அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான சச்சரவில் சிக்கித் தவிக்கும் ஈராக்.

(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

உள்நாட்டுப் பிரிவினைகளாலும், வெளிநாட்டுத் தலையீடுகளாலும் வெகுநாட்களாக ஈராக் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையடுத்து, மக்களிடையே உருவான நம்பிக்கையும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டு, முதலாளித்துவத்துக்கு அதிக முக்கியத்துவமும் அளித்த ஈராக் அரசின் திறனற்ற செயல்பாடுகளால், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை உருவாயிற்று. அரசியல் கட்சிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகளால் அரசு அமைப்பதிலும், நிர்வாகத்திலும் தேக்கநிலை ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் ஈரானின் அரசியல், ராணுவத் தலையீட்டால், உள்நாட்டுப் பிரிவினைகள் தலைவிரித்தாடின. ஊழல், முதலாளித்துவத்துக்கு சாதகாமான போக்கு, நிர்வாகத்தில் பொறுப்பின்மை ஆகியவற்றிற்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை அளிக்கக் கோரியும், வெளிநாடுகளின் தலையீடுகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கோரியும் ஈராக் மக்கள் நாடு முழுவதிலும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், கதையிப் ஹெஜ்புல்லா போன்ற, ஈரானின் ஆதரவுடன் இயங்கும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களாலும் பல போராளிகள் மாண்டதையடுத்து, நிலைமை மேலும் தீவிரமைடந்தது. கிளர்ச்சியாளர் குழு, அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேற வெண்டுமென்று எதிர் போராட்டத்தில் குதித்தனர். அமெரிக்கத் துருப்புக்கள் அடிக்கடி பயன்படுத்தும் கிர்குக் ராணுவத் தளத்தின் மீது, இக்குழு, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவத்திற்காகப் பணி புரியும் ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக, இருநாட்கள் கழித்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், கதையிப் ஹெஜ்புல்லா குழுவைச் சார்ந்த பல தலைவர்களும், கிளர்ச்சியாளர்களும், ஈராக்கிலும், சிரியாவிலும் கொல்லப்பட்டனர். ஈராக்கிலுள்ள அக்குழுவின் ஆயுதக் கிடங்குகள் சிலவும் தகர்க்கப்பட்டன.

இத்தகைய எதிரெதிர்த் தாக்குதல்களால் நிலைமை மிகவும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 31 ஆம் தேதியன்று, அமெரிக்கத் தூதரகத்தின் முன், பாப்புலர் மொபிலைசேஷன் ஃப்ரண்ட் என்ற பிரபல அணி திரட்டல் அமைப்பு முற்றுகையிட்டு, தூதரகக் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைய முயற்சி செய்தது. ஜனவரி 2 ஆம் தேதியன்று, பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே தலைவர்களின் அணிவகுப்பின்மீது,  ஆளில்லா விமானத்தின் மூலம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலில், கதையிப் ஹெஜ்புல்லா குழுவின் தலைவர் அபு மஹிதி அல் முஹாண்டிஸ் மற்றும் ஈரானின் சிறப்பு குட்ஸ் புரட்சிப்படையின் தளபதி காசிம் சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பெரும்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு, அதில் சிக்கி ஈராக் முழுவதுமாக பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈராக்கிலுள்ள சில அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நிலைமை மேலும் தீவிரமாவதைத் தடுக்கும் பொருட்டு, இருதரப்பினரும் அடக்கி வாசித்தன. ஆனால், மீண்டும் சர்ச்சை தலைதூக்கியது. அமெரிக்காவின் தலைமையிலான துருப்புக்களின் முகாம்கள் மீது, வடக்கு பாக்தாதில், கதையிப் ஹெஜ்புல்லா நடத்திய தாக்குதலில், இரண்டு அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் ஒரு பிரிட்டிஷ் வீர்ர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடியாக, கதையிப் ஹெஜ்புல்லா குழுவின் ஆயுதக் கிடங்குகளாகக் கருதப்பட்ட ஐந்து இடங்களில், ஒரே சமயத்தில் அமெரிக்கா அதிரடித் தாக்குதலை நடத்தியது. கதையிப் ஹெஜ்புல்லா குழுவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்கா இத்தாக்குதலை மேற்கொண்டது.

இதனால், ஈராக்கினுள், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே, நீண்டகால மறைமுகப் போர் தொடரும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இவ்வாறு நிலைமை மேலும் தீவிரமடைந்தால், அதிகளவில் பாதிக்கப்படப் போவது ஈராக் தான் என்பது கண்கூடு.

ஈராக்கில் செயல்படும் அனைத்துப் பிரிவினரும், கட்டுப்பாட்டுடன் இருந்து, அமைதியை நிலைநாட்டி, நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. ஈராக்குடன் இந்தியாவுக்கு உள்ள உறவுகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை எண்ணி, இந்தியா ஈராக்கில் அமைதி, ஸ்திரத்தன்மை, நாட்டின் மறுகட்டமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஈரானின் படைத் தளபதி ஜெனெரல் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இறுக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும், நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்றும் இந்தியா தனது கவலைகளைத் தெரியப்படுத்தியது. ஈராக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்புவது, அப்பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்குமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியா கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் இறுக்கத்தால், ஈராக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்நாடுகளுக்கு இடையிலான போரில் சிக்குண்டு ஈராக் பெருமளவில் பாதிக்கப்படையக் கூடிய அபாயம் உள்ளது. இந்நிலையில், ஈராக்கில் செயல்படும் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களை அடக்கி, அதன்மூலம், எரிகின்ற தீயில் எண்ணெய் இடப்படுவதை ஈராக் தலைவர்கள் தடுத்து நிறுத்தப் பாடுபட வேண்டும்.