதேச விமான நிலையத்தைக் குறிப்பிடலாம். பளபளப்புடன் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டாலும், இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவே. இது ஆளில்லா ஊரில் தேனீர்க்கடை திறந்ததற்கு ஒப்பானது.

மேலும், திட்டங்களுக்கு சீனா அளிக்கும் உத்தேசங்கள் வெளிப்படையாக இருப்பதில்லை என்பதோடு அது சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றுவது கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இறுதியில் சீன நிறுவனங்களே இத்திட்டங்களின் மூலம் பெரும்பயன் அடையும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சிபிஈசி  திட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் பாகிஸ்தானுக்கு, சீனாவுடன்  பாதகமான வர்த்தக இருப்பு நிலை ஏற்படுவதோடு, நெருக்கடியிலிருந்து மீள, பிறநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.  தான் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த, சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளை பாகிஸ்தான் அடிக்கடி  தட்ட  வேண்டியுள்ளது.

எப்படிப் பார்த்தாலும், சிபிஈசி திட்டம், பாகிஸ்தானைக் கடன்சுமையில் தள்ளிவிடும் என் உறுதியாகச் சொல்லலாம். சிபிஈசி திட்டத்திற்கான கடனைத் திருப்பிச் செலுத்த, பாகிஸ்தானுக்கு 45 வருடங்கள் தேவைப்படும். எனினும், சர்வதேச மேடையில் தன்னை ஆதரிக்கும் அனைத்துப் பருவ நட்புநாடாக சீனா விளங்குவதால், அதற்கு அளிக்கும் சிறு விலையாகவே இதனைப் பாகிஸ்தான் கருதுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, குவாதார் துறைமுகத்தில்  சீனா  நுழைவதை வெறும்  பொருளாதார ரீதியில் மட்டுமே பார்க்க முடியாது. இதனை சீனாவின்  இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான செயலுத்தியின் அங்கமாகவே பார்க்க வேண்டும். இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் முயற்சியானது, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை, கட்டுப்படுத்துவதற்கான முயற்சியே என்பது கண்கூடு. பாகிஸ்தான், இந்தியாவுடன் சுமுகமான உறவுகளை  வைத்துக் கொள்ளாததால், சிபிஈசி திட்டம் தரும் கடன் ஆபத்தைப் பாகிஸ்தான் பொருட்படுத்தவில்லை.