கொரோனா வைரஸ் தொற்றுநோய் கோவிட்-19  விடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் சார்க் பிராந்தியம்.

(தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் : த.க.தமிழ்பாரதன்)

உலக சுகாதார நிறுவனத்தால் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைக் கூட்டாக உருவாக்க சார்க் தலைவர்களின் காணொளி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நடத்தினார். இது ஒரு தனித்துவமான முன்னெடுப்பாகும். இது தெற்காசிய பிராந்தியத்தின் உடனடி கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்டவை என்பதால், வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உண்மையானது. அதற்கு இணையாக, பரவலை எதிர்த்துப் போராடுவதும் கடினமானது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், உலகளவில் 7000 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த புதிய வகையான நோய்த் தொற்று வைரஸ் கொரோனா, பல நாடுகளிலும் ஏற்படுத்திய தாக்கங்களோ பலப்பல. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பொது இடங்கள் மூடப்பட்டன. குடிமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். சீனா,  இத்தாலி,  ஈரான் போன்ற மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த தனது குடிமக்களையும், வங்கதேசம் மற்றும் மாலத்தீவு குடிமக்களையும் இந்தியா வெளியேற்றியுள்ளது. இந்தியா தனது விமான நிலையங்களில் கடும் சோதனை செய்து வருகிறது. மேலும், வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை, இதற்கென ஏற்படுத்தப்பட்ட பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தி வருகிறது.

உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தெற்காசியா குறைவான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கண்டுள்ளது. இந்தியாவில் 100 க்கும் மேற்பட்டவர்கள்  நோய் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 55, மாலத்தீவு 8, ஆப்கானிஸ்தான் 7, இலங்கை 3, பங்களாதேஷ் 2, நேபாளம் மற்றும் பூட்டான் தலா ஒன்று என, நாடுகள் நோய் பாதிப்பு எண்ணிக்கையை அறிவித்தன. இலங்கை மற்றும் மாலத்தீவைத் தவிர, பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகள், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள உலகளாவிய நோய் சுமை அறிக்கையின்படி, குறைந்த தர வரிசையிலேயே உள்ளன. எனவே, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒவ்வொரு நாடும் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. அனைத்து நாடுகளுக்கும் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் பொருளாதாரத் திறன் இல்லாமல் இருக்கலாம் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்மொழிந்த கோவிட் -19 நிதி அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாகும். பிராந்திய நிதியைத் தொடங்குவதில் முன்னோடியாக, இந்தியா ஒரு கோடி டாலர் பங்களிப்பை அறிவித்தது. இந்த நிதிக்குப் பங்களிப்பது, பிராந்திய நாடுகளின் தன்னிச்சையான முடிவுகளின்படியே இருக்கும். உடனடி நடவடிக்கைகளின் செலவை ஈடுசெய்ய உறுப்பு நாடுகள் இதைப் பயன்படுத்தலாம். சார்க் பேரழிவு மேலாண்மை மையத்தின் தற்போதைய நெறிமுறைகளைப் பின்பற்றி, சார்க் நாடுகளுக்கிடையிலான பொதுவான தொற்றுநோய்க்கெதிரான நெறிமுறைகளை உருவாக்கி, எல்லைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் செயல்படுத்த இந்தியா முன்மொழிந்தது.

காணொளி மாநாட்டின் அறிவிப்பை சார்க்கின் அனைத்து உறுப்பு நாடுகளும் வரவேற்றன. பாகிஸ்தான் பிரதமரைத் தவிர, பிற உறுப்புநாடுகளின் தலைவர்கள் இந்தக் காணொளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். தனக்குப் பதிலாக, இந்தக் காணொளியில் பங்கு கொள்ள பாகிஸ்தான் பிரதமர் தனது சிறப்பு சுகாதார உதவியாளரை நியமித்தார்.  தொற்றுநோயைக் கையாள்வதில் தங்கள் நாடுகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளையும் தலைவர்கள் முன்மொழிந்தனர்.

இவ்வுணர்வை எதிரொலித்த மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலி அவர்கள், இந்தத் தொற்றுநோயை எதிர்த்து எந்த நாடும் தனித்துப் போராட முடியாது என்று கூறினார். சோதனை செய்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான உள்கட்டமைப்பு ஆகியவை குறித்த பொருளாதாரச் சவால்களை வலியுறுத்தி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ பேசுகையில், கோவிட் -19 முன்வைக்கும் சவாலை எதிர்கொள்ள, அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானின் அதிபர் டாக்டர் அஷ்ரப் கானி அவர்கள், டெலி மருத்துவத்திற்கான பொதுக் கட்டமைப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் எல்லைகளை மூடுவது நிலத்தால் சூழப்பட்ட சில நாடுகளுக்கு ஒரு தீர்வாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான், நிகழ் நேரத்தின் நோய்ப்பரவல் குறித்த தரவுகளைப் பரிமாறிக் கொள்ள முன்மொழிந்தது. மேலும், தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது. தொற்றுநோயைக் கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க, சார்க் சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் காணொளி மாநாடுகளை நடத்த, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் முன்மொழிந்தார். கோவிட்-19 ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு, கூட்டாகப் பணியாற்றுவதை வலியுறுத்திய நேபாளமும், பூட்டானும், அதற்கான இந்தியாவின் திட்டத்தை வரவேற்றன.

காணொளி மாநாட்டில் பங்கேற்க சார்க் தலைவர்களை இந்தியா அழைத்தது, பிராந்தியத்தின் பிற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அவர்களின் முதன்மைத் தொடர்புகளைக் கண்டறிய, இந்தியா ஏற்கனவே ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு போர்ட்டலை (ஐடிஎஸ்பி) நிறுவியுள்ளது.  கோவிட்-19 பாதிக்கப்பட்ட மக்களின் தடப் பதிவுகளைக்  கண்காணிக்க  உதவும் இந்த பொது ஆராய்ச்சி தள மென்பொருளை சார்க் பிராந்தியத்தின் பிற நாடுகளுடன்  பகிர்ந்து கொள்ள இந்தியா முன்வந்தது. இந்தியப் பிரதமரால் முன்மொழியப்பட்ட இந்த உடனடி காணொளி மாநாடும், அதற்கு சார்க் தலைவர்கள் அளித்த உற்சாகமான வரவேற்பும், சுகாதார நெருக்கடியை கூட்டாகக் கையாள்வதில் பிராந்தியத்தின்  பங்களிப்பு ஒரு முக்கியக் காரணியாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.