கச்சா எண்ணெய் விலையில் கடும் போட்டி.

(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

சவூதி அரேபியா, பிரெண்ட் நிறுவன கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக 30 சதவிகிதத்துக்கும் மேலாகக் குறைத்து, அதில் கடும் போட்டியைத் துவக்கி வைத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் வளைகுடா நெருக்கடிக்குப் பின்னர், இந்த அளவிற்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்தது இதுவே முதல்முறையாகும். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து முடிவெடுப்பதில், சவூதி அரேபியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டினால் இந்த விலைக்குறைப்பு நிகழ்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தலைமையிலான பெட்ரோலிய ஏற்றுமதிநாடுகளின் அமைப்பான ஒபெக், கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவல் காரணமாக, மந்தமாகியுள்ள டிமாண்டை சரிக்கட்டும் விதத்தில், நாளொன்றுக்கு 15 லட்சம் பேரல் அளவிற்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க விரும்பியது. ஆனால் இதற்கு ரஷ்யா ஒத்துக்கொள்ளாததால், சவூதி அரேபியா, பிரெண்ட் நிறுவன கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக 30 சதவிகிதத்துக்கும் மேலாகக் குறைத்து, அதில் கடும் போட்டியைத் துவக்கி வைத்துள்ளது. இந்த நூற்றாண்டிலேயே மிகவும் குறைந்த விலை இதுவேயாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவல், நிதிச் சந்தையையும் எரியாற்றல் துறையின் முதலீடுகளையும் பெருமளவில் பாதிக்கத் துவங்கியுள்ளது. சவூதி அரேபியாவைப் போல் மலிவான விலையில் எந்த நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இயலாது. நிதியளவில் லாபம் ஈட்டுவதற்கான மைல்கல், அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் ஒன்றுபோல் இல்லை. இந்த மைல்கல், ஏற்றுமதியாளர்கள் எந்த நிலையில் தங்கள் பட்ஜெட்டை சமன் செய்கிறார்கள் என்பது குறித்தும் சுட்டிக்காட்டுகிறது.

பேரலுக்கு 42 டாலர் என்ற விலையில் தான் ரஷ்யா லாபம் காணத் துவங்குகிறது. அதுவே, சவூதி அராம்கோ நிறுவனத்துக்கு, மேலும் அதிகமாக, பேரலுக்கு 83.60 டாலர் என்ற அளவில் உள்ளது. எனவே தான், பேரலுக்கு 31 டாலர் என்ற பிரெண்ட் நிறுவன எண்ணெய் விலை, நெடுநாள் நீடிக்கக் கூடிய கடும்போட்டியைத் தூண்டியுள்ளது.

இந்த அளவிற்குக் கடுமையான, அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும் பிரெண்ட் நிறுவன எண்ணெய் விலைக் குறைப்பு, உலகப் பொருளாதாரத்தை இறங்குமுகத்திலிருந்து தூக்கி நிறுத்த முடியுமா என்பது நம்முன் எழும் கேள்வி. இதர்கு நேரடியாகப் பதிலளிக்க இயலாது. ஏனெனில், கச்சா எண்ணெய் விலைக்குறைப்பின் தாக்கம், கீழே, நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் வரை பாயுமா என்பதைப் பொறுத்தே இக்கேள்விக்கான பதில் அமையும். எரியாற்றல் துறை முதலீட்டாளர்களிடம் இந்த விலைக்குறைப்பு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் உலகளவில் வளர்ச்சி குன்றும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிக வரிச்சுமை இல்லாமல், விலைக்குறைப்பு நுகர்வோருக்குச் சென்றடைந்தால் மட்டுமே அவர்கள் அனுகூலம் பெற முடியும்.

எண்ணெய் உற்பத்திக்காக கிணறுகள் தோண்டும் நடவடிக்கையும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலால் பாதிப்படையக்கூடும். இதனால் டிமாண்டில் சற்று பின்னடைவு ஏற்படும். இதன் எதிரொலியாக, கடன்சுமையில் வீழ்ந்து, அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் நிறுவனமும் பாதிப்படையும். வரையறைக்கும் கீழான விலைக்குறைப்பினால் பாதிப்படையாத அளவிற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு அரணைக் கொண்டுள்ளனர். எனினும், கச்சா எண்ணெய் நிறுவனங்களில் பங்கு வைத்துள்ளோரிடமிருந்து பங்குச் சந்தை நழுவிச் செல்கிறது.

கச்சா எண்ணெயில் நிகழும் ஒவ்வொரு 10 டாலர் விலைக்குறைப்பும், 0.3 சதவிகிதம் அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியை, எண்ணெய் உற்பத்தி நாடுகளிலிருந்து எண்ணெய் நுகரும் நாடுகளுக்குக் கை மாற்றும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவின் பத்தாண்டுகால பத்திரங்கள், மிகவும் குறைந்த அளவான 2 புள்ளி 56 சதவிகித வட்டியையும், 2030 ஆம் ஆண்டில் முதிர்ச்சி அடையும் சவூதி அரேபிய அரசுப் பத்திரங்கள், 2 புள்ளி 38 சதவிகித வட்டியையும் அளிப்பதால், செயலுத்தியாளர்கள் கவலை கொண்டுள்ளனர். அமெரிக்காவின் எரியாற்றல்துறை வட்டி விகிதமும் 2 புள்ளி 95 சதவிகித அளவில் உள்ளது. கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் கடும் போட்டி, பொருட்கள் மற்றும் நிதிச் சந்தை என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கச்சா எண்ணெயை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் முதன்மை எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அமெரிக்காவின் ஷேல் நிறுவனத்துக்குப் போட்டியாக, சவூதி மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் விலைக்குறைப்பில் ஈடுபடுவதால், இந்தியாவுக்கு நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு நிதியளவில் சாதகமான நிலை ஏற்படும். பிரெண்ட் நிறுவன எண்ணெய் விலையில் ஏற்படும் 20 டாலர் விலைக்குறைப்பினால், இந்தியாவின் நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறை 3000 கோடி டாலர் அளவிற்குக் குறையும். எண்ணெய் விலையில் ஸ்திரமின்மை குறைந்த காலமே நீடிக்கும். இதனால் பெறப்படும் ஆதாயம் அதிகநாள் நிலைக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை.

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம், எண்ணெய் விலையை உயர்ந்த அளவில் நிறுத்தி வைக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் முயன்றன. அதே சமயம், சந்தையில் தனது பங்கை அதிகரித்த அமெரிக்காவின் ஷேல் நிறுவனம், லாபத்தில் திளைத்தது. ரஷ்யாவின் எரியாற்றல் துறை மீது அமெரிக்கா தடை விதித்தது, புவிசார் அரசியலில் கவலைகளை உருவாக்கியது. இந்த விலைக்குறைப்புப் போட்டியின் மூலம், ரஷ்யா, தன்னிச்சையாக, எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலைக்குறைப்பு என்ற வித்தியாசமான செயலுத்தியைக் கையாள முடிவெடுத்தது. இதனால் சவூதி அரேபியா தலைமையிலான ஓபெக் அமைப்பு பெருமளவில் பாதிப்படையக்கூடும்.