கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு – பிரதமர் மோதி அவர்களின் முன்னெடுப்பு.

(ஆல் இண்டியா ரேடியோ இயக்குனர் அமலன்ஜோதி மஜும்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கோவிட் 19 என்ற கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் விடுத்த அழைப்பிற்கு, பாகிஸ்தான் உள்பட, அனைத்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளனர். தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள ஒரு பொதுவான செயலுத்தியைக் கையாள முன்வருமாறு, சார்க் உறுப்புநாடுகளிடம் பிரதமர் மோதி அவர்கள் மேற்கொண்ட இந்த சிறப்புமிக்க ராஜீய முன்னெடுப்பை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த சார்க் அமைப்பிற்குப் புத்துயிர் ஊட்டும் நம்பிக்கையை இந்த முன்னெடுப்பு அளித்துள்ளது. இருப்பினும் தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணர்கள், இதனை அங்கீகரிக்கத் தயங்குகின்றனர். சார்க் உறுப்புநாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இத்தகைய அவசரகால நடவடிக்கையை முன்னிட்டாவது. தங்கள் இறுக்கமான உறவுகளைத் தளர்த்தி, பல்நிலை மேடையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வருவதன் மூலம், இருநாட்டு உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு கிட்டியுள்ளது எனலாம்.

தெற்காசிய மக்கள் நட்புடனும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலுடனும் செயல்பட, சார்க் அமைப்பு ஒரு சிறந்த மேடையை அமைத்துக் கொடுக்கிறது. தெற்காசியாவில் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு, கலாச்சார அபிவிருத்தி ஆகியவை நிகழ சார்க் அமைப்பு குறிக்கோள் கொண்டுள்ளது. இதன் பொருட்டு, தொலைத் தொடர்பு, எரியாற்றல், பருவநிலை மாற்றம், போக்குவரத்து, வறுமை ஒழிப்பு, சுகாதார வசதி, அறிவியல் தொழில்நுட்பம், வர்த்தகம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா போன்ற துறைகளில் இணைந்து செயல்பட, 15 ஆவது சார்க் உச்சிமாநாட்டில் தலைவர்கள் உறுதி பூண்டனர்.

கடந்த மூன்றறை தசாப்தங்களாக, சார்க் அமைப்பின் குறிக்கோளை எட்டுவதிலும், உலகின் சக்தி வாய்ந்த பிராந்திய அமைப்பாக உருவெடுப்பதிலும் உறுப்புநாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளன.

சார்க் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்ற இந்தியா, துவக்கத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் வலுவூட்டி வந்துள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டைநாடுகளுடன் வலுவான உறவுகளை மேம்படுத்த, 2014 ஆம் ஆண்டில் தான் பிரதமராகப் பதவியேற்ற சமயத்திலிருந்தே பிரதமர் மோதி அவர்கள் பெருமளவில் பங்காற்றியுள்ளார். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளின், வலுவான, பயன்மிக்க கூட்டுறவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது, அவரது அரசின் ’அண்டைநாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கை மூலம் வெளிப்படுகிறது. தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வந்த காரணத்தினால், சில சார்க் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, பீம்ஸ்டெக் போன்ற பிற பிராந்திய அமைப்புடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுநோயின் தாக்கம், தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படாதிருக்கும் பொருட்டு, சார்க் உறுப்புநாடுகளுக்கிடையே பிரதமர் எடுத்துள்ள முன்னெடுப்பு, சார்க் அமைப்பின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது என்பதைப் பறைசாற்றுகிறது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியன்று, காணொளி வாயிலாக, சார்க் நாட்டுத் தலைவர்களுடன் உரையாடுகையில், “கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதுவரை, தெற்காசியப் பிராந்தியத்தில் 150 க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டார். இந்நோயை எதிர்கொள்ள உதவும் வகையில், அவசரகால நிதி துவக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு இந்தியா முன்னோடியாக, 1 கோடி டாலர் நிதியளிக்கும் என்று கூறினார். கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ளத் ”தயாராகுவோம், பீதியடையாதிருப்போம்” என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து உறுப்புநாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட  பிரதமர் மோதி அவர்கள் விடுத்த அழைப்பை சார்க் தலைவர்கள் அங்கீகரித்ததை அவர்கள் அளித்த அறிக்கைகள் பிரதிபலித்தன. நேபாளப் பிரதமர் கே பி ஷர்மா ஓலி அவர்கள், சார்க் உறுப்புநாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம், வலுவான கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் உருவாகும் என்று கூறினார்.

உலக மக்கள்தொகையில் 180 கோடி பேரைத் தன்னகத்தே கொண்டுள்ள தெற்காசியப் பிராந்தியத்தில் 40 சதவிகிதம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். தெற்காசியப் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான இந்தியாவின் முன்னெடுப்புக்களால், சார்க் நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் பல கடினமான பிராந்தியப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயன்படும் வகையில் விரிவாகும் என்றால் அது மிகையல்ல.