கொரிய தீபகற்பத்தில் மீண்டும் தலைதூக்கும் இறுக்கம்.

(முன்னாள் இந்திய தூதரக அதிகாரி அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

கடந்த இருவாரங்களில் இரண்டாவது முறையாக, அடையாளம் தெரியாத, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. முன்னதாக, தாம் மேற்கொண்ட நேரடிப் பயிற்சி கண்டனத்துக்கு உள்ளானதை எதிர்த்து, வடகொரியா, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடலில் விழும் வண்ணம், பலவகையான குறைதூர ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தாம் கண்டறிந்ததாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, 50 கி.மீ.உயரத்திற்கும், 200 கி.மீ. தூரத்திற்கும் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் இறுக்கங்களைக் குறைக்கும் நோக்கத்தில், 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இது மீறியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.

ஹனோயில் அதிபர் கிம் அவர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும் இடையே, தோல்வியில் முடிந்த உச்சி மாநாட்டின் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று, தனது ராணுவப் பயிற்சியைத் துவக்கியதாக வடகொரிய அரசு ஊடகம் கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அடையாளம் தெரியாத இரு குறைதூர ஏவுகணைகள், கிழக்குக் கடற்கரையிலுள்ள வோன்சன் நகரிலிருந்து ஏவப்பட்டுள்ளன.

வடகொரியாவின் இந்த ஏவுகணைகள், எதிர்பாராததல்ல என்றும், தென்கொரியாவுடனும், ஜப்பானுடனும் இணைந்து, தொடர்ந்து நிலைமையைத் தாம் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியாவுடன் பேசிய அமெரிக்கா, தூண்டுதலைத் தவிர்க்குமாறும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களின்படி நடந்து கொள்ளுமாறும், அணு ஆயுதங்களை முற்றிலும் அகற்றும் நோக்குடன் மீண்டும் தொடர்ந்த பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும் வரகொரியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வடகொரியா, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தோன்றுகிறது எனக் கூறிய ஜப்பான், அது தமது எல்லைக்குள்ளோ, தனிப்பட்ட பொருளாதாரப் பிராந்திய எல்லைக்குள்ளோ விழவில்லை என்றும் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைகள், ஜப்பானுக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

கடந்த இரண்டரை மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இத்தகைய நடவடிக்கைகளை வடகொரியா மீண்டும் துவக்கியுள்ளது. தேக்கத்தில் சிக்கிய அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, 2019 ஆம் ஆண்டில் 13 முறை ஏவுகணைச் சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. அவை கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளாக இல்லாதிருந்ததால், தன் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், இத்தகைய ஏவுகணைகள், தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள 28,000 அமெரிக்கத் துருப்புக்களுக்கும், தென்கொரியாவிற்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

நிறுத்தப்பட்ட அணுஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க, கடந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே கால அவகாசம் இருப்பதாக அமெரிக்காவுக்கு 2019 ஆம் ஆண்டில் வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இந்த கால எல்லைக்குள் நடைபெறாததைத் தொடர்ந்து, புத்தாண்டுச் செய்தியை அறிவிக்கையில், அணுஆயுதங்களை எதிர்கொள்ளத்தக்க தற்காப்பு நடவடிக்கைகளில், எந்தக் கட்டுப்பாடும் இன்றி, வடகொரியா முழுவீச்சில் இறங்கும் என்று அதிபர் கிம் தெரிவித்தார். செயலுத்தி ரீதியான வலுவுடன் கூடிய புதிய ஆயுதத்தை விரைவில் வெளியிட இருப்பதாக கிம் சூளுரைத்தார். அத்தகைய புதிய ஆயுதம், நவீன, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகவோ, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவத்தக்க பாலிஸ்டிக் ரக ஏவுகணையாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனாலும், தற்போது ஏவப்பட்ட ஏவுகணைகள் அத்தகைய செயலுத்தி ஆயுத வகையில் அடங்காதவையாகும்.

வடகொரியாவின் நடவடிக்கைகள் யாவுமே, அரசியல் ரீதியாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தத் தக்க வகையில் காலம் பார்த்து எடுக்கப்படுபவையாகும். நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கத் தகுந்த வலிமை தமக்கு இருப்பதாக, உள்நாட்டு மக்களுக்கு கிம் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். வெளிநாடுகளிலோ, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவரது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில், தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, அந்நாடுகளுக்கு வடகொரியாவின் திசை திருப்பல் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரமில்லை.

தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட பலதரப்பட்ட பொருளாதாரத் தடைகளை அகற்ற, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் மீது அழுத்தம் கொடுக்க, வடகொரியா விரும்புகிறது. தேர்தலை சந்திக்க இருக்கும் அதிபர் டிரம்ப், தங்களுக்கு சில சலுகைகளை வழங்கலாம் என வடகொரியா எதிர்பார்க்கிறது. தனது தூண்டுதல் நடவடிக்கைகளை மேலும் வடகொரியா தீவிரமாக்காது என நம்பத்தான் முடியும்.

கொரிய தீபகற்பத்திலும், ஜப்பானிய கடல்சார் பிராந்தியத்திலும் ஸ்திரமான, பாதுகாப்பான, அமைதியான நிலை தொடர்வது இந்தியாவுக்கு நன்மை பயக்கும். கடந்த சில ஆண்டுகளாக சீராகச் சென்று கொண்டிருக்கும் இந்தியாவின் இந்தோ பசிஃபிக் செயலுத்தி நடவடிக்கைகளுக்கு இது மிக அவசியமுமாகும்.

**************************************************************************