கொரொனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இந்தியா.

 (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு மூத்த நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

கொரொனா தொற்றுப் பரவலை ஒரு சர்வதேசக் கொள்ளை நோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் 7500-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அனேகமாக எல்லா நாடுகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில், நெருக்கடி நிர்வாகத்தில் இந்தியாவுக்குள்ள தலைமைப் பண்பு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வேகமும் விவேகமும் ஒருங்கிணைந்த இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியர்களை வெளியேற்றி மீட்டுக் கொண்டு வருவதிலும், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதிலும் இந்தியா காட்டிய வேகம் மிகவும் முக்கிய காரணியாகும். மனித நேய அடிப்படையில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கவும் இந்தியா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்த விஷயத்தில் இந்தியா அசுர வேகத்தில் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு மிக அண்டை நாடாகவும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருந்தும் கூட 120 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்தியாவின் துரித செயல்பாட்டுக்கு சான்றாகும்.

சார்க் நாடுகளின் தலைவர்களுடன்  காணொலிக் காட்சி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஜனவரி மாத மத்தியிலிருந்தே போர்க்கால அடிப்படையில் இந்தியா, இந்த நோய் பரவுவதைத் தடுக்க, தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதை நினைவூட்டினார். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட தெற்காசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடுகளின் எல்லைகளை அறியாத இந்த நோய்களை எதிர்த்து இணைந்து  போராட, ஒரு கோடி டாலர் உதவித் தொகையை அறிவித்துள்ளது இந்தியா.

சமுதாயக் கண்காணிப்பும் பரிசோதனையும் இந்தியாவில் இந்தத் தொற்றுப் பரவலைப்  பெருமளவில் தடுக்க உதவியுள்ளன. தொற்றைப் பரவச் செய்யக்கூடியவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்காணித்தல், தனிமைப் படுத்துதல் போன்ற மேலாண்மையில் இந்திய சுகாதாரத் துறையினரின் செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. இத்தகைய தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, தகவல் தொடர்பு மிக முக்கியப் பங்களிக்கும் நிலையில், இதற்கான பிரதமரின் முன்னெடுப்பு  குறிப்பிடத்தக்கது. மக்கள் பீதியடையாமலும், வதந்திகளை நம்பாமலும் இருப்பது உலக அளவில்  வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது..

இந்தக் கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் தீவிர முயற்சிகளை உலக சுகாதார மையம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. பிரதமர், அமைச்சரவைச் செயலர், மத்திய மற்றும் மாநில அரசு இயந்திரங்கள் ஆகிய அனைத்து நிர்வாக இயந்திரங்களும் முழுத் திறமையுடன் செயல்படுவதாகப் பாராட்டியுள்ளது.

அரசுமுறை, தூதரக, ஐ நா சார் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பானவை தவிர மற்ற அனைத்து விசாக்களையும் மார்ச் 13 முதல் இந்தியா ரத்து செய்தது. பிப்ரவரி 14க்குப் பிறகு  சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளுக்கும் 14 நாள் தனிமைப்படுத்துதலைக் கட்டாயமாக்கியது இந்திய அரசு. இந்த வைரஸ் பற்றிய தகவல் பரவியதும் உடனடியாக சீனாவுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் இந்தியா ரத்து செய்தது ஒரு துணிச்சலான முடிவாகும்.

விமான நிலையங்களிலும் நேபாள, பூட்டான் எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பையும், பரிசோதனையையும் மேற்கொண்டது மிகப் பெரிய பலனை அளித்தது. ஐடிஎஸ்பி (Integrated Disease Surveillanve Portal, IDSP), என்ற ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு தளம், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதில் மிகப்பெரிய பங்களித்திருப்பதாக சார்க் தலைவர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த ஐடிஎஸ்பி மென்பொருளை சார்க் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார்.

‘தயாராயிருப்போம், ஆனால் பீதியடையாதிருப்போம்’ என்பது, இந்தியாவில் கொரொனாவை எதிர்க்கும் மந்திரமாக அறியப்பட்டுள்ளது. தனிமை மையங்கள், சோதனை மையங்கள் ஆகியவற்றை விரைவில் அமைத்தல், சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைந்த பங்களிப்பை உறுதி செய்தல்  ஆகியவை இந்தியாவில் இதைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியுள்ளன.  மாநிலத்தின் கட்டுப்பாட்டில் சுகாதாரத் துறை இருந்த போதிலும், இந்தியா முழுவதும் மாநில எல்லைகளைத் தாண்டிய ஒருங்கிணைந்த செயல்பாடு, நாட்டில் இந்த நோயைப் பரவாமல் தடுப்பதை உறுதி செய்துள்ளது.

மக்களும் சுய கட்டுப்பாட்டுடனும் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு  வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கி வருவது  மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.

இந்த கோவிட் 19 பரவல் குறித்து எந்த நாட்டிடமும் தற்போதைக்குத் தீர்வில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. நாட்டின் நீண்ட கடற்கரையையும் உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் தனது மக்களையும் கருத்தில் கொண்டுள்ள இந்தியா, இந்த உயிர்கொல்லி வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பரிசோதனைக்குட்படுத்தப்படாமல் கப்பல்கள்  துறைமுகங்களை அடைய அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தகைய உறுதிமிக்க, தொடர்ந்த செயல்பாட்டால், இந்தியா கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.