கொரோனா தொற்றுநோயை வெல்ல சிறந்த ஆயுதம், நாட்டு மக்களின் உறுதியே – பிரதமர் திரு நரேந்திர மோதி.

(ஆல் இண்டியா ரேடியோ இயக்குனர் அமலன்ஜோதி மஜும்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

கொரோனா  வைரஸ்  நோய் பரவாமல் தடுக்க,  மிகவும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேற்று மாலை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி, மற்றும் வானொலி மூலம் அளித்த உரையின்போது கேட்டுக்கொண்டார்.  கொரோனா  வைரஸ்  நோய் நம்மைப் பாதிக்காது என்று  மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்  கொண்டார். உலகம் முழுவதும் பரவியுள்ள  மிகவும் கொடுமையான, பேரழிவைத் தரக்கூடிய இந்த நோயானது, இந்தியாவையும் வந்தடைந்துள்ளது  என்றும், அதை நம்மால் புறக்கணித்துவிட முடியாது என்றும் அவர்  எடுத்துரைத்தார். கடந்த இரண்டு மாத காலமாக, இந்தியாவின் 130 கோடி மக்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்  கொண்டு, உறுதியுடன் போராடி வருகின்றனர் என்று கூறிய பிரதமர், இந்தியாவில் மிகக்குறைவான அளவிலேயே இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது  என்பதால், இந்நோய் இந்தியாவில் மேலும் தீவிரமடையாது என்று தப்புக் கணக்குப் போட்டு அசட்டையாக இருந்துவிட வேண்டாம்  என்று எச்சரித்துள்ளார்.

இந்த நோயால்  மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில், ஆரம்ப கட்டத்திற்குப்  பின்னர், நோயின் தீவிரம் மிகவேகமாகப் பரவியுள்ளது  என்று தகவல்கள் மூலம் தெரிய வருகிறது என்று பிரதமர் கூறினார். ஆகையால் “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் சரியான நேரத்தில், முன்னெச்சரிக்கையாக, நோய் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தனிமைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிய நாடுகள், இந்த வைரஸ்  நோய் பரவுவதை மற்ற நாடுகளைவிட  சிறப்பாகத் தடுத்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள,  நாடு முற்றிலும் தயாராக உள்ளது” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இருப்பினும், உலகம் முழுவதும் பரவி  வரும் இந்த வைரஸ் நோயுடன் போராட அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தவிர, நாட்டின் 130 கோடி மக்களும் மன உறுதியுடன் இந்த உலகளாவிய தொற்று நோயை எதிர்கொண்டு போரிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். “ஆபத்தான  இந்த வைரஸ் நோயைக் குணப்படுத்த எந்தவித மருந்தும் இதுவரை உபயோகத்திற்கு வராத நிலையில், கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலமே இதை நாம் எதிர்கொள்ள முடியும்.  நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த நோயால் தானும் பாதிக்கப்படாமல், மற்றவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் ஆரோக்கியத்துடன் இருக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.  நம்மை நாமே தன்னிச்சையாகத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமாகவே இதை நாம் அடைய முடியும். வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  “பொதுமக்கள் ஊரடங்கு”  நிகழ்விற்கு  ஒத்துழைப்பு அளித்து, மிகவும் அத்தியாவசியத்தைத் தவிர, வேறு எதற்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்”  என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  அப்பொழுது பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதோடு, அனைத்து சமூக செயல்பாடுகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த சில வாரங்களாக, மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த கோவிட் 19 வைரஸ்  நோய் நாட்டில் பரவாமல் இருக்க,   அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாப்புடன் வைத்துள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பயணக் கட்டுப்பாடுகள், கல்வி அமைப்புகள் அனைத்திற்கும் விடுமுறை அளித்தது, தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து பணி செய்வது, வணிக வளாகங்கள், பெரும் உணவுக் கூடங்கள் மற்றும் திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடுவது, குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது, அத்தியாவசிய சேவை தவிர, பிற பணிகளுக்காக மக்கள் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பது  போன்ற நடவடிக்கைகள் இவற்றுள் அடங்கும்.

கோவிட்  19 வைரஸ் நோய் பரவுவதில் மிக முக்கியமான கட்டமான மூன்றாவது கட்டத்தில் இந்தியா தற்போது உள்ளது.  இந்தக் கட்டத்தில் சமூகத் தொடர்புகள் மூலமாக காட்டுத் தீ போல இந்த வைரஸ்  நோய் பரவும் அபாயம் உள்ளதால், சமூக தனிமைப்படுத்துதல்  மட்டுமே  இந்தப் பிரச்சனைக்கு  ஒரே தீர்வாக அமையும். அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து, முழுமனதுடன் ஈடுபட்டால்தான் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்  என்பதை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரபலமான தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நன்கு அறிவார். வீட்டுத் தொழிலாளர்கள் உள்பட, மிகக் குறைவாக ஊதியம் வாங்கும்  அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் பணிக்கு வர இயலாமல் கடுமையாகப் பாதிப்படையக் கூடும். எனவே, அவர்களுக்கு உரிய  ஊதியத்தைக் குறைக்காமல் முழு ஊதியத்தையும் மனிதாபிமானத்துடன் வழங்க  வேண்டும் என்று முதலாளிகளை அவர் கேட்டுக்  கொண்டார். தவிர, இந்த நோய்ப் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்ளவும், மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உயர்மட்ட பொருளாதார எதிர்நடவடிக்கைப் பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டார்.

சுகாதார நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் வரும் நாட்களில் எதிர்கொள்ளவிருக்கும் வேலைச்சுமையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான மருத்துவ சோதனை மற்றும் அவசரம் அல்லாத மருத்துவ சிகிச்சை போன்றவற்றைப் பொதுமக்கள் ஒத்திவைக்க  பிரதமர் மோதி அவர்கள் கேட்டுக்  கொண்டார்.  தனது சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், இந்த இக்கட்டான தேசிய நெருக்கடி நேரத்தில் இரவு பகல் பாராது, அயராது பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அனைவருக்கும்  புகழ்மாலை சூட்டிய பிரதமர்,  நாட்டு மக்கள் அனைவரும், திரைமறைவில் இருந்து சீரிய பணியாற்றி வரும் இந்தக் கதாநாயகர்களைப் பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று  கேட்டுக்  கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தியா, இப்போராட்டத்தில் வெற்றி பெறுவது மிக முக்கியமாக உள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் தமது எழுச்சி மிக்க உரையின் மூலம், நாட்டு மக்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

_____________________